Posts

Showing posts from August, 2014

புகைப்படங்களும் வாழ்வும்

Image
புகைப்படங்களும் வாழ்வும் :-      புகைப்படங்களும் வாழ்வும் எங்கனம் பொருந்திப்போகின்றன?. எந்த புள்ளியில் புகைப்படங்கள் வாழ்வை இன்றியமையாததாக்குகின்றன?. புகைப்படங்களே இன்றி கழிந்துபோன வாழ்வு எதையாவது இழக்கின்றதா?. இப்படி புகைப்படங்கள் குறித்த சிந்தனைகள் அதிகம் எழுந்து அலைகழித்ததின் விளைவே இந்த பகிர்வு.      எனது முதல் புகைப்படம் நான் பிறந்த முதலாம் வருடம் எடுக்கப்பட்டது. அதைப்பார்கின்ற போதெல்லாம் நான் என் குழந்தைப்பருவ கற்பனையில் முழ்கிப்போவேன். நான் எப்படி தவழ்ந்திருப்பேன்?.. கை அல்லது விரல்களை  சூப்பியிருப்பேனா? எப்படி ஊர்ந்திருப்பேன்? என எல்லாக்குழந்தைகளும் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் நான் எவ்வாறு செய்திருப்பேன் என்ற கற்பனை என்னுள் மிகையாகத் தோன்றி மகிழ்விக்கும். நாம் பிறந்து கடந்து வந்த, நமது நினைவில் இல்லாத நாட்களைப் பற்றிய கற்பனைகளை நமக்குள் பூக்கச் செய்கிற சக்தி ஒரு பழைய புகைப்படத்துக்கு உண்டு. அது மட்டுமின்றி அந்த வாழ்வியல் சார்ந்த, காலச்சாரம் சார்ந்த எச்சங்களை, விழுமியங்களை ஒரு புகைப்படம் ஒருநொடிப்பொழுதில் உணர்த்திவிடும். ஆய...

போதைக்கு அடிமையாகுங்கள்

Image
போதைக்கு அடிமையாகுங்கள் :- இந்த போதைமனது ஏன் எப்போதாவது வாய்க்கிறது?. ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கையில், வாகனத்தில் பயணிக்கையில், செல்பேசியில் யாரோடோ கதைக்கையில், உணவருந்துகையில், கழிப்பறையில் உட்காந்திருக்கையில் என வாழ்வின் அனைத்து நிகழ்விலும் அடிக்கடி நுழைந்து மகிழ்விக்கும் குழந்தைகள் போன்ற அதிபோதை கவிதை மனநிலை. எப்போதும் எதையும் கவி வடிவமாக்க, மூத்திரம் வந்து முட்டிக்கொண்டு இருக்கிற அவசரத்தோடே அலைகிறேன்.  இன்னும் ஆழமாக யோசித்து தெளிந்து தியானம் போல் இதில் மூழ்கவேண்டும். அதற்க்கு இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், எழுத நிறைய யோசிக்க வேண்டும். முடிவில் எழுத்துதியானம் என்ற ஒன்றினை கண்டறிந்து நான் வடிவமைத்தாலும் வடிவமைக்கலாம். யார் கண்டது.!!! சிறுவயதில் காலி தீப்பட்டி நுனியில் சணலினை கட்டி இழுத்துச் சென்றது போல் இழுத்துச் செல்கிறது இந்த போதை. வாலிபத்தில் வரும் காமத்தின் போதையைவிட இந்தப்போதை அலாதியானது. ஆனந்தமானது.  வாசித்தோ வருடியோ அடிமையாக இணைந்திருங்கள் இந்த போதையோடு.

