யாதும் ஊரே, யாவரும் கேளிர்
யாதும் ஊரே, யாவரும் கேளிர் :-
திருமணமாகி சில மாதங்களான உடனே என்ன விஷேசம் ஏதும் உண்டா??!! என கேட்கும் பாரம்பரியம் கொண்ட சமுக அமைப்பு நமது. அனேகமாக எல்லா தம்பதிகளும் இந்த கேள்வியை எதிர்நோக்கி இருப்பார்கள்.
இந்த கேள்வியின் பின்ணணி குறித்து கொஞ்சம் சிந்திக்கிறேன். இந்த மாதிரியான கேள்விகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒருவித நெருக்கடியினை உளவியல் ரீதியாக தருவதனை கவனித்தும், கேட்டும் இருக்கிறேன். திருமணத்தை ஒரு கடமையாகவும், கட்டாயம் நிகழ வேண்டிய நிகழ்வாகவும் கருதும் நமது சமுகத்தில் இந்த மாதிரியான கேள்விகளும் சகஜம்தான் என்றாலும் அடிப்படையில் ஒரு மகிழ்வை தெரிந்து கொள்ளும் நோக்கில்தான் இந்த மாதிரியான வழக்கம் நம்மிடையே உருவாகியிருக்க வேண்டும். இன்றும் அக்கறையோடு, ஆசையோடு கேட்கப்பட்டாலும் அதன் பின் ஒரு ஒப்பீடு மனப்பாங்கு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதை காணமுடிகிறது. உயிரியல் விதிகளின் படி ஒரு உயிரின் நோக்கமே பிறப்பித்தல் என்றாலும் அதனை வைத்து ஒரு உளவியல் குளறுபடிகள் செய்வதை ஏற்க முடிவதில்லை.
நவீன வாழ்வியல் முறைகளாலும், அது சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் உடல்நல மாற்றங்களாலும் இன்றைய சமுகத்தில் குழந்தையின்மை அல்லது சற்று காலம்தாழ்த்திய பிள்ளை பேறு போன்றவைகள் அதிகம் நிகழ்வதை காணமுடிகிறது. மேற்சொன்ன இரண்டு சூழ்நிலைகளினால் நிம்மதி தொலைத்து வருந்தி, ஒளிந்து வாழும் பலரையும் சந்திக்க நேருகிறது. உண்மையில் குழந்தையின்மை என்பதையோ,கொஞ்சம் தாமதமான குழந்தை பேறினையோ, பிரச்சினையாக அன்றி ஒரு வாழ்வியல் வாய்ப்பாகவும் பார்க்க முடியும். குழந்தையை தத்து எடுத்து வளர்த்தல் இங்கே மிகப்பெரிய விடையாக அமைய, அமைக்க நாம் சிந்திக்க வேண்டும். குழந்தை பெறும் வாய்ப்பு இல்லாதோர், அல்லது தாமதப்படும் நிலையிலுள்ளோர், பெற்றவர்கள் அரவணைப்பில்லாத குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இன்னும் நமது சமுகம் ஏன் ஒரு எளிய தீர்வாக பார்க்க யோசிக்கிறது.பார்க்கலாம்.
முதலில் வருவது 'என் ரத்தமில்லையே' என்ற பிரச்சனை. பெரும்பாலானவர்கள் சொல்லும் முக்கிய காரணம் இதுதான். என் ரத்தமில்லையென்றால் பெரும்பாலும் தம்பதியர் இருவருமே திருமணத்திற்க்கு முன் வெவ்வேறு குடும்ப, ரத்தப் பின்னணியினை சார்ந்தவர்கள் தாம். அப்படியிருக்க ரத்த சம்பந்தமில்லாத என்று பிறிதொரு குழந்தையை எடுத்து வளர்த்தலை செயற்படுத்தாமல் இருப்பது அபத்தம்.
இரெண்டாவதாக அதிகமானவர்கள் யோசிப்பது குழந்தையின் பிறப்பு பின்னணி குறித்தும், நல்ல வழியில் பிறந்ததோ, என்னவோ என்றும், எந்த சாதி, மதம் சார்ந்தவர்கள் பெற்றதோ என்றவாறும் எண்ணுவது. மதங்கள் குறித்தும், சாதிகள் குறித்தும் தெளிவற்றவர்கள் சொல்லும் காரணங்களே இவை. இத்தகையவர்கள் மதங்களின், சாதிகளின் தோற்றம், காரணகாரியம் பற்றி தெரிந்து கொண்டு அல்லது கேட்டுக்கொண்டு சிந்திக்க வேண்டும். வெகுஜன ஊடகங்களும், அரசும் இந்த விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வுகளை நடத்தி ஊக்குவிக்க வேண்டும். தத்து எடுக்கும், எடுத்துக்கொள்ளப்பட்ட குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் எதாவது சலுகைகளும், மானியங்களும் வழங்கப்படவேண்டும். இவ்வாறு தொடர்ந்து நிகழும் பட்சத்தில் கண்டிப்பாக மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இந்தியா மாதிரியான மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் இந்த மாதிரியான செயல்களின் மூலமாக தனித்து, நிராதரவாக விடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறையும். நடு ரோடுகளில் அலையும் நாய் போன்ற விலங்குகளை எடுத்து வளர்க்க முன்வருகின்ற பலர் குழந்தைகளிடம் அவ்வாறு அன்பு செலுத்த முன்வரவில்லை என்பது வருத்தமான உண்மையே.
மூன்றாவது காரணம் உளவியல் ரீதியானது. தனக்கு பிறக்காத குழந்தைகளை எடுத்து வளர்ப்போரில் சிலரே, "நாளைக்கு என்னதான் இந்த குழந்தை வளர்ந்து வந்தாலும் நம்மள மாதிரி பேசவோ, இருக்கவோ செய்யாது" என்கிற உளவியல் எண்ணம் பல பெற்றோர்களுக்கு. ஒன்றும் இல்லாதிருப்பதைவிட ஏதோடு ஒன்றுடன் இருப்பது நல்லது என்கிற வாசகத்தை இவர்களுக்கு நினைவு கூறவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த உலகில் உள்ள அனைத்து உயிரும் உறவுகளே என்பதை பெருவெடிக்கொள்கை (Big Bang theory) போன்றவற்றில் இருந்து தெரிந்து கொள்ளலாம். நமது மூதாதையர்கள் எங்கோ ஒரு ஆப்ரிக்க கண்டத்திலிருந்தோ, செவ்விந்திய வழியிலிருந்தோ வந்தவர்கள் தாம் என்பதை அறிவியல் நமக்கு உணர்த்தும்.
எல்லாவற்றிக்கும் மேலாக கணியன் பூங்குன்றன் அன்றே சொல்லிவிட்டான்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் நமது மண்டைக்குத்தான் ஏற மாட்டேன் என்கிறது இந்த அத்துணை உண்மைகளும்.
Comments
Post a Comment