மாமி

அலுவலகம் முடித்து சரியாக 5 மணி அந்த அரசுப் பேருந்தில் வருகிற வாடிக்கை சுந்தருக்கு. அந்த 1B நம்பர் பேரூந்து கொஞ்சம் விசேஷம். சுந்தருக்கு மட்டுமல்ல இசையை, விரும்புகிற எல்லோருக்கும். அந்த பேரூந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு இசையின் மீது பேராசை, பிரயாசை இருக்கவேண்டும். எப்போதும் தொடர்ச்சியாக திரையிசை பாடல்களையோ, சில இசைக்கருவிகள் மட்டும் ஒலிக்கும் இசையையோ எப்போதும் ஒலிக்கவிட்டு பயணிகளை கட்டி வைத்திருப்பர். அன்றைய அந்த ஒருமணி நேர பயணம் அவனது வாழ்க்கையில் மற்றுமொரு மிக முக்கிய நிகழ்வாகப் பதியப்போகிறது தெரியாமல் அன்றும் வழக்கம்போல் இசைப்பேரூந்துக்காக விரைந்து கொண்டிருந்தான்.
சுந்தர் ஒரு பட்டதாரி வாலிபன். சராசரி உயரம், நல்ல நிறம், பெண்களை தலைதிருப்பிப் பார்க்க வைக்கிற, ஆண்களை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கிற அழகன். கிராமத்தில் பின்னணியிலிருந்து சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த புது ஆத்மா. இரண்டாம் தரமாக ஒரு மோட்டர் சைக்கிளை வாங்கியிருந்தான். ஆனாலும் இந்த இசைப்பேரூந்துக்காக அதை அவன் அலுவலகப் பயணத்துக்கு அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. கொஞ்சம் பகட்டாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் புதிய நகரத்துவாசிகளைப் போல அல்ல நம்ம சுந்தர். எப்போதும் இயல்பாக, அலட்டல் இன்றி, இருக்குமிடத்தை இயல்பாக உயிர்ப்போடு வைக்கிற ஜீவன். "சுந்தரோடு கழிகின்ற தருணங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உயிர்ப்போடும் இருக்கும்" இது சுந்தரைப் பற்றிய அவனது நண்பர்களின் கூற்று.
குளிர் காலமாதலால், வானம் கொஞ்ச இருட்ட தொடங்கியிருந்தது ஐந்து மணிக்கே. வான் உயர இருமருங்கும் வளர்ந்திருக்கும் கட்டிடங்களுக்கு இடையில் தெளிவாய் விரிந்துகிடந்த வீதிதனில் நடந்து கொண்டிருந்தான். வானத்து மேகங்கள் சில அவனை துரத்துவது போல வந்துகொண்டிருந்தன பின்னால். அருகிலிருந்த சிறிய அளவிலான டீக்கடையில் பரபரப்பாயிருந்த நாயர் அண்ணாச்சி அவனை நோக்கி கத்தினார்.
"ஏ! சுந்தர், என்னப்பா டீ சாப்பிட இரண்டு நாளா ஆளக் காணல"
"இல்ல நாயர்.. கொஞ்சம் பிஸி ஆபீஸ்ல..அதான் வர முடியல.. நாளைக்கு கண்டிப்பா வந்துடுறேன்..இப்போ 1B யை பிடிக்கணும். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திரும்." என்றவாரே கொஞ்சம் வேகம் கூட்டி ஓடிக்கொண்டிருந்தான். நினைத்தது போல 1B நின்று கொண்டிருந்தது. வழக்கமாக வரும் இவனைப் பார்த்ததும் ஓட்டுனர் சத்தமாக, விரைவாக வருமாறு சைகையோடு அழைத்து கொண்டிருந்தார். இவன் வண்டியில் ஏறவும் அது நகரவும் சரியாக இருந்தது. நல்லவேளையாக ஆண்கள் பகுதியின் அந்த ஜன்னலோர நடு இருக்கை காலியாக இருந்தது. அந்த இருக்கை கொஞ்சம் ஸ்பெஷல். அதுவும் சுந்தர் போன்ற இளவட்ட பசங்களுக்கு, இசை விரும்பும் பசங்களுக்கு. அந்த இருக்கைக்கு சற்று மேலே ஒரு ஸ்பீக்கர் இருந்தது. முக்கியமாய் அந்த இருக்கையிலிருந்து பெண்கள் பகுதியில் அமர்ந்திருக்கின்ற, நிற்கின்ற எல்லோரையும் எளிதாக பார்க்கலாம்.! அந்த இருக்கையில் இருக்கின்ற எவரையும் பெண்கள் பகுதியிலிருக்கிற யாரேனும் பார்க்கிற காட்சி அவ்வளவு தேவதைத்தனமாயிருக்கும். அந்த இடத்தின் ஆங்கிள் அப்படி!. எவ்வளவு சுமாரான பொண்ணும் அந்த இடத்திலிருந்து பார்க்கையில் தேவதையாய்த் தெரிகிற மர்மம் அந்த பேரூந்தை வடிவமைத்தவனுக்கு தெரிந்தே செய்தானோ என்னவோ. வாஸ்து சாத்திரம் போல காதல் சாத்திரம் பார்த்து கட்டிய இருக்கை அது!
