மேற்ப்படி!! மேற்ப்படி!!


தொடர்ச்சியாக செல்போனில் உரையாடிவிட்டு, இன்று அவளை நேரில் சந்திக்க போவது கிளர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது குமாருக்கு. "இன்னைக்கு போயா இப்படி மழை அடிச்சி ஊத்தணும்" கொட்டித் தீர்க்கும் மழையை நொந்து கொண்டான் குமார். மழையில நனஞ்சிகிட்டே அவள முதல்ல பாக்குறது கௌதம் மேனன் பட ரொமாண்டிக் சீன் மாதிரி இருக்கப்போவதாக கற்பனையில் சிறகடித்துக் கொண்டே, அவள் வருவதாக சொன்ன ஐஸ்க்ரீம் பார்லருக்கு வண்டியினை விரட்டிக் கொண்டிருந்தான்.

குமார் 29 வயதான இளைஞன், வேலைமாற்றலாகி திருச்சி வந்திருந்தான். நகரத்தின் நடுவில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். ஆறுமாத திருச்சி வாசம். அறையில் வயதில் மூத்த இரு நண்பர்களும் நகரத்தை பற்றியும், இன்னபிற பேச்சுலர் சமாச்சாரங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தார்கள் ஆறுமதமானபோதும். போதும் என்று சொன்னாலும் விட மாட்டார்கள் என்பது விளங்கியதால் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வரலாம் என்று அருகிலிருந்த மெஸ்ஸுக்கு போகையில்தான் அவளை முதன் முதலாகப் பார்த்தான். அது ஒரு மார்கழி மாதம். தமிழ் சினிமாவில் வரும் ஹீரோயின் இன்ட்ரோ காட்சி மாதிரி. ஒரு வளையல் கடை, தலைக்கு மேல் ஒளிரும் குண்டு பல்பு வெளிச்சத்தில் கொஞ்சம் சத்தமாக பேரம் பேசிக்கொண்டிருந்த அவளது தனித்த சத்தம் கேட்டு ஏதேட்ச்சையாக இவன் திரும்பிப் பார்த்தான். குண்டு பல்பு வெளிச்சத்தில் குமரி..! அட இது போதாத நம்ம குமாருக்கு!.ஏதோ ஓன்று இவனில் களைய கொஞ்ச நேரம் அங்கே நின்று ஆளை முழுங்கி அசை போட்டுக்கொண்டே நகர்ந்து போயிருந்தான். இரவு முழுதும் வழக்கம் போல் கனவு...மேற்ப்படி!! மேற்ப்படி!!

புது இடம், புது வேலை நிமித்த சவால்கள், நாட்கள் கொஞ்சம் தேய்ந்து போயிருந்தன. அவள் நினைவும் கூட. ஏதோ ஒரு வியாழக்கிழமை பேரூந்து நிலையம் வழியாக டீக்கடையில் ஒலித்த, உள்புகுந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டே வருகையில் மாலைநேர சூரியன் தலைக்குப் பின் தெரிய கண்டான் அவளை மறுபடியும்.. இரெண்டாம் முறையாக..மறுபடியும் மனசு பறக்க, கௌதம் மேனன் படக் காதல் காட்சி!!!
இந்த முறை தள்ளிநின்று பார்த்து போவது வேலைக்காகாது என்று முடிவு செய்து அவள் காத்திருந்த பேரூந்து நிறுத்தம் அருகிலிருந்த தினசரிக் கடையில் நின்று கொண்டு ஓரக்கண்ணால் முதலிலும் இரண்டு கண்ணால் பிறகும் கவனிக்கத் தொடங்கினான் அவளை.

