Posts

Showing posts from 2016

இரவுப்பூனைகள்

Image
சத்தமில்லாத இருளில்  உள் நுழைகிற பூனை   உன் நினைவு  பூனையின் ஒவ்வொரு  அடி நகர்தலும்  நம் சந்திப்பின்  ஒவ்வொரு கணங்கள்  இருளில் ஒளிரும்  அதன் கண்கள் மட்டும்  நம் காதல்  அது கொட்டிக்குடித்து  சிந்திய பால்குவளை  நமக்குள் இன்னும் கழியா  ஏக்கப் பிரியம்   வயிறு உப்ப அருந்தி  உறங்கும் இரவுப்பூனை  நமது நிறைவேறாக்  கனவின் நிழல்  இரவுப்பூனைகள்  நம் அகத்தின்  காட்சிப்படுத்தல். 

சதுர்த்தி

Image
களைகட்டத் தொடங்கியிருந்தது சதுர்த்தியின் திருவிழா அங்கு  தொலைவு தேசத்தில்  நினைவில் நிற்பதில்லை  எந்தவொரு  பிறந்தவூர் விழாவும்  காரணங்களை  வரிசைப்படுத்துவதில்  கவனமில்லை  கணபதியின் தோற்றம் குறித்த புரிதலும்  காரணமாயிருக்கலாம்  சொந்தங்களின்  கொண்டாட்ட  புகைப்படத்திலிருந்த  பலகாரங்களைப் பார்த்துவிட்டு  "கொழுக்கட்டைன்னா என்னப்பா" என  அவள் கேட்ட கேள்விக்கு  "அது கேக் மாதிரி ஒரு பண்டம்டா" எனக் கூறி தப்பித்த  அந்த ஒரு கேள்வி நினைவிலின்றி  கடந்து போகும் இவ்விழாவை  மறக்கமுடியாததாக்கியிருக்கிறது  இவ்வருடம்.

எனக்கு இரயிலைப் பிடிக்கும்

Image
எனக்கு இரயிலைப் பிடிக்கும்  பட்டாம்பூச்சிகளைப்போல பம்பரம் சாட்டைகளைப் போல பல்லாங்குழி போல கோலிக்குண்டுகளைப்போல  குச்சிக்கம்புகளை போல  எட்டுக்கட்ட பாண்டி போல   கலச்சாங்கள் விளையாட்டுபோல  நீரில் தொலைந்து தொடும் தொட்டுப்புடிச்சிபோல  வெயிலந்தம்மன் கோவிலருகில்  வெறிபிடித்து விளையாடிய மட்டைப்பந்து போல    எனக்கு இரயிலையும் பிடிக்கும்  உன்போல்  பிரியமானவர்களை ஏற்றிக்கொண்டு மறையாத  நேற்றைக்கு முந்தைய தினம் வரை  எனக்கு எல்லா இரயிலையும் பிடிக்கும். 

யுகங்கள் வரக்கூடும்

Image
அந்திமக் காலையில் உறங்குகின்ற என்னுள் கண்விழிக்கிறது உன்னுடன் நிகழ்கின்ற கூடலான கனவு நினைவு தளிர்க்கையில் கணக்கின்ற நெஞ்சம் கீழ்காலம் நோக்கி இழுக்கிறது புதைந்த நம் நினைவை அங்கே இடிபாடுகளில் பூத்து கொழித்துக் புதையாது கிடக்கிறது நாம் பரிமாறிய பிரியங்கள் காலம் பொய்ப்பதும் காதல் இனிப்பதும் செய்கின்ற இரவுக் கனவுகளை வாழ்தலாக மாற்றும் விஞ்ஞானம்  வசப்படின் நீயும் நானும் சர்ப்பங்களாய்ப் பின்னிப்பிணைய காதல் பூத்திருக்கும் காலம் காத்திருக்கும் யுகங்கள் வரக்கூடும்.

மயான வாசம்

Image
நேற்றுவரை உணராத கரப்பான் பூச்சிகளின் உமிழ்நீர் வாசனையை நாசி உணரத் துவங்குகையில் வீடு வெறுமையாயிருக்கிறது அகம் அமைதியாயிருக்க அவள்கள் புழங்கிய வீடு அப்படியே கிடக்கட்டும் அழகான அழுக்குகளோடு குவிந்து கிடக்கும் அணிந்த துணிகளில் அவள்களின் வாசனையை நுகர்ந்து வாழ்வதே இனி உயிர்காக்கும் கிறுக்கிய சுவரில் கிழிந்த அடுப்புத்துணியில் எச்சில் ஒழுக உறங்கிக்கிடந்த ஒற்றைத் தலையணையில் என அவள்களைத் தேடிஅலைவதே என் மனிதனுக்கு சாபம் கவிஞனுக்கு வரம் மெத்தென்ற விரல்களை நானும் ரோமக்கன்னங்களை அவளும் தழுவி நேரும் உறக்கங்கள் இனி வாய்ப்பது அரிது இரெண்டொரு வாரங்களுக்கு கணிப்பொறி பார்த்து காய்கின்ற கண்களுக்கு உலராதிருக்க இனி அவ்வப்போது பிரிவாற்றாமையின் கண்ணீர் கிட்டும் மனதை அனுப்பிவிட்டு உடலாய்  வந்த உயிர் ஊமையாய் உலாவும் வினோதம் நிகழும் இனி உருக்குலைக்கும் உயிரருக்கும் தனிமை தவிர்க்க - இனி தரணி தழுவ எத்தனிக்கவேண்டும் மனைவியும் மகளும் இல்லாதவொரு வீட்டினை மயானமின்றி வேறேன்னவென்று சொல்ல..  