எப்படியோ இருக்கை கிடைத்தாகி விட்டது. பேரூந்தும் கிளம்பியாகி விட்டது. அன்று பார்த்து ஒரு பெண் பயணியும் விசேஷமாக இல்லை!. என சுந்தர் யோசிக்கத் தொடங்கிய பொழுதில், ஓட்டுனர் அந்தப் பாடலை ஒலிக்கவிட்டார். தங்கர் பச்சானின் "அழகி" படத்தில் இளையராஜாவின் இசையில் வருகின்ற பாடல். சுந்தருக்கு அந்த பாடல் ரெம்பவே ஸ்பெஷல். அவன் அடிக்கடி கேட்க தவிர்க்கும் பாடல். வெகு நாட்களுக்குப்பிறகு , ஏன் சில வருடங்களுக்குப்பிறகு தவிர்க்க முடியாமல் இன்று கேட்க வேண்டிய சூழல் சுந்தருக்கு. நான்கு வருடங்களுக்கு முந்தைய நியாபங்களை கிளப்பிக் கொண்டுவந்து கொட்டியது அந்த பாடல். கண்கள் மூடி கொஞ்சம் கடந்தகாலத்துக்குப் போயிருந்தான் .நாமும் போகலாம் சுந்தரோடு நான்கு வருடங்களுக்குப் பின்னால் அவனது கடந்த காலத்துக்கு.
நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு வெயில்கால காலைப்பொழுது. நகரவாசம் அதிகம் தெரியாதிருந்த அவன் வசித்த புறநகர் பகுதியில் வெயில் காலத்தை உணர்வது அவ்வளவு கடினம். மரங்களும் செடிகளும் சூழ்ந்த அந்த பகுதியிலிருந்து நகரத்திற்கு வேலை தேடி வருவது அவனது தினசரி வாடிக்கை. அது ஒரு புதன்கிழமை. வழக்கம்போல் அன்றிருந்த வேலை நேர்காணலுக்கு கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டு கிளம்பியிருந்தான். வழக்கமான பேருந்து, வழக்கமான வழித்தடம், பேரூந்து போய்க்கொண்டிருந்தது. ஏகப்பட்டக் கூட்டம். நெருக்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக உடை அழுக்காகிக் கொண்டிருந்தது . பழகிப்போயிருந்தாலும், கொஞ்சம் எரிச்சலோடே நின்று கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலான பயணத்திற்கு பிறகு நுங்கம்பாக்கம் வந்து சேர்ந்திருந்தான்.
