அரை ட்ரவுசர் போட்ட அப்பத்தா!!!
புராண, இதிகாசங்களின் படி சொல்லவேண்டுமானால் கலியுகத்தில் இருக்கிறோம். கொஞ்சம் நவீனமாக சொல்ல வேண்டுமென்றால் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். செல்போன், ஐ பேட், லேப்டாப், என ஏதோவொன்று குடும்ப உறுப்பினர்கள் போல, நண்பர்கள் போல் இல்லையில்லை நகமும் சதையும் போல நம்மோடே ஒட்டிக்கொண்டு இருக்கிறது எங்கும் எப்போதும். உங்களது, எனது என எல்லாரது நடவடிக்கைகளும் தினசரியாக எங்கோ பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இந்த டிஜிட்டல் யுகத்தில். நமது அந்தரங்கத்தை யார்வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எட்டிப்பார்க்க வழிவகை செய்திருக்கிறது இந்த நவீன மின்சாதனங்களின் புரட்சி.
மிகுந்த அறிவாளிகளுக்கு எல்லா நிறுவனங்களிலும் பிழைப்பு இருக்கிறது. கொஞ்சம் சுமாரான அறிவாளிகளுக்கு இது கஷ்ட காலம்தான். கடந்த காலத்தில் எல்லா நிலை மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு பிழைப்பு, வாழ்வியல் ஆதாரம் ஓன்று இருந்தது. எங்கள் ஊரிலிருந்த இறந்தவர் உடல்களை எரிக்கும் சகோதரர் இறந்தபிறகு அந்த வேலையை செய்கின்ற ஆள் இல்லையென சொன்னார்கள். இப்படி நிறைய சிறுதொழில் செய்தவர்கள் சுவடின்றி காணாமல் போய் விட்டார்கள், போய் கொண்டிருக்கிறார்கள். நான் சிறு வயதாயிருந்த பொழுது அவல் விற்க வருகின்ற அந்த செல்லம்மா ஆச்சி வேலையை இப்போது யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஐஸ் விற்கும் மாமா, மண்பாண்டங்கள் விற்க வருகின்ற பக்கத்து கிராமத்து அம்மா (என் மகளுக்கு ஒரு மண் உண்டியல் வாங்கி கொடுக்க என் அம்மாவிடம் கேட்டபோது, அவர்களெல்லாம் இப்போது வருவதில்லை எனவும், இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை எனவும் சொன்னார்கள்), பெட்டிக்கடை வைத்திருந்த வேலம்மாள் அக்கா, சைக்கிள் கடை வெங்கடேஷ், பாலன் அண்ணா, விவசாயிகள் என பலர் சத்தமில்லாது தொலைந்துவிட்டார்கள். பாரம்பரிய தொழிலை விட்டு ஏதாவது கடை கண்ணிகளில் அடையாளமின்றி கிடைத்த வேலையை செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருப்பர்கள். ஆனால் கிராமத்தின் பெட்டிக்கடைகளில் பெப்சியும், லேசும் தடங்கலின்றி கிடைக்கிறது. மக்கள் நூடுல்ஸ் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்!. KFC ஒன்றுதான் பாக்கி.! நாம் வல்லரசாகப் போகிறோம் அல்லவா!
மண்பாண்டங்களை, அவலை, பெட்டிக்கடைகளை, முறம் விற்கிறவர்களை ( எந்திரங்கள் அறுவடை செய்ய வருவதற்கு முன்பு, அறுவடை செய்த நெல்லிலிருக்கும் பதரினை, தூசியினை நீக்குவதற்கு முறத்தினை, (சொளவு என்றும் சொல்வார்கள்) பயன்படுத்துவர்) ஓடச் செய்த பெருமை இந்த நூற்றாண்டு நாகரீக மனிதர்களான நம்மைச் சாரும்!. மாற்றம் தவிர்க்க முடியாதது என்ற போதும் பழையனவற்றின் சுவடே இல்லாத அளவிற்கு அழித்துவிட்டு அதன் மேல் எழுப்பபடுகிற மாற்றம் எத்தனை அவசியம் எனத் தோன்றுகிறது. வெட்டியான் இல்லாத சுடுகாடும், மண்சட்டி, உமியடுப்பு, விறகடுப்பு, குதிர், உண்டியல், முறம் என அடையாளங்களை தொலைத்த கிராமத்து வீடும், பெட்டிகடைகளற்ற, ஐஸ்காரன் வராத தெருக்களும், அம்மி, ஆட்டோரல் கொத்தும் சத்தமற்ற கிராமமும் பாண்டி, குச்சி கம்பு , கோலிக்கா ,பம்பரங்கள் சுழலாத கிராமமும் அரை ட்ரவுசர் போட்ட அப்பத்தா மாதிரி அழகின்றி அந்நியப்பட்டே நிற்கிறது.
