எழுத்தறிவித்தவன்

எழுத்தறிவித்தவன் :-

கண்ணங்கரிய  நிறத்தோடு
எண்ணெய் வழியும் தலையோடு
மந்தை பள்ளிக்கு
விந்தைமனதோடு சென்றவன் நான்

குடித்து குடித்து
குடிகார வாத்தியார் என
பட்டம் பெற்ற அருணாசலம் வாத்தியார்
என்னை அடித்த
நான் படித்த முதல் வாத்தியார்

இரெண்டாம் வகுப்பில்
சாந்தி டீச்சரும்
மூன்றில் சரஸ்வதி அம்மையாரும்
நான்கில் மீண்டும் அருணாசலமும்
ஐந்தில் சரஸ்வதியும்
என்னை அடித்து வைத்தார்கள்
அவ்வப்போது படிக்க வைத்தார்கள்

ஆறாவதில் வந்தார்
அந்தோணி நேசன்
வரலாற்றின் பேசன்
வளர்த்தார் பொதுஅறிவு
நீறூற்றிக் கொஞ்சம்
நினைவூற்றி நிறைய

ஏழாவதில் அற்புதம் அம்மையார்
அற்புதம் ஏதும் நிகழ்த்தாமலே
அடுத்து எட்டாவதில் மதுரநாயகம்
வெளிஉலகம் நூலுலகம்
வழிக் காண்பித்தார்

கிராமம் விட்டு
நகரம் வந்தேன்
ஒன்பதுக்கு
இசக்கிமுத்து,
இங்கேயும் ஆங்கிலம் போதித்த
ஒரு அபிநய சரஸ்வதி
அறிவியல் போதித்த திலகர்
வந்து போயினர்

பத்தாவதில் அகத்தீசுவரன்
காந்திமதிநாதன்
இசக்கிமுத்து
திலகர்
என எல்லோரும் போதித்தாலும்
என்னை எனக்கு உணர்த்தியது
மணிசுந்தரி அம்மையாரே

பதினொன்றில்
ராமானுஜம் தமிழ்
செல்லம் ஆங்கிலம்
ஸ்ரீநிவாசன் கணிதம்
இயற்பியல் ராதாக்ருஷ்ணன்
வேதியியல் நடராஜன்
தாவரவியல் சுப்புலட்சுமி
விலங்கியல் திலகர்
என எல்லாவற்றையும்
மண்டையில் ஏற்றி
சென்றார்கள்

பன்னிரெண்டிலும்
இயற்பியலுக்கு அமலா அம்மையாரைத் தவிர
எந்த எழுச்சி மாற்றமும் நிகழவில்லை

கல்லூரியின்
மூன்றாண்டுகளில் விரிவுரையாளர்கள்
சுந்தரம், அனந்த கிருஷ்ணனும்
தமிழையும், காந்திமதினாதனும், ஜான்சனும், திருமதி.பிரேமலதா
ஆங்கிலத்தையும்
திருவாளர்கள் ராமசாமி, இளங்கோ, சிவகுருநாதன்
சரவணன்,
ஆகியோர் விலங்கியல் பிரிவுகளையும்
திரு சுப்பிரமணியன் அவர்கள் தாவரவியலையும்
திருமதி.பார்வதி, திரு பார்வதிநாதன்
பொன்னுராஜ், ஆகியோர் வேதியல் கிளைப்பிரிவையும்
போதித்தனர்.

ஏனைய போதைனைகளை
வாழ்க்கை போதிக்கிறது இன்றுவரை.

எல்லோரையும் நினைவுகூர
எழுதியதானாலும்
என்னை நானாக்கிய
இவர்கள் பெயர்கள் எல்லாமே
ஒரு சிறந்த கவிதைக்கு ஒப்பானவைதான்.  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