கொஞ்சம் குள்ள உருவம், மாநிறம், நேர்த்தியான உடை, கண்களில் உயர்ரக கண்ணாடி தூர நின்று பார்க்கையில் கௌதம் மேனன் பட நாயகியாய் அன்று தெரிந்தவள் அருகாமையில் இன்று பாரதிராஜா பட நாயகி போலிருந்தது கொஞ்சம் வருத்தமாயிருந்தது நம்ம குமாருக்கு. இருந்தும் தான் சிம்பு போல் இல்லாததால் சாந்தப்பட்டுக் கொண்டான். தனது கனவு தேவதைக்கு கிட்டக் கூட வராத இந்த பொண்ணுமேல எப்படிடா குமாரு ஒனக்கு ஈர்ப்பு வந்தது என தன்னைத்தான சுயகேள்வி கேட்கவும், அவள் போக வேண்டிய பேரூந்து வரவும் சரியாயிருந்தது.

தேவதை போயாச்சு. வேலையைப் பார்ப்போம் என்று அறைக்கு வந்தவன்
ஊரவைத்துவிட்டுப் போயிருந்த துணியினை துவைக்க ஆரம்பித்தான். துணிகள் வெளுத்து மனது காய்ந்து கொண்டிருந்தது. இன்று இரவு எப்படியும் ஒரு ப்ளான் பண்ணனும். மொதல்ல அந்தப் பொண்ண பாலோ பண்ணி விவரம் எல்லாம் தெரிஞ்சுக்கணும். பிரச்சனை பெருசா வராத பேக்கிரவுண்டா இருந்தா லவ் பண்ணவேண்டியதுதான் என முடிவு பண்ணிக்கொண்டான்.

மறுநாள் முதல் தொடர்ந்து ஒருவாரம் அவளைத் தொடர்ந்ததில் சில பல விசயங்களை தெரிந்துகொண்டான். பள்ளியில் ஆசிரியை, திருச்சியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏரியாவில் வீடு. ஒரேயொரு பொண்ணுதான் வீட்ல, நல்ல வசதி, இன்னும் கொஞ்சம்..

அன்னைக்கு எப்பிடியாவது இன்ட்ரோ ஆயிடனும்ன்னு முடிவு பண்ணி வழக்கமான பேரூந்து நிலைய தினசரி கடையில் முன்னதாகவே போய் நின்று கொண்டான். வழக்கமான நேரத்தில் அவளும் வந்தாள். கொஞ்சம் கிட்ட போய் நின்று கொண்டே , வழக்கமான தமிழ் சினிமா மாதிரி இல்லாமல், தன்னை அறிமுகம் செய்து கொண்டு ஆரம்பத்திலிருந்து சொல்லி முடித்தான். அந்த பொண்ணுக்கு ஆச்சர்யம், பேரூந்து நிலையத்தில் பதில் பேச யோசித்துக் கொண்டு, இவன் செல் நம்பரை கேட்டு வங்கிக் கொண்டாள்.மறுநாள் ஆரம்பித்தது எஸ்.எம்.எஸ் இல் உரையாடல். ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை குமாருக்கு. தொடர்ந்து பரஸ்பரம் அறிந்துகொண்டு, புரிந்து கொண்டார்கள். தொடர்ந்த உரையாடல்கள் இப்போது வந்திருக்கும் இடம்தான் இந்த ஐஸ்கிரீம் பார்லர் சந்திப்பு மேட்டர்.

மழையில் தொப்பலாக நனைந்து அரைமணி நேரம் முன்னதாகவே குமார் ஐஸ்கிரீம் பார்லருக்கு வந்து சேர்ந்திருந்தான். இன்றைக்கு எப்படியாவது நம்ம மனசை சொல்லிவிட வேண்டும் எனத் முடிவு செய்து கொண்டான். தொப்பலாக நனைந்து, ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கசாட்டா ஐஸ்கிரீம் சொல்லிவிட்டுக் காத்திருந்தான். அவளும் வந்து சேர்ந்தாள். தலையினை நனைத்த மழையினை உதறிக்கொண்டே அவள் நுழைவதைப் பார்க்கையிலே குமாருக்கு குளிர் மறந்து, கூதுகலமாக இருந்தது. அப்புறம் என்ன, வழக்கமான பேச்சு, காதல், மேற்ப்படி, மேற்ப்படி!!!

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன். குமாருக்கும் அவளுக்கும் ஏற்கனவே தனித்தனியே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.! 


Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