பெய்யெனப் பெய்யும் மழை
காரோடும் வீதிகளில்
கணமற்ற படகுகளும் பயணித்தல்
காணக்கிடைக்காத
கண்கொள்ளாக் காட்சிதான்!
தொட்டிவைத்து
மீன் வளர்த்த வீடே
மீன்களுக்கு தொட்டியானது கூட
ரசிக்க கூடியதுதான்!
வறண்ட ஆற்றில்
நிறைந்து ஓடும் வெள்ளம்
வரலாற்று அவசியந்தான்!
மின்சாரம் பொய்த்த இரவில்
சம்சாரம் புலம்ப
அகல் விளக்கின் ஒளியில்
அண்ணம் உண்ணுதல் கூட
அழகுதான்!
குடிநீரையும் கழிவு நீரையும்
கலந்து குடிப்பது
மலங்கழிக்க இடமின்றி
மழங்க விழிப்பது
நேற்று நிலத்தில்
கட்டிய வீட்டுக்கு
நீந்திச் செல்வது
கனவு இல்லம்
கரையப் பார்ப்பது
ஆயுசு உழைப்பில்
சேர்த்த செல்வம்
அழியக் காண்பது
பொதுநலமற்று
சுயநலத்தோடு
அடிமனதையும் அரசுகளையும்
தொடர்ந்து வைத்திருக்கும்
இயற்கையை அழிக்கிற
நம் பொருட்டுதானெனில்
பெய்யெனப் பெய்யும் மழையும்
பேரழிவும் அழகுதான்
அவசியந்தான் - நம் .
அறிவுக்கு எட்டுமட்டும்!
Comments
Post a Comment