நோய் நிமித்தம்

Image
நோய் நிமித்தம் :- மரத்து நின்றிருந்தன  மரத்தின் இலைகள்  எப்பொழுதும்  ஜன்னல்தொடும் காற்றினை  என்ன இன்னலோ காணவில்லை அரைத்த மாவு  புளித்துக்கிடந்தது  அழகுவட்ட தோசையாகாது  பல்லிகளும் கரப்பான்களும்  பயமற்று சுற்றித்திரிந்துகொண்டன  அதிகபட்ச சத்தமென்பது  அறைக்குள்  அமைதியாய் சொட்டும்  அந்தத் துளிநீரிடமிருந்துதான்  மின்விசிறி சுற்றும்  மின்சார சந்தத்தை  கவனிக்கப் பழகியிருந்தது காதுகள்  காலனை கனவுகளில்  தரிசிக்கத் தொடங்கியிருந்தேன் நான் சவக்கலை பூண்டிருந்தது வீடு அவளுக்கு ஏன்தான்  காய்ச்சல் வருகிறதோ. 

ஆகச்சிறந்த பருவம் :-

Image
               நான் வாழ்கின்ற வாழ்க்கையிலே ஆகச் சிறந்த பருவம்  இதுவாகத்தான் இருக்கும். நான் எடுத்த புகைப்படங்களில் ஆகச்சிறந்ததாக இருக்கும் இந்த புகைப்படம் போல. வாழ்வின் எந்த ஒரு சிறந்த பருவங்கள்  பெரும்பாலும் கடக்கும்போது தெரிவதில்லை. எனது பால்யமும், பள்ளிக்காலங்களும் சிறந்த பருவங்கள்  என்பேன். அப்படியெனில் இந்த பருவம் மட்டும் ஏன் ஆகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது என்னால்?? நான் எனக்கே சொல்லிக்கொள்ளும் பதில் இது, சிறந்த தருணங்களை /பருவங்களை  கடக்கும் பொழுது. அந்த தருணங்களில் திளைத்திருக்கும் பொழுது நீங்கள் அவற்றினை ஆழமாக உணரமுடிந்தால் நீங்கள் மனிதர் ஆவீர்கள், வாழ்தல் எனும் எளிய ரகசியத்தின் கடின பூட்டு உங்களுக்கு திறக்கப்படும். இத்தகைய நானே வகுத்துக்கொண்ட வரையறைகளுடன் கூடிய ஆகச் சிறந்த தருணம் இது. அத்தகைய நீண்டதொரு தருணத்தின் இடையில் நின்றுகொண்டு இதை எழுதுகிறேன். பால்யமும், பள்ளிக்காலங்களும் ஏன் இன்று வரை  பெரும்பாலானவர்களுக்கு மிகப் பிடித்திருக்கிறது. அங்கு நமக்கு எதிர்காலம் பற்றிய பிர...

பரத்தல்

Image
பரத்தல் :- நான்கா ஒன்பதா  என்றாள்  நான்கு என்றேன்  நான்கு பரத்தப்பட்டன  மறுபடியும்  நான்கா ஒன்பதா  என்றாள்  இம்முறை  ஒன்பதென்றேன்  ஒன்பது பரத்தப்பட்டன  நான்கும் ஒன்பதும்  மாறிமாறி வந்ததில்  எல்லாம் எடுத்து  பரத்தப்பட்டிருந்தன  திடீரென வந்த  பெரிய அவள்  அறிவில்லையா உனக்கு  என்கையில்  யாருக்கு அறிவில்லை  என்பதுபோல்  சிரித்துக்கொண்டேன்.

உலகப்பிரச்சனை

Image
உலகப்பிரச்சனை :- அது என்று  வந்ததோ  எப்படி வந்ததோ  தெரியவில்லை... ஆனால்  வந்துவிட்டது  அதுவும் அங்கு... ஒழுங்காக  உள்தள்ள  முடியவில்லை  முண்டித்தள்ளினால்  முடிவற்ற எரிச்சல்... யாரிடம் போய்சொல்ல  இதுதான் பிரச்சினையென்று  வெட்கக்கேடு... விட்டால்  தன்னாலே  சரியாப்போய்டும் எனத் தேற்றிக்கொண்டேன்... இந்த உள்நாக்கு சிறுபுண்  உலகப்பிரச்சனையப்பா!!!   