முதலில் நேர்காணல் நடக்கும் அலுவலகம் சென்று, கழிவறையில் கொஞ்சம் உடை திருத்தம் செய்து கொண்டு நேர்காணல் அறைக்கு செல்ல தீர்மானித்துக்கொண்டான். அலுவலகம் நுழைந்ததும் வலது பக்கம் ஆண்களுக்கான கழிவறை இருப்பதாக காவலாளி சொன்னார். எல்லாம் முடித்து நேர்காணல் அறையில் சென்று அமர்கையில் கொஞ்சம் தாமதமாகியிருந்தது. எரிச்சலோடு தலை நிமிர்கையில்தான் அவளை பார்த்தான். மிச்சமிருக்கிற வாழ்க்கை முழுவதும் தான் வாழ ஆசைப்பட்டு கற்பனையில் இருந்த அந்த தேவதையையொத்த அவளைப் பார்த்தான். இவளோடு பயணிக்க இறைவன் தனக்கு அருள்வாராக, என்றெண்ணி தன்னோடு பயணிக்கப்போகிறவளாய் அவளைப் பார்த்தான். அன்று கண்களில் விழுந்து காலம்பூராவும் அவனோடு காலத்தை கடத்த போகிற அவளைப் பார்த்தான். முதல் பார்வைக் காதலையும் அதனூடே பல சுகானுபவத்தையும் தரப்போகிற தேவதை அவளை அன்றுதான் முதன் முதலாய்ப் பார்த்தான். அவனைப் போன்ற படபடப்போடு, வேலை கிடைக்குமா இந்த முறையாவது என்ற எதிர்பார்ப்போடு நகங்களைக் கடித்துக்கொண்டே எதிரில் பச்சை வண்ண சுடிதாரில் அமர்ந்திருந்த அந்த ஐந்தடிக்கும் கொஞ்சம் அதிக உயரமிருக்கும் வெள்ளை வண்ண தேவதை அவளைப் பார்த்தான். அப்புறமென்ன, படபடப்பெல்லாம் குறைந்து, வந்தவேலையை மறந்து மனது லேசாகியிருந்தது. திரும்பிப்பார்த்தால் வந்திருந்த எல்லா பயலுகளுக்கும் மனசு லேசாகியிருப்பது தெரிந்தது! போச்சு..இங்கேயும் போட்டிதான். இன்னைக்கும் வேலையும் போகப்போகுது..இந்தப் பொண்ணும் போகப்போகுது. மறுபடியும் டென்ஷன் அதிகமாகத் தொடங்கியது. சரி வந்த வேலையை பார்ப்போம் என்று நிதானமாகி தனது அழைப்புக்காகக் காத்திருக்க தொடங்கினான். இருந்தும் கண்கள் அனிச்சையாக அந்த வெள்ளை வண்ணத் தேவதை பக்கம் திரும்புவதையும் உணரத் தவறவில்லை நம்ம சுந்தர். பெண்கள் அதிசயம். அழகுப்பெண்கள் பேரதிசயம். தினமும் பார்க்கின்ற நூற்றுக் கணக்கான பெண்களுக்கிடையில், நம் மனதை கலைக்கிற, கலையாக்குகிற பெண் என்பவள் படைப்பின் சூட்சமத்தை தன்னுள் பொத்தி ஒளித்து வைத்திருக்கும் பிரபஞ்சத்தின் அதிசயம். இரு விழிகள், இரு நாசிகள், செதுக்கப்பட்ட புருவங்கள், கன்னம் வருடும் சின்ன கூந்தல், நகம் கடிக்கையில் புலப்பட்டு மறையும் வெண்மை பற்கள் என மனதை கலைத்து சிதைத்து வெகு உயரம் தூக்கி திருப்பி கீழே விழுவது போன்ற உணர்வினைத் தருகின்ற தேவதைகள் இப்படித்தான் இருப்பார்களோ என எண்ணிக்கொண்டான். தன்னை சுற்றி வந்த, தான் தினம் பார்க்கும் எந்த பெண்ணிடமும் உணராத ஒரு நெருக்கத்தை, மனதின் குறுகுறுப்பை இந்த தேவதைப்பெண் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொண்டான். அறிவியல் என்னதான் எதிர்பாலின ஈர்ப்பை இயல்பெனச் சொல்லியிருப்பினும், ஒரு குறிப்பிட்ட பெண்ணிடம் மட்டும் மனது ஈர்க்கப்படுகிற, காந்தம் போல் கவர்ந்திழுக்கப்படுகிற அந்த மானுட அதிசயம் அறிவியலுக்கே இன்னும் புலப்படா விந்தைதான் என எண்ணிக்கொண்டான். தனக்கான அந்த பேரதிசயத்தின் தரிசனத்தை கண்டுகொண்டு கொஞ்சம் கலங்கியிருந்தான், கலைஞனாயிருந்தான் சுந்தர். இந்த தேவதைக்கும் தனக்கும் ஏதோ ஓன்று இன்று தொடங்கி தன் இறுதிவரை நீடிக்கப் போகிறது என்பதை அவன் உணரத் தொடங்கியப் பொழுதில் அவனுக்கான நேர்முக அழைப்பு வந்தது. கவனம் கலைய, காரியம் வேண்டி அறைக்குள் நுழைந்தான்.
