மீசைக்கார நண்பா :-
மீசை தமிழக ஆண்களின் தகுதிக் குறியீடு. வேலை நிமித்தமாக வடக்கே செல்லும் போதெல்லாம் வழவழவென சவரம் செய்த முகங்களை பார்க்கும் போது ஆற்றங்கரையில் துவைக்கப் போட்டிருக்கும் வெள்ளை சீனிக்கல் நியாபகம் வரும்.ஆண்கள் மீசை வைப்பதே ஆரோக்கியமற்ற குறியீடாக கருதிவந்த குடும்ப பாரம்பரியம் என்னது. நான் சிறுவயதில் பார்த்த என்னுடைய எல்லா தாத்தாக்களும் ஏனைய உறவு ஆண்களும் மீசை வைத்திருந்தது இல்லை வெகுசிலரைத் தவிர. "மீசை நமக்கு அழகில்ல' என்று இன்றும் எனது அம்மா கூறுவதிலிருந்து மீசை குறித்த எனது குடும்ப பெண்களின் மனநிலையினை கொள்ளலாம். கொஞ்சம் பெரிதாக மீசை வைத்திருந்த எனது மாமாவை "ரவுடிப்பய,பெரிய இவன்னு நெனைப்பு" என்று அவர் காது படாமல் எங்களிடத்தில் திட்டுவார் எங்கள் அப்பா தாத்தா. அவர் காவல் துறையில் பணிபுரிந்த போதும் காவல் துறையின் தார்மீக அடையாளமாக கருதப்படும் மீசையினை அவர் வைத்துக்கொண்டதே இல்லை. அவருக்கு மெல்லிசாக தாடையில் முடிவளர்ந்து நான் பார்த்ததேயில்லை அவர் இறக்கும் தருணம் தவிர்த்து. தினமும் அதிகாலையில் எழுந்து முகச்சவரம் செய்வதை ஒரு தினக்கடனாக அவர் செய்து வந்தார். இத்தகைய குடும்ப சூழலில் வளர்ந்த்ததால் எதிர்மறை எண்ணமாக எனக்கு மீசையின் மேல் ஆர்வம் வந்திருக்கும் என எண்ணுகிறேன். இன்றைக்கும் பெரிய மீசை வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கோபக்காரர்கள் என்றும் அவர்களை பார்த்தால் ஏற்படுகின்ற ஒரு பயம் அதன் பொருட்டு கொடுக்கப்படுகின்ற போலி மரியாதை போன்றவையும் மீசை மேல் ஆண்களுக்கு இருக்கிற ஒருவித ஆசைக்கு உள்ள உளவியல் காரணமாக இருக்கலாம் என்றும் எண்ணுகிறேன். ஒரு சரியான பக்குவப்பட்ட மனிதனுக்கு புற அலங்காரங்களில் பெரிதாக ஆர்வம் இருக்காது என்று இன்றளவும் நம்புகிறவன் நான். நான் இன்னும் கடக்கவேண்டிய தூரம் நிரம்ப இருக்கிறது என்பதை இந்த ஆசை இன்னும் தீர்க்கப்படுத்துகிறது என நம்புகிறேன். இந்த மாதிரியான சிகை சம்பத்தப்பட்ட எண்ணங்களுக்கு மருத்துவரீதியாக பிட்யூட்டரி சுரப்பியும் அதன் சுரப்பான டெஸ்ட்ரோஜன் சுரப்பும் ஒரு காரணம். அதிக அளவில் ஆண் ஹார்மோன் சுரப்பு உள்ளவர்களுக்கு இயல்பாகவே தாடையில் அதன் அருகாமைப் பகுதிகளில் முடி வளரும் என்பதுவும் அறிவியல் உண்மை. ஆனால் அதே ஹர்மோன் மண்டையில் எதிர்புறமாக வேலை செய்வது ஏதோ உள்குத்தோடுதான் என்பது எரிச்சலடையச் செய்யும் உண்மை.!!!
மீசை குறித்து இணையத்தில் தேடுகையில் ஏகப்பட்ட தகவல்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. மீசைக்கு அவ்வளவு நீண்ட வரலாறு இருக்கிறது.http://en.wikipedia.org/wiki/Moustache. நேரம் கிடைக்கையில் இந்த சுட்டியை பாருங்கள்.
"எனக்கு கணவனாக வருகின்றவனுக்கு பெரிய மீசை இருக்க வேண்டும்" என பல நவீன யுவதிகள் சொல்வதிலிருந்து ஆண்களின் ஆசையின் அடிநாதத்தை உணரலாம். இன்றும் பல முடிதிருத்து நிலையங்களில் ஆண்கள் அங்கு உள்ள வேலைக்காரர்களை மீசைக்காக படுத்தும் பாட்டினை பார்க்கையில் நமது நவீன இளைஞர்களின் மீசைபால் இருக்கும் வெறியினை புரிந்து கொள்ளலாம். சங்க காலத்திலிருந்து சாப்ட்வேர் காலம் வரை மீசை என்பது ஆண்மகனில் அடையாளம், அதிகாரத்தின் சின்னம் என்றால் அது மிகையாகாது எனது மீசைக்கார நண்பர்களே!!!
Comments
Post a Comment