மூன்றாம் ஆண்டில் வேலுவின் கவிதைகள்

Image
மூன்றாம் ஆண்டில் வேலுவின் கவிதைகள் :-                  இப்பொழுதான் ஆரம்பித்தமாதிரி இருந்த இரெண்டாம் ஆண்டு முடிந்து நேற்றோடு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளேன். நிறைய மாற்றங்கள்,  நிறைய கற்பிதங்கள் என ஒரு முதிர்வினை  தந்துள்ளது எனக்கு இரெண்டாம் ஆண்டு. கவிதை தொடர்பான சில பெரிய நண்பர்களை சந்திக்க நேர்ந்தது ஒரு பெரிய வரம். அவர்கள் மூலமாக எனது கவிதைகளை திருத்திக்கொள்ளவும், நான் தேடிக்கொண்டிருந்த அடுத்தக்கட்டம் தொடர்பான அறிவினையும் பெற முடிந்தது. நன்றிகள் அவர்களுக்கு. நான் இங்கே யாரையும் குறிப்பிட்டுச் சொல்லப்போவதில்லை.ஏனெனில் எல்லா நண்பர்களுமே ஏதோ ஒருவகையில் இந்த கவிதை வருடத்தை நகர்த்த உதவி புரிந்திருக்கிறார்கள். அனுபவங்களும், பகிர்வுகளும், சிந்தனைகளும் என எல்லாவற்றையும் நான் எனது சூழலிலும், சுற்றியுள்ள மனிதர்களிடமும் இருந்தே கிரகித்து கவிதையாக கிறுக்கியுள்ளேன். எனவே எல்லோருக்கும் நன்றிகள்.              எனது சில கவிதைகள் சில திருத்தங்களுக்குப்  பிறகு திரு.அபிலாஷ் அவர்கள் நடத்த...

அது

Image
அது :-  ஒருமுறையாவது  அதைச் சொல்லிவிடேன்  என்கிற அவன்  அது மட்டும்  இந்த ஜென்மத்துல  சொல்லமாட்டேன்  என்கிற அவள்  அவிழ்க்காத  அலைவரிசையாய்  அவளுக்கும்  அவனுக்குமிடையே  அகப்பட்டுக் கொண்டிருக்கிறது  அது!!!.

சுதந்திர பிரஜைகள்

Image
சுதந்திர பிரஜைகள் :- சிறப்பு நிகழ்ச்சிகள்  பார்த்தாயிற்று  சிறிதாக இனிப்பும்  விழுங்கியாயிற்று...  மூவர்ண நிற கொடியையும்  தோரணங்களையும்  பறக்கவும்  தொங்கவும்  விட்டாயிற்று...  சுதந்திரம் தொடர்பான  பதிவுகள் அனைத்தையும்  முகப்புத்தகம் முதல்  தினப்பத்திரிக்கை வரை  படித்து அலசியாயிற்று...  வெள்ளைக்காரனது  வெறியையும்  வேற்றுமையினை  நம்முள்  விதைத்ததையும்  வேண்டுமட்டும் விவாதித்தாயிற்று...   வெள்ளைக்காரனுக்கு  இன்று விடுமுறையில்லை  என்று பன்னாட்டுக் கம்பெனிக்கு  பரிதாபமாக  வேலைக்கு செல்லும் அவள்களிடம் மட்டும்  "இனி வெள்ளைக்காரனுக்கு நீ வேலை செய்ய வேண்டாம்"  என்று சொல்ல மனம்வராத  சுதந்திரப் பிரஜைகள் நாம்.