நிறைய கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. உதடுகள் எல்லாவற்றுக்கும் பதிலளித்துக் கொண்டும் , மனது தேவதையை சுற்றியும் அலைந்தவாரே இருந்த ஒரு தருணத்தில் ஒரு வழியாக நேர்காணல் முடிந்து அவன் வெளிவரவும் அடுத்ததாக தேவதை செல்லவும் சரியாக இருந்தது. அதற்குள் மதிய சாப்பாட்டு வேலை வந்து விட்டதால் அருகிலிருந்த அலுவலக காண்டீனுக்குள் ஒதுங்கினான். ஒரு வெஜ் மீல்ஸ் ஆர்டர் பண்ணி சாப்பிடத்தொடங்கிய கொஞ்ச பொழுதில் தேவதையும் கொஞ்சம் டல்லான முகத்துடன் கேண்டீனில் நுழைந்தது. நல்ல வேலையாக அங்கேயிருந்த எல்லா டேபிளும் ஆட்கள் நிறைந்திருந்ததால் சுந்தர் அமர்ந்திருந்த டேபிளில் காலியாயிருந்த இரண்டு எதிர் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தது தேவதை. சுந்தருக்கு ஆச்சர்யம். நமக்கும் எங்கயோ மச்சம் இருக்குபோல என்று எண்ணிக்கொண்டு இயல்பாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டான். உள்ளுக்குள் எக்குத்தப்பாய் ரத்த ஓட்டம் அதிகரித்திருந்தது, எரிமலைகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன, நதிகள் பெரும் பிரவாகமாய் உள்ளே உள்ளத்தில் ஓடும் உணர்வு, ஒரே நேரத்தில் உலக சுனாமியெல்லாம் ஓடி வந்து தாக்கிய விளைவு. பெரு மழையும், இடியும் இணைந்து புரட்டும் உணர்வு.. உடல் இலேசாக நடுங்கத் தொடங்கியிருந்தது சுந்தருக்கு. காதல் மாயம். உள்ளே ஹார்மோன்களுக்குள் கலகத்தை விளைவிக்கும் காதல் ஒரு மானுட அவசியம். ஆதியில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இப்படித்தானே நிகழ்ந்திருக்கும். கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வர்ணித்த ஜூலியட் நியாபகத்திற்கு வந்தாள், கிளியோபட்ரா நியாபகத்திற்கு வந்தாள். ஜூலியர் சீசருக்கும், ரோமியோவுக்கும் இப்படித்தானே மாறுதல்கள் தோன்றியிருக்கும் தனக்கான காதலை, காதலியைப் பார்க்கையில். ஏகப்பட்ட எண்ண உரசல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன உள்ளுக்குள். தேவதைக்கும் இப்படி ஏதாவது நிகழ்ந்திருக்குமா..என்னைப் பார்த்தவுடன்.? என கொஞ்சம் இன்ப அவஸ்தையுடன் அமர்ந்திருந்தான். மனது குத்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தது. முதல் சந்திப்பிலேயே இந்த கற்பனை கொஞ்சம் ஓவர்! என்று மனசாட்சி ஒருபக்கம் குமுறிக்கொண்டிருந்தது. தேவதை இவனைப் பார்த்து இலேசாக புன்னகைத்தாள். நம்ம ஆளும் அதையேச் செய்தான். அப்படியே " இண்டர்வியு எப்படி போச்சு" என்று ஆரம்பித்தான். "ஓகே. யூசுவல் தான்" என்றபடி தொடந்தது அவர்களின் உரையாடல். பரஸ்பரம் விசாரித்து, பின்புலம் பரிமாறிக்கொண்டார்கள் இருவரும். முக்கியமாக அவளது செல் நம்பரை வாங்கிக்கொண்டான். எல்லாம் முடிந்து தேவதை கிளம்புவதற்கும் அவர்கள் மெயின் ரோடு அருகேயுள்ள பேரூந்து நிறுத்தத்திற்கு வருவதற்கும் சரியாய் இருந்தது. தேவதையின் வீடு தாம்பரம் அருகே இருந்தது. சுந்தருக்கு பெரம்பூர் அருகே. மனதை அங்கேயே அவளோடு விட்டுவிட்டு