மர சொந்தம்

மர சொந்தம் :-


வேனைக்கால பொழுதுகளில் 
குருவிகள் கொத்தி 
கொட்டிய அதன் விதைகள்  
விழுங்கப்பட்டன 
கப் ஐசும், குச்சி ஐசுமாக
எங்களால்...

பலகாலங்களில்
பலமாக மட்டைப்பந்து 
பயில பயன்பட்டிருக்கிறது 
பசுமை நிழல்...  

அவ்வப்போது 
உறவு பூசல்களை 
ஊமையாய் நின்று 
கவனித்திருக்கிறது...

மாமன், மச்சான்கள் 
குடித்து உருண்டதுவும் 
அத்தை மாமாக்கள் 
அடித்துக் கொண்டதுவும் 
அடியில் நிகழ்ந்திருக்கின்றன...

கூடிக்களித்தக் 
குடும்பங்கள் நாடோட 
தனித்திருந்த சோகத்தில் 
தன்மை இழந்து 
தனித்திருந்தன ஒரு வருடம் 
என்றுமில்லாதவாறு...

அடுத்த கோடைக்கு 
அதன் அடிமடி தேடி 
ஆனந்தமாய் போகையில் 
வெட்டி விறகாக்கி இருந்தது 
வாழ வழியில்லாத 
வறுமை சொந்தம் 
இரண்டு தலைமுறைப்பார்த்த  
இனிய மர சொந்தமதனை...

எனது தலைமுறைக்கு 
எதைக்காட்டி அறிமுகப்படுத்த 
இதுதான் 
எங்கள் புண்ணிய 
புளிய, வேப்ப மரமென்று.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