வாசிப்பும் எழுத்தும்

Image
வாசிப்பும் எழுத்தும் :-  பண்டித ஜவர்கலால் நேரு பற்றி நட்வர்சிங்கின் "one life is not enough" சுயசரிதைப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தவற்றைஆனந்தவிகடனில் படித்தேன். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், சென்ற ஆட்சி வரை இந்தியாவை ஆண்டு வந்த நேரு பரம்பரைக்கு அடிகோலியவர், இன்றைய இந்தியாவின் முதுகெலும்பாகிய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கரின் உதவியோடு நிறுவியவர் எனப் பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தக்காரரான நேரு அவர்களின் இன்னொரு பக்கம் தோல்வியில் துவண்டு வாழ விரும்புவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை அத்தியாயம். 1922 முதல் 1945 வரையிலான காலங்களில் 10 வருடங்கள் சிறையிலிருந்தது, அப்போது அவரது சொந்த வாழ்க்கையில், மனைவிற்கு  ஏற்பட்ட உடல்நலக்குறைவு, தாய்க்கு மாரடைப்பு, குழந்தைகளை அடிக்கடி பள்ளிகள் மாற்ற வேண்டிய சுழல், இந்திராகாந்திக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு, காங்கிரஸ்,காந்தி  உடனான  கருத்து மோதல்கள் என நேரு அவர்கள் உடைந்து அழுத தருணங்கள் அவை என நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளும் அதனால் ஏற்பட்ட குழ...

சுரப்பு

Image
சுரப்பு  :-  பெரிய வெள்ளை  பௌர்ணமி நிலவுக்கும்  பெண்ணின் வதனத்துக்கும்  ஏன் எல்லா காலங்களிலும்  ஏகத்திற்கும் ஒப்பீடு??!!  ஆழ்ந்து உற்றுப்பார்த்தும்  அறியமுடியவில்லை?? இருங்கள் எதற்கும்  இன்னொருமுறை  பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். சுரப்பு குறைந்துவிட்டது போல!!!.
Image
மனிதர்களா நாம்??? :- இன்று வடபழனி விஜயா மால் சென்றிருந்தபோது அங்கு சுதந்திர தின கொண்டாட்டத்தை மனதிற்கொண்டு தேசத்தலைவர்களின் படங்களை அவர்களது சிறு வரலாற்றுப் பின்னணியோடு காட்சிப்படுத்தியிருந்தார்கள். அங்கிருந்த பல தலைவர்களின் புகைப்படங்களி ல் நான் வ.உ.சி . புகைப்படத்தின் அருகிலேயே வெகுநேரம் நின்றுகொண்டிருந்தேன்.அவரது வ.உ.சி. என்ற பெயரின் முழு நீட்சி வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்பதையும் தெரிந்துகொண்டேன். சுதந்திரப் போராட்டதிற்க்காக தனது சொத்து முழுவதையும் ஈந்து கடைசியில் தனது உயிலில் மளிகைக்கடை பாக்கியை எழுதி வைத்து செத்துப்போன வ.உ.சி. நினைவில் வந்ததுதான் நான் அவரது புகைப்படத்தின் அருகிலேயே நின்றதுக்கான காரணமாயிருக்கும் என இதை எழுதும் போது நினைக்கிறேன். தனது இறுதி நாளில் பெரம்பூரில் வியாபாரம் ஆகாத ஒரு பெட்டிகடையோ மளிகைக் கடையோ வைத்திருந்தார் வ.உ.சி என்று தெரிந்த தருணம் முதல் இந்த நினைக்கும் தருணம் வரை வலிக்கிறது. நமது சமுகம் தொன்றுதொட்டே இப்படித்தான் இருந்திருக்கிறது. மனிதர்களே இல்லை நாம்.