உடலை மட்டும் சுமந்து கொண்டு திரும்பினான். பெண்கள் ஆண்கள் மாதிரியில்ல, ஒரு ஆணை பார்த்தவுடன் எல்லாம் இவன்தான் நமக்கான ஆள் என முழுதும் முடிவுசெய்து விடமாட்டார்கள், பார்த்த மாத்திரத்திலேயே பல்பு எரிந்தாலும், அந்த பல்பு நிரந்தரமாக, பிரகாசமாக எரியும் வாய்ப்புகள் குறித்தும் அலசியே முடிவெடுப்பார்கள். அவர்களுக்கு தனக்கான ஆண் குறித்த சமூக, பொருளாதார ஒப்பீடுகளும் முக்கியம் என நண்பன் சொல்லியது நியாபகம் வந்தது. எது எப்படியோ, மனது தேவதை நியாபகத்திலேயே உழன்று கொண்டிருந்தது. அடுத்த சில நேர்காணலுக்கு அவளையும் அழைத்தான். அப்படியே சந்திக்கிற வாய்ப்பு கிடைக்குமேயென்று. சந்தித்தும் கொண்டார்கள். சில சந்திப்புகளில் அவளைப்பற்றி நிரம்பத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓரே பெண், ஒரு தம்பி, ஒரு சராசரியான நடுத்தர வர்க்க குடும்பம். தேவதை வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். இருவருடைய குடும்ப சூழ்நிலையும், வாழ்வியல் பின்னணியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருந்தது. அழகான சம வயது பெண்களைப் பார்த்தவுடன் வழிந்து உருகும் ஆண்களுக்கிடையே பகட்டில்லாமல், இயல்பாக இருக்கும் நம்ம சுந்தரை வித்தியாசமாக பார்த்தாள் தேவதை. அவளும் அப்படியே இருந்ததாள். பெரிய பகட்டு பேச்சிலோ,உடையிலோ, பழகும் விதத்திலோ இல்லை. ஒரு அனுபவ முதிர்ச்சி தெரிந்தது அவளது பழகும் விதத்தில். நகரத்து பெண்கள் என்றாலே வேறு வித நினைப்பில் இருந்த சுந்தருக்கு இவள் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாள். அதனாலேயே இருவரும் பரஸ்பரம் பேசி தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே கலாச்சார சாதி, மத பின்னணியை சேர்ந்தவர்கள் என்பது வேறு சுந்தருக்கு கனவினை வளர்க்க உதவியாக இருந்தது.
அவ்வப்போது இருவரும் சேர்ந்து பயணப்பட்டார்கள் வேலை தேடும் படலத்தில். சில மதிய உணவுகள், சில காப்பி கோப்பைகள் அவர்களுக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருந்தன. மனத்துக்கு மிகவும் பிடித்த பெண்ணோடு கழிகின்ற தருணங்கள் சொர்க்கமாய்த் தெரிந்தன சுந்தருக்கு. வேகமாய் ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவனுக்கு நொடிகளாய் மட்டுமே தெரிந்தன. தேவதை வழக்கம் போலவே இருந்தாள். எந்த ஒரு எண்ண மாறுதல்களும் அவள் உடல்மொழியில், பேச்சு மொழியில் இல்லை. முக்கியமாக சுந்தர் எதிர்பார்த்த சென்று வருகிறேன் என்று சொல்லி விடைபெற்று கொஞ்சம் தூரம் சென்று திரும்பிப் பார்த்து புன்னைகைக்கிற தமிழ் சினிமா கதாநாயகிகள் போல் அவள் தலையைத் திருப்பவேயில்லை!. தனது நெருங்கிய உறவின் திருமணத்திற்கு அவளை அழைப்பதற்காக அவள் வீடு சென்று தேவதை குடும்பத்தோடு ஒரு நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தான் சுந்தர். தேவதையின் அம்மா எவ்வளவோ பரவாயில்லை. எளிதாக பழகிவிட்டார்கள் அவள் குடும்பத்தினர் அனைவரும். அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியான