பட்டுப்பூச்சியென வாழும் பறவை

பட்டுப்பூச்சியென வாழும் பறவை  :-
  
வெட்டப்பட்ட 
சிறகுகள் தன்னை
காப்பதாயென்னும்
ஒரு பறவையை 
பார்க்க நேர்ந்தேன்...

தனது பறக்கும் 
எல்லையை 
தவறாக சொல்லித்தந்த 
காரணத்தால் 
தான்தோன்றித்தனமாய்
அது கிணற்றுக்குள் பறந்து 
மகிழ்ந்து கொண்டிருந்தது...

அதன் அலகினை
அழுத்தாது பிடித்து 
வானம் காண்பித்தேன் 
உயரே பறக்கையில் 
உள்ளம் கிளர்வதை 
உணர்ந்து பார்க்கச் சொன்னேன்...

நான் சொல்கையில் வியந்து 
என்னோடு பறக்க 
எத்தனிக்க 
பயந்து நடுங்கியது 
உள்ளம் அழகான 
ஊனமுணர்ந்த அந்த 
உயர்பறவை...

பறத்தல்தான்
பயமென்றால் 
பறத்தல் செய்வதாய் 
நீ  நினைத்து இன்பங்கொள்
என்று நேசத்தில் சொன்னேன்...

பறத்தல் பயம் 
நினைத்தலிங்கு நெடுங்குற்றம்
ஆகையால்
கிணறுதாண்டி 
பறக்கவும் வேண்டாம் 
பறத்தலை நினைக்கவும் 
வேண்டாம் எனப்
பதிலுரைத்ததந்த
பட்டுப்பூச்சியென வாழும் 
பாவப்பட்ட பறவை. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