நீயா நானா

Image
நீயா நானா :- குறைந்த பட்சம்  அதிகாலை  ஆறுமணிக்கே  எழுந்துவிடுவாள்... எல்லோருக்கும் காப்பி  பூட்டிஆச்சிக்கு தனக்கும் ஒரு காலையுணவு  மகனுக்கும், மருமகளுக்கும்  பேத்திக்கும் வேறொரு காலையுணவு... பகல் பதினோரு மணிக்குள்  மதிய உணவு பின்பு  வீடு கூட்டல்  மாவு அரைத்தல்  பொடி திரித்தல் பேத்திக்கு உணவூட்டல்  என இரவு பத்துமணிவரை  தொடரும் வேலைகள்...  எல்லாம் முடித்து  கையும்,காலும்   உளைவதாக  தனக்குத்தானே தைலம் தேய்த்துக் கொண்டிருப்பாள்  சுயவிருப்ப ஓய்வு எடுத்தும் சும்மா ஓய்வெடுக்காத அம்மா... நாங்களெல்லாம்  நாள் பூராவும்  நீயா நானா  பார்த்துக்கொண்டிருப்போம்.        

பேறு

Image
பேறு :- ஒரு இனிப்பின்  உறை  மெதுவாக அகற்றப்படுகிறது...  விழிகள் வழியே கேட்டு பின்பு விந்தை வாயின்  வழியேயும் கேட்கிறேன் "எனக்கு" என்று...   "தரமாட்டேன் போ" என அவள் முடிக்கையில்  எல்லாப் பேறும் பெற்றவனாகிறேன்  இனிப்பினைத்தவிர.  

தொலைத்தல்

Image
தொலைத்தல்  :- :- எப்படித் தொலைக்க  பழுப்பேறி  பிசுபிசுத்து கெட்டவாடை தாங்கி  எனக்குத் தெரிந்த  என்னையும்  உலகத்திற்க்கான  என்னையும்  ஒருசேர அழுக்காக்கி  கொண்டிருக்கும்  அதனை... விண்ணிலிருந்து  மண்ணால்  என்மேல்  பொழிகின்ற  மழைதனில்  நனைந்து நனைந்து சுரண்டிக் கழுவுகிறேன் -முடிவில்  என்னிலிருந்து அகன்றோடி  மண்ணிலும் பிறகு  விண்ணிலும் கலந்து  மறுபடியும் மழையாக  என்மேல் பொழிவதற்குள்  மழையீரம் துடைக்கவேண்டும் நான்  உன் நினைவுகளைத் தொலைக்க. 

மீதமிருக்கிற தூக்கம்

Image
மீதமிருக்கிற தூக்கம்  :-  அந்தத் தூக்கம்  இன்னும் மீதிமிருக்கிறது...  உன் கனவுகளால்  கலைந்த தூக்கம்  உன் நினைவுகளால்  நிறையாத தூக்கம்  இன்னும் மீதமிருக்கிறது... உறக்கத்தின் ஆழத்தில்  நான் மரித்துபோய்  மீண்டுவந்த தினநாட்களின்  அந்த தூக்கம்  இன்னும் மீதமிருக்கிறது... தலையணையை  அழுத்திக் கட்டிக்கொண்டு  அடிவயிறு அழுந்தப் படுத்துறங்கிய அன்றைய  ஆழ்நிலைத் தூக்கம் இன்னும் மீதமிருக்கிறது...     உண்டுகொழுத்து  சென்றுசேர்வேனோ எனச்  சிந்திக்க வைத்த  செம்மைத் தூக்கம்  இன்னும் மீதமிருக்கிறது... உன் காதல் பொருட்டு  காலியான தூக்கம்  வாழ்தல் முடியும் வரை  வசப்படாது  இன்னும் இன்னும்  மீதமிருக்கிறது.

பெண்

Image
பெண் :- பெருத் தமுலையும் கொஞ்சஞ் சிறுத்த  கொடி யிடையும் கருத் தப்பிட்டந்  தொடுங் கூந்தலும் மட்டு மன்றி பெரியப்பே ரழகுமனங் கொண்டவள் பெண்.