மனிதர்களாகத் தோன்றியது சுந்தருக்கு. ஆனா பொண்ணு ரெம்ப டப் குடுக்குதே! என்று எண்ணிக்கொண்டான். தேவதை வசிக்கும் வீடும் தேவதை மாதிரியே அழகாயிருந்தது. முதல் தளத்தில் வீடு. அவள் செல்லப் பிராணியாக ஒரு வெள்ளை நாய்க்குட்டி. மரங்கள் படர்ந்திருந்த ஒரு மொட்டைமாடி. ஆள் நடமாட்டமில்லாத அமைதியான தெரு. அடிக்கடி அவளை அவள் வீட்டிலேயே சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். அப்படியே சில சந்திப்புகளும் அமைந்தன. காலி சோபாவில், மரங்கள் படர்ந்திருந்த அதே மொட்ட மாடியில், அந்த வெள்ளை நாய்க்குட்டியை அவள் கட்டிக்கொண்டிருக்க கொஞ்சம் பொறாமையோடு அவள் வீட்டு கேட் அருகே, வாசலில் பைக்கிள் அமர்ந்த படியே சில நிமிடங்கள். அவளோடு பழகியதில் புதிதாக ஐஸ் கிரீம் சாப்பிடப் பழகிக்கொண்டான். அதுவும் கார்னட்டோ. அவளுக்கு பால் ஐஸ், கப் ஐஸ் என்ற பாடலும் பிடிக்குமென்பதுவும் அவள் அந்நியன் விக்ரமின் ரசிகை என்பது போன்ற சில வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொண்டான்!. வாழ்க்கை கவிதையாய் மாறிப் போயிருந்தது சுந்தருக்கு. தேவதை வீட்டில் எல்லோருக்கும் சுந்தரையும் பிடித்து போயிருந்தது . அவ்வப்போது அவள் வீட்டுக்கே சென்று சந்திப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தான் சில மாதங்களில். தேவதையும் இவன் வீட்டுக்கு ஒரு முறை வந்து எல்லோரிடத்திலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தாள்.
நாளுக்கு நாள் சுந்தருக்குள் காதல் பூதம் வளர்ந்து கொண்டிருந்தது. அவளிடம் சொல்லுகிற அளவிற்கு தைரியமில்லாத காரணத்தால் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். அவனது கிராமத்து பின்னணியும், இயல்பான அமைதியானக் குணமும் தயக்கத்துக்கு காரணம். பல்வேறுபட்ட தமிழ் சினிமா காதல்கள் வேறு அவனை குழப்பி வைத்திருந்தன. தேவதை வழக்கம் போல எந்தவித சலனமுமின்றி வந்து போய்க் கொண்டிருந்தாள். ஒரு பெண்ணை, அவள் மீதான காதலை மனதில் சுமந்து கொண்டு நிம்மதியாக இருப்பது கடினமாக, சந்தோசமாக, பயமாக இருந்தது நம்ம ஆளுக்கு. காதல் செய்யும் உள்ளிருப்பு வேலைகள் அவனை கொஞ்சம் கவனக்கலைப்பு செய்திருந்தன. தேவதைக்கு முதலில் ஒரு வேலை கிடைத்திருந்தது. அவள் கொஞ்சம் புது வேலையில் பிஸி ஆன பொழுதுகளில் சுந்தருக்கு பயம் அதிகரித்திருந்தது. பொண்ணு வேற தேவதை, ஆபீஸ்ல எந்த பயலாவது ப்ரொபோஸ் பண்ணி இவளும் ஓகே பண்ணிட்டா, நம்ம கதை என்னாவுறது. முதலில் சந்தித்த நேர்காணல் காட்சி வேறு நினைவுக்கு வந்து அடிக்கடி பயமுறுத்தியது. யோசிக்கத் தொடங்கியதும் பால்ய நண்பன் நினைவுக்கு வந்தான். அவன் மூலமாக சொல்லிவிடலாம் என்று யோசித்து முடிவுக்கு வந்தான். ஏற்கனவே இதுவரையான கதையும் அவனுக்கும் தெரியும் என்பதால், நேரிடையாக விஷயத்தை சொன்னான். தேவதைக்கும் நண்பன் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்ததால் விஷயம் ஈசியாக முடிந்து விடும் என்று நம்பினான்.
