கோமணம் கட்டியவன்
கோமணம் கட்டியவன் :-
கொந்தளித்த கடலாய்
கடந்திருந்தது இரவு
அடங்கி வற்றிய
ஆழியாய்
விடிந்திருந்தது பகல் இன்று...
நேற்று நீ நிறைய
பேசியிருந்தாய்
நானுந்தான்
நீ என்னைப்பற்றி
என்னிடமல்லாது
நான் உன்னைப் பற்றி
என்னிடம் மட்டும்...
நேற்றைய மாலையில்
நான் அழவேண்டாம்
என்று சொல்வதற்க்காக
கொஞ்சம் மழை
பெய்திருந்தது
மழை மறைந்திருந்த
இரவில்
நான் கொஞ்சம்
அழுதிருந்தேன்
எனக்கே தெரியாதவாறு...
என்றோ புரிந்த
என்னை நீ
நானாக முடிவு செய்திருந்தாய்
அந்த நான்
பழைய நான்
என்பதை சொல்லவே
வாய்ப்பளிக்காத நீதான்
புதிய நீ...
உன் வெளிவட்டம்
அலங்காரங்கள்
மிகுந்தது
அறிவுத்தனம் நிரம்பியது
ஆச்சர்யம் அழிக்கக்கூடியது
நீ வெளிவட்டத்தில்
அமானுஷ்யமாகவும்
அறிவிற்சிறந்தும்
இருப்பினும்
உன் அகமாகிய உள்வட்டம்
பயத்தால் பீடித்திருக்கிறது
அறிவின்மையின் ஆதி நிழலாய்
பேதமையின் பெரும்பொருளாய்
ஒளியின்றி இருண்டுகிடக்கிறது
அதை பெரும்பாலும்
மறைத்து ஏமாறுதல்
இயல்பு உனக்கு...
நான் அங்கேயே
இருந்திருக்க வேண்டும்
உள்வந்தது
நான் அறியாது
நீ அறிந்தே நிகழ்ந்தது...
தலையில் எரியும்
ஒளிவிளக்கின்
வெளிச்சத்திற்க்காக
தலையே
இழந்துத் திரிகிறாய் நீ
நீ மட்டும்...
வாழ்வு குறித்தும்
வாழ்தல் குறித்தும்
பெரும் தம்பட்டம்
அடித்து பேசுகிறாய்
காட்டுப்பூனையிடம்
கட்டுண்டு கிடக்கும்
கருங்குயிலுக்கு
என்ன தெரியும்
வாழ்வுபற்றியும்
வாழ்தல் பற்றியும்...
நீ சிறகுகளை
அடகுவைத்துக்கொண்ட
சிறைப்பறவை
சுதந்திரம் பற்றிப்பேச
சுதந்திரத் தகுதியில்லை
உனக்கு...
அம்மணமாய்
அலைகின்ற ஊரில்
கோமணம் கட்டியவன் நான்
கோமாளி நீ.
Comments
Post a Comment