ஆகச்சிறந்த பருவம் :-
பருவம் மட்டும் ஏன் ஆகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது என்னால்?? நான் எனக்கே சொல்லிக்கொள்ளும் பதில் இது, சிறந்த தருணங்களை /பருவங்களை கடக்கும் பொழுது. அந்த தருணங்களில் திளைத்திருக்கும் பொழுது நீங்கள் அவற்றினை ஆழமாக உணரமுடிந்தால் நீங்கள் மனிதர் ஆவீர்கள், வாழ்தல் எனும் எளிய ரகசியத்தின் கடின பூட்டு உங்களுக்கு திறக்கப்படும். இத்தகைய நானே வகுத்துக்கொண்ட வரையறைகளுடன் கூடிய ஆகச் சிறந்த தருணம் இது. அத்தகைய நீண்டதொரு தருணத்தின் இடையில் நின்றுகொண்டு இதை எழுதுகிறேன். பால்யமும், பள்ளிக்காலங்களும் ஏன் இன்று வரை பெரும்பாலானவர்களுக்கு மிகப் பிடித்திருக்கிறது. அங்கு நமக்கு எதிர்காலம் பற்றிய பிரஞ்கைகள் இல்லை. ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமது விருப்பம் போலே பெரும்பாலும் கழிந்திருக்கும், நிகழ்காலம் குறித்த சிந்தனைகளோ அவை வரையறுத்த செயல்பாடுகளோ இல்லாதிருந்ததாலேயே அதை நாம் ஆகச்சிறந்த பருவமென்கிறோம்.
எதற்க்கு இவ்வளவு பூடகம்? இந்த 31 ம் அகவையில் நிகழ்கின்ற பருவத்தினை ஆகச்சிறந்த பருவமென நான் சொல்லக் காரணம் என்ன? அலுவல் குறித்த விசயங்கள் கண்டிப்பாக இல்லை. இல்வாழ்க்கையில் ஏதேனும் நிகழ்ந்திருக்குமோ? என்றால் அதுவும் நேரிடையாக இல்லை. வயதாகிக்கொண்டே செல்கிறதே என்கிற நினைப்போ? இல்லை. இப்படி எந்த சாதாரண விசயங்களும் இல்லை. பிறகு என்னவாக இருக்கும். உங்களுடைய பூடகத்தை சற்றே அவிழ்த்திருக்கும் இந்தப் புகைப்படம்.
ஆம் ஆவலுடன் அவளுக்கு தகப்பனாக பெயருடனும், சக மனிதன் போன்ற மனதுடனும் கழிந்து கொண்டு நான் உண்மையிலேயே உயர்வாக வாழ்ந்து கொண்டிருப்பதனால் இது ஆகச்சிறந்த பருவம் எனக்கு. மகளுடன் கழிகின்ற தருணங்கள் எல்லோருக்கும் நடக்கிறதே? இதில் என்ன வியப்பு இருக்கிறது என எல்லோரும் போல் நீங்கள் எண்ணக் கூடும். மகள்களோடு தகப்பன்போல் கழிவதல்ல இந்த ஆகச்சிறந்த தருணம்.. சிறுவயது மகள்களோடு பெருவயது தகப்பனாக கழிவதில் என்ன பேரின்பம் இருக்க முடியும். மனதில் பெரியவனாகவும், முகத்தில் சிறியவனாகவும் வேடமிட்டுக்கொண்டு நாம் எல்லோருமே க(ழி)ளித்திருப்போம். நான் குறிப்பிடுகிற தருணம் மனதிலும், உடலிலும் அவளோடு சகவயது சிறுவனாக நீங்கள் கழிக்க முடிந்தால் நீங்கள் ஆகச்சிறந்த தகப்பன். கழித்த தருணம் ஆகச் சிறந்த தருணம். ஒரு சுவற்றுக் கிறுக்கலில், நீருற்றிக் குளிக்கையில், தேநீரினை கொட்டிக்கொண்டே அருந்துகையில், மணல் வீடு கட்டி இடிக்கையில், இடையில் இடுக்கிக்கொண்டு நடக்கையில், ஒரு பட்டாம்பூச்சியின் பின்னால் பிடிக்க அலைகையில், துணிகளை கலைத்து போட்டு அதனுள் ஒளிகையில், பருக்கைகளை கொட்டி விளையாடுகையில் இப்படி எத்தனை எத்தனையோ சிறு நிகழ்வுகள் தான் தீர்மானிக்கின்றன வாழ்தலை.எல்லோரும் எப்பொழுதும் இதுபோல விரும்பினும் முடியாத பெருவாழ்வல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அறியாமையில். நான் சற்றே அதிர்ஷ்டக்காரன், என்னை அசாதாரண சூழ்நிலை ஆட்கொண்டு இந்த அறியாமையை அகற்றி அகல் ஏற்றியது, அதனால் கொஞ்சம் வாழ்ந்திருக்கிறேன். இந்த 31 ஆண்டு காலத்தில் ஒரு நான்கரை ஆண்டுகள் வாழ்ந்திருப்பேன், மீதமுள்ள ஆண்டுகளில் நன்றாக வாழ என்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தேன்.!! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது போல " வாழ்வதற்கு தயாராவதற்க்கு பாதி ஆயுள் படிக்கிறோம் , மீதி ஆயுள் படித்த படிப்பன்றி வேறொன்றை பற்றிக்கொண்டு வாழ்வதாய் பிதற்றி இறுதியில் வாழ்ந்தோமா, இல்லையா என்கிற குழப்பத்தில் செத்துப்போகிறோம்" கழிந்த, கழிகின்ற இந்த தருணங்கள் வாழ்தலுக்கான புதிய சிந்தனையை எனக்குள் திறந்து விட்டிருக்கிறது. எல்லா வழியிலும், வலியிலும் இந்த சிந்தனையை செயற்படுத்த விழைவேன் இனிமேல். வாழ்தலின் ரகசியத்தை திறக்கும் சாவி தகப்பனானதில், அதுவும் மகளுக்கு ஆனதில் கிடைத்திருக்கிறது.
வாழ்கின்ற பொழுதுகளில் அதனை உணர்ந்து தெளிந்து மகிழ்வில் பரவசப்பட முடிந்தால் மரணமும், நோயும், வலியும் கூட ஆகச் சிறந்த தருணங்களை பருவங்களைத் தருபவையே என்கிற புரிதலை ஏற்படுத்தி எனது மூன்றரை ஆண்டுகளை ஆகச்சிறந்த பருவமாக மாற்றிய என் மகளுக்கு நன்றிகள்.
Comments
Post a Comment