இரெண்டொரு வாரங்கள் இப்படியே ஓடியிருந்தது. இதற்குள் அவர்கள் அறிமுகம் ஆகி இரண்டு வருடங்கள் நெருங்கியிருந்தது . நண்பர்கள் இருவரும் முடிவு செய்து மூன்றாம் வருட ஆரம்ப நாளில் தேவதையிடம்சொல்லிவிடலாம் என்று முடிவு பண்ணி காத்திருந்தார்கள்.
அந்த நாளும் வந்தது, வேலைப்பளு அதிகமிருந்ததால் தேவதை நேரில் சந்திப்பது கடினம் என்று சொல்லிவிட்டாள். போட்ட திட்டத்தின் படி! அவளிடம் நண்பன் மூலமாக சொல்லியாக வேண்டும் என்பதால் அவளுக்கு போனிலேயே சொல்ல முடிவு செய்து நண்பன் சொல்லியும் விட்டான். அவளுக்கு முதலில் அதிர்ச்சி. அப்புறம் "எனக்கு அப்படி எதுவும் தோணவே இல்லையடா அவன் மேல" என்று சொன்னதாகவும் நண்பன் சொன்னதும் சுந்தருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் பொண்ணுங்க அப்படித்தான் மொதல்ல சொல்வாங்க. அப்புறம் கன்வின்ஸ் பண்ணிரலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
இந்த இடைவெளியில் அவனுக்கும் ஒரு வேலை கிடைக்க கொஞ்சம் மனம் திசை திரும்பியிருந்தது. இருந்தும் விடுமுறை தின தனிமைப் பொழுதுகளில், பேரூந்துக்கு காத்திருக்கும் தருணங்களில், சில அழகுப் பெண்களை பார்க்கையில், தனியாக அருந்தும் காப்பி பொழுதுகள் என தேவதை நியாபகம் அவனை கொஞ்சம் தொந்தரவு பண்ணியபடியே இருந்தது. கொஞ்சம் ஆள் மௌனித்திருந்தான் இந்த இடைவெளியில். இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இடைவெளி தவிர்க்க முடியாததாகிப் போனது. காதல் பரஸ்பரம் தோன்றும் வரை இந்த இடைவெளி எதிரியென்பது சுந்தருக்கு தெரிந்த பொழுதும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சந்திக்கும் வாய்ப்பு குறைந்து போனது. பேச நிறையத் தயக்கம். சுந்தர் மொக்கை போடுகிற வகையில்லை என்பது ஒரு பெரிய குறை!. இந்த இடைவேளையில் தேவதைக்கு வேறொரு நல்ல வேலை கிடைக்க வட இந்தியா கிளம்பி போய்விட்டாள். மறுபடியும் பெரிய இடைவெளி. இடையிடையே அவள் சென்னைக்கு வரும் பொழுது அவள் வீட்டிலேயே சந்திக்கவும் முயன்றான். ஒன்றிரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. அதெல்லாம் காதல் வரவைக்க, அவன் காதலை அவளுக்கு புரியவைக்க போதுமானதாக இல்லை. இவன் வேறு அமைதியரசன். இப்படியே ஒரு வருடம் ஓடியிருந்தது. மூன்று வருடங்களாக ஒரு பெண்ணின் காதலுக்காக, காதலைச் சொல்லி காத்திருப்பது பெருத்த வாதையாக இருந்தது சுந்தருக்கு. அவளில்லாத சமயங்களில் அவள் வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் பேசி விட்டு வருவது சுந்தரின் அரிதான வாடிக்கை.அம்மா ஓகே. பொண்ணு மனசு தெரியலையே!.
