நர்மதா குட்டிகள்



காலைக் கடமைகளுக்கு பிறகு 
புதிதாய் வாங்கிய 
நீள் செவ்வக வடிவ 
உயர் தொலைக்காட்சியில் 
கார்ட்டூன் பார்க்கத் தொடங்குகிறாள் 
அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்ற வீட்டில் 
தாத்தா,பாட்டியோடிருக்கும் 
நான்கு வயதான நர்மதா குட்டி

கண்களுக்கு நல்லதில்லையென 
பாட்டி தொலைக்காட்சியினை அணைக்கையில் 
கொஞ்சம் முகம் வாடித் தொடங்குகிறாள் 
ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியோடு 
தனது உரையாடலை

கதவுகள் பூட்டியே கிடக்கும் 
அண்டை அயலாரின் நகரத்தில் 
கார்ட்டூன் கதைமாந்தர்கள்தான் 
நண்பர்களாதலால்
அவர்களோடு அவளுக்கிருக்கிறது 
ஒரு அதிசய உலகம்

அலுப்போடு பாட்டியின் 
அவசர உணவூட்டலிலோ 
அங்கலாய்க்கும் தாத்தாவின் 
அயர்வு விளையாட்டிலோ 
ஒருபோதும் நிறைவதில்லை 
நர்மதா குட்டிக்கு 
வயிறும்,மனமும் 

உயர்ரக ஆடைகளும் 
உணவுப் பண்டங்களும் 
நிரம்பக் கிடைக்கும் உலகில் 
அம்மையும் அப்பனும் 
அருகிலிருப்பது ஏன் 
இத்தனை அரிதாயிருக்கிறது என 
குழம்பியே இருக்கிறாள் நர்மதா குட்டி..

கணிப்பொறியும், கைப்பேசியும்  
தன்னைவிட 
தாய், தந்தையரின்  
அருகிலிருக்கிற விந்தையின் 
விளக்கம் எப்போதுமே புரியாதிருக்கிறாள் 
நர்மதா குட்டி 

தன்னிலை தொலைத்து 
எதன் பின்னாலோ 
தலைத்தெறிக்க  ஓடும் 
மனிதர்களின் உலகில்  
மக்களாய்ப் பிறந்தது சாபமென்று  
ஒருபோதும் தெரியப்போவதில்லை 
நர்மதா குட்டிகளுக்கு!.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்