அபுதாபியில் வேலை பொருட்டு சில மாதங்கள் வசித்து வருகிறேன். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் துபாயிலும் சரி, அபுதாபியிலும் சரி கையில்
ஐ-போன் இல்லாத அரபு ஆட்களை பார்ப்பது கடினம். சாலைகளில் சர்வ சாதாரணமாக பெராரியும், ரோல்ஸ் ராயும், போர்சேவும் என ஆடம்பர, அதிநவீன கார்களும், இல்லங்களில்அனைத்து வகை அதிநவீன வாழ்வியல் பொருட்களும் நிரம்பி வழிகின்ற வாழ்கைதான் இங்குள்ள பெரும்பான்மையான அரபு குடிமக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களது உடைகளை கவனித்தால், நாடாளும் அரசர் முதல், கடை கோடி சிறு வயது குடிமகன் வரை ஒரே மாதிரியான,அவர்களது கலாச்சார உடைகளைத்தான் அணிகிறார்கள். மறந்தும் கூட அவசியமின்றி வேறு உடைகளை அணிவதில்லை. நம்போல் கொதிக்கிற ஊரில் கோட்டு சூட்டும், ஜீன்ஸ் பேண்டும் போட்டுக் கொண்டு அலைவதில்லை. அப்படியே அணிந்தாலும், பாரம்பரிய உடைகளை அந்தஸ்து என்ற பேரில் ஒதுக்குவதில்லை. அவர்களது உணவுமுறை இன்னும் பாரம்பரியம் பிறழாமல் இருக்கிறது பீட்சா, பர்கர் சமாச்சாரங்கள் இங்கேயும் உண்டு என்ற போதும்! இத்தகைய சபலபடுத்தும் மேற்கத்திய நாகரீக வளர்ச்சியின் விளைவை அவர்கள் ஆழமாக, தங்கள் மரபினை சிதைக்க அனுமதிக்கவில்லை எனத் தோன்றுகிறது. பாலைவன நாடோடி வாழ்வு முறையிலிருந்து வந்து, எண்ணெய் வள ஆதாரங்களின் கண்டுபிடிப்புகளுக்கு பிறகு, உலக பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற அரசர்களுக்கு, குடிகளுக்கு இருக்கிற மண் சார்ந்த உணர்வு நமக்கு அபாய அளவைத் தாண்டியும் குறைந்திருக்கிறது என்பது "தமிழினி மெல்லச் சாகுமோ" என்ற பயத்தைத்தான் தருகிறது.
உலகில் எல்லா நாடுகளிலும் இத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்ற பொழுதும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை, காலச்சார விழுமியங்களை பாதுகாக்க சிரத்தையோடு முயற்சி எடுக்கிறார்கள் என்றே நம்புகிறேன். மாற்றத்தின் விளைவால் சில பழக்கங்கள் மறைந்து அவை வரலாற்று விழுமியங்களாக மாறினாலும் அதன் மதிப்பும், அதன் பால் இருக்கிற உணர்வும் சந்ததிகளுக்கு கற்றுகொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும், செய்தும் வருகிறார்கள். அபுதாபி நான் பார்க்கின்ற ஓர் உதாரணம் அவ்வளவே. சந்ததிகளுக்கு கடத்தும் விசயத்தில் நாம் கொஞ்சம் புரிதலற்றவர்கள். அதற்கு நம் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த தெளிவான புரிதல், பெருமை என்பது நமக்கு இல்லாமையே காரணமென நினைக்கிறேன். தெளிவற்ற மூத்த சந்ததி எப்படி தெளிவாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தரமுடியும்.
வரலாற்றை புரட்டிப்பார்க்கையில் நமது தேசம் காலங்காலமாக மேற்கத்திய நாகரிகங்களின் தாக்கத்திலேயே இருந்து வந்திருக்கிறது. வெள்ளையன் நம்மை 500 வருடங்கள் ஆண்டதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பல்வேறு பட்ட நாகரீகங்களை சார்ந்த அரசுகள் நம்மை, நம் மண்ணை ஆண்டதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். உலகின் மிகத் தொன்மையான முன்னோடி சமூகமான தமிழ் சமுகம் ஏனைய இந்திய சமூகங்கள் போலன்றி இத்தகைய சவால்களை தெளிவான திட்டமிடுதலுடன் சமாளித்து தனது பெருமையை, பண்பாட்டினை நிலைநாட்டி வந்திருக்கிறது. புத்த பிட்சுகளும், சமண மதத் துறவிகளும் வாழ்ந்த காலங்களில் கூட தமிழ் சமூகம் பெரிய புரிதலுடன், கலப்படமின்றி செழித்து வளர்ந்த வரலாறு நமக்கு உண்டு. அந்த வரலாற்றினை கொஞ்சம் புரட்டினால் நமக்கு நாம் யார் என்று தெரியும். தொல்காப்பியனை, வள்ளுவனை, அகத்தியனை என முன்னோக்கு சிந்தனையோடு தமிழ் சமூகத்தை வழிநடத்திய முன்னோர்களின் பாரம்பரியம் நமது.வரலாறு மறந்து கொஞ்சம் வழி தவறுகிறோம் என நினைக்கிறேன். தாய்மொழி மறந்த நமது கல்விமுறையும் ஒரு காரணம். எது எப்படியோ, புராதனமாக நமது கடந்த தலைமுறை வாழ்வு ஆகாதிருப்பின் நிம்மதி.
நாம் விழித்துக்கொண்டு விழுமியங்களை பாதுகாக்காவிடில், தராளமயமாக்களின் இரும்புக்கரங்கள் பூக்களைச் சூடும் நமது பெண்களின் மண்டை முடியை வழித்துவிட்டு அதையும் நாகரீகம் என நம்மைச் நம்பச் செய்தாலும் செய்துவிடும்!
Be Careful!!!..நமக்குத்தான் சொன்னேன்!

Comments
Post a Comment