பட்டுப்பூச்சியென வாழும் பறவை

Image
பட்டுப்பூச்சியென வாழும் பறவை   :-    வெட்டப்பட்ட  சிறகுகள் தன்னை காப்பதாயென்னும் ஒரு பறவையை  பார்க்க நேர்ந்தேன்... தனது பறக்கும்  எல்லையை  தவறாக சொல்லித்தந்த  காரணத்தால்  தான்தோன்றித்தனமாய் அது கிணற்றுக்குள் பறந்து  மகிழ்ந்து கொண்டிருந்தது... அதன் அலகினை அழுத்தாது பிடித்து  வானம் காண்பித்தேன்  உயரே பறக்கையில்  உள்ளம் கிளர்வதை  உணர்ந்து பார்க்கச் சொன்னேன்... நான் சொல்கையில் வியந்து  என்னோடு பறக்க  எத்தனிக்க  பயந்து நடுங்கியது  உள்ளம் அழகான  ஊனமுணர்ந்த அந்த  உயர்பறவை... பறத்தல்தான் பயமென்றால்  பறத்தல் செய்வதாய்  நீ  நினைத்து இன்பங்கொள் என்று நேசத்தில் சொன்னேன்... பறத்தல் பயம்  நினைத்தலிங்கு நெடுங்குற்றம் ஆகையால் கிணறுதாண்டி  பறக்கவும் வேண்டாம்  பறத்தலை நினைக்கவும்  வேண்டாம் எனப் பதிலுரைத்ததந்த பட்டுப்பூச்சியென வாழும்  பாவப்பட்ட பறவை. 

பூச்சிகள் தேவலாம்

Image
பூச்சிகள் தேவலாம் :- சில நிமிடங்களே  நிகழ்ந்திருக்கும் சிறிய உரையாடல் அது... எப்போதோ விடுபட்ட  உரையாடலின்  எச்சமாய் தோன்றியிருக்கலாம்  அவளுக்கு அது அவனுக்கு அப்படியல்ல... உரையாடல் நிகழ்ந்த  சிறு பொழுதிடை  ஒரு சோடி  பல்லிகளும்   எறும்புகளும்  கரப்பான்களும்  கலந்து பிரிந்திருந்தன... பூச்சிகள் தேவலாம். 

நப்பி சாமான்யன்

Image
நப்பி சாமான்யன் :- உரக்க பெய்துகொண்டிருந்தது வெளியில் மழை உள்ளேயும்  உசுப்பேத்துவதுபோல்... உடுப்பு தொப்பலாக உள்ளம் நனைய உருகும் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டு மழையில் நனைய ஓவ்வொரு முறையும் ஆசை... மழையில் நனையின் சளிபிடித்து ஜன்னி வந்தால் செலவுக்கு எங்கே போக எனச் சிந்தித்து ஒவ்வொரு முறையும் நகரத்து மழையை நழுவவிடும் நப்பி சாமான்யன் நான் சினிமா கதாநாயகர்களைப் போலன்றி.

அழகியல் அவதானிப்பு

Image
அழகியல் அவதானிப்பு :- அடுக்கிவைக்கப்பட்ட  அழகுடன்  அலமாரிகள்  துடைத்துவைத்த  தூய்மையோடு தரைகள் சுண்ணம்பூசிய  வண்ணம் கலையாதிருப்பது சுவர்கள் தூசிபடியாத  மூலை  முக்காலி சிற்பம் சுருக்கமின்றி  விரிக்கப்பட்ட  படுக்கை விரிப்பு இவைதான்  அழகியலின்  அவதானிப்பு  அன்று  கை பட்டு கலைந்த  அலமாரிகள்  மூக்கு நமக்க  மூத்திர நத்தமெடுக்கும் தரைகள்  வண்ணம் கலைந்து  சுண்ணம் கொட்டிய  சுவர்கள் மூலையில்   வேலையில் இல்லாத   முக்காலி சிற்பம்  அது இதுவென  அனைத்தும் கொட்டிய  படுக்கைவிரிப்பு  இலக்கணம் மாறிய  இதுதான்  இன்றைய  அழகியல் அவதானிப்பு  அவள் வந்ததால்.