அதிகம் பேச தயக்கம் செல்போனில். அதனால் நண்பன் மூலமாக தேவதையின் நிலவரங்களை அவ்வப்போது தெரிந்து கொண்டான். அவள் இன்னமும் அதே மனநிலையில் தான் இருப்பதாக நண்பன் சொன்னான். அவள் வடக்கே எங்கேயோ, இவன் சென்னையில். எங்கிருந்து காதல் வர்றது, வளர்றது. வாடா இந்தியாவில் அவளை பார்க்க நேரில் வருவதாக சுந்தர் சொன்ன பொழுதுகளில் வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள் தேவதை. தேவதை நமக்கில்லை என்று ஏதோ அசரீரி மனதுக்குள் சொல்லத் தொடங்கியது சுந்தருக்கு. இன்னும் மௌனமாகிப் போனான். அந்த வலி அவனுக்குத்தான் தெரியும் என்பதால், நண்பனும் ஒன்றும் சொல்லவில்லை. இடையில் அவள் பரஸ்பர நண்பனின் நண்பன் ஒருவன் மீது அவளுக்கு காதல் வந்து, வீட்டில் பெற்றோரை கன்வின்ஸ் பண்ண முயற்சி செய்து கொண்டிருப்பதாக அவள் சொன்னதாக நண்பன் சொல்ல, இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்து ஓட, இரெண்டொரு துளி கண்ணீரோடு அமைதியாகிப் போனான் சுந்தர். பத்து மாதங்களாக கர்ப்பத்தில் தாங்கி உணர்வையும், உணவையும் சேர்த்து பார்த்து பார்த்து வளர்த்த பிஞ்சு குழந்தையின் இறப்பில் ஒரு தாய் உணரும் வலியினைவிட ,மேலான வலியாய்ப் பட்டது இந்த இரண்டரை வருட காதல் பொய்த்துபோவது, அழகாய் தெரிந்த உலகம் இப்போது அசூயையாய் தெரியத் தொடங்கியிருந்தது. அதிகம் புழங்காத அறையின் மூலை பெரும்பாலும் இவன் வசிப்பிடமாகிப் போனது. எதன் மீதும் பிடிப்பில்லாத வாழ்க்கை சூழ்ந்துகொள்ள தன் மீது தேவதைக்கு ஏன் காதல் வரவில்லை என்று குழம்பிப்போயிருந்தான். இருவரும் பரஸ்பரம் பார்த்துக்கொள்ள, பழக்கிகொள்ள ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதுவும், இருந்த பொழுதுகளை இவன் இயல்பு காரணமாக முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை எனவும் நண்பன் சொல்கையில் அமைதியாயிருந்தான். எல்லாம் போன பிறகு காரணம் என்னவாயிருந்தாலென்ன. காதல் தோல்வி அவனை சோகப் பாடல்களை நோக்கி திருப்பியிருந்தது. மனம் கனத்து போகிற பொழுதுகளை வாழ்க்கை அறிமுகப்படுத்துகிற பொழுதெல்லாம் தேவதை நினைவுகளை அணிந்து கொள்வதை வழக்கமாகி கொண்டிருந்தான். நிறைவேறும் முதல் காதல் வாழ்வளிக்கும் என்றால், நிறைவேறாத முதல் காதல் வருடிக்கொடுக்கும் என உணர்ந்திருந்தான் சுந்தர். சில பாடல்கள், சில மனிதர்கள், சில சாலைகள், சில பொருட்கள் என நியாபகம் முழுவதும் தேவதை ஆக்கிரமித்து கொள்கிற பொழுதுகள் அவனை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பதாய் நம்பி கழிகிறது இன்றும் அவனுக்கு வாழ்க்கை. தேவதை கானல் நீராய் மறைந்த தருணங்களில் அவன் அடிக்கடி கேட்கும் பாடல் இந்த "அழகி" படப் பாடல். எப்போது இந்தப் பாடலைக் கேட்டாலும் தேவதை நினைவு வரும் சுந்தருக்கு.
இப்போதும் அதே நினைவுதான். அவன் நிறுத்தம் வந்திருந்தது. நடத்துனர் அவனை உசுப்பி கொண்டிருந்தார். "சுந்தர், நீ இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துட்டுப்பா, இறங்குப்பா" என்றதும் சுயநினைவுக்கு வந்தான். அவன் பஸ்சிலிருந்து இறங்கியிருந்தான். தேவதை நினைவுகளிருந்தும் தற்காலிகமாக.
சொல்ல மறந்துட்டேன்! தேவதைக்கு அவன் வைத்திருந்த செல்லப்பெயர்தான் "மாமி".
முழுவதுமாக படித்தேன்.. உணர்வோட்டங்களை மிகச்சாதூர்யமாக அளவான படுத்தலில் கதைக்குள் பணிக்கச்சொல்லியிருக்கிறீர்கள்! அருமை...வாழ்த்துக்கள்!
ReplyDeleteThanks Nanba for the comments...
ReplyDelete