இறைவி - கண்டிப்பாக தரிசிக்க வேண்டியவள்

Image
"என்னவே புள்ள அழுதுகிட்டே இருக்கு, மனுஷன் தூங்க வேண்டாமா எடுத்துகிட்டு வெளியிலே போவே, மனுசன் நாளைக்கு வேலைக்கு போவேண்டாமா?"... எங்கே எடுத்துகிட்டு போறது... பகல் பூராம்  நாங்களும் தான் வேலைசெஞ்சோம்...எங்களுக்குத்தான் தூக்கம் வருது... நாங்க யாருகிட்ட சொல்ல" இது பால்யத்தின் இரவில் அடிக்கடி கேட்ட உரையாடல். இன்றும் சில சமயங்களில் உபயோகிக்கிற உரையாடல். இது போன்று எத்தனையோ உரையாடல்கள். அசரீரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருந்த சூழ்நிலைகளவை.   உண்மையை சொல்லவேண்டுமானால் பெரும்பான்மைக்கும் அதிகமான ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் தான் என்னையும் சேர்த்து. சிறுவயதில் கிராமத்தில் அம்மா காலையிலேயே எழுந்து வாசல் கூட்டி, சாணம் தெளித்து கோலமிட்டு, அடுப்பு மொழுகி, காப்பி போட்டு எல்லோரையும் எழுப்புவார். அப்பா எழுந்து குளிக்கப் போயிருப்பார். நாங்கள் யாருமே, ஏன் அம்மா அதிகமாக உழைக்கிறார் என்று யோசித்தது இல்லை. காரணம் எல்லா அம்மாக்களுமே அப்படித்தான் இருந்தார்கள்..இப்பவும் இருக்கிறார்கள்.. ஆணென்பவன் வெளியில் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்ற காரணத்தால் அன்று சமூகம் அப்படி இருந்தது என்று...

நீயேதான்!

Image
நட்சத்திரங்கள் தெரிகின்ற  பகலில் நடப்பது புதிது எனினும்  குளிர் உறைய  கரங்குவிய  மரத்த கால்களை  நகர்த்த எத்தனித்து நடத்தல் சுகம்  வெண்பனி மூடிய  வெளியெங்கும் உள்ளேற  உறைந்தே கிடக்கட்டும்  உள்ளுள்ள உள்ளம்  வெப்பும் வெறுப்பும்  ஆட்க்கொண்ட தினங்கள்  அகண்டுபோய் அரிதாகியிருக்கும் இப்பொழுது  குளிர்ந்தே கிடக்கட்டும்  தனுப்பு குறைந்து  உடல் தடதடக்கையில்  வருகின்ற நிலவு  நீயேதான்!

ஓவியத்தின் ஆயுள்!

Image
வரைந்து வைத்த வண்ண ஓவியமொன்று அழிக்க மனமிற்று அப்படியே கிடக்கிறது அழகு காரணமா அவள் வரைந்தது காரணமா குழப்பத்திலேயே நீடிக்கட்டும் ஓவியத்தின் ஆயுள்!

நமக்காக!

Image
திரைமூடிய மாலை இரவாகையில் ஒளிர்கிறது அகம் இருக்கட்டும்! மெல்லிய நிலவொளியில் அழகியாகும் நீ பெரும் சூரியப்பகலில் பேரழகியாய் தெரியாத விந்தை யார் சொல்வாரோ! கைகளெனப்படும் கரங்களின் ஐவ்விரல்களைப் பற்றிக்கொண்டு நிமிர்ந்து முகம் நோக்கையில் முடிந்து தொடங்குகிற வாழ்வு சூட்சமம் எனக்கு! கவிதை பற்ற - நின் நீண்ட கால்விரல்களையும் அவ்வப்போது பற்றுதல் என் சிந்தை நிர்பந்திக்கும் சிறப்பு வழக்கமென இப்போது சொல்கிறேன் உனக்கு! நிலவு தேய நினைவு காய கடக்கப் போகிறது இரவு அதற்கென்ன நாளையும் வருமே நமக்காக!

நேற்று அப்படித்தான் இருந்தது

Image
நேற்று அப்படித்தான் இருந்தது குளிருக்கு முந்தைய  பொழுதிலேயே நீ வருவதாய்  சொல்லியிருந்தாய்  மனதுக்கு கம்பளி  போர்த்த தொடங்கியிருந்தேன்  நீ வந்த பொழுதில்  உள்ளும் புறமும்  என்னை உளரச் செய்துகொண்டு குளிரும் இருந்தது இறுதியில் நீயும் வந்தாய்  அருகினில்  அணைக்கும் தொலைவிலிருந்தும்  நீயே தெரியாதவாறு  சூழ்ந்திருந்தது குளிர் என்னை  என்ன சோதனை!  அங்கம் முழுவதும் -நீ  ஆடையால் மூடித்திரிய  காரணமான இந்த  அதீத குளிர்மீது அத்தனை கோபம் எனக்கு கொஞ்சம் கண்களும்  நீண்ட அழகு கை, கால் விரல்களும் மட்டும்  காணக் கிடைத்தது வரம்! மனதை உன்னோடு  கோர்த்துவிட்டு  நடந்து கொண்டிருந்தது  உடல்  யாரோடோ! உன் உதடு உதிர்த்த  ஓரிரு வார்த்தைகளை  திரும்பத் திரும்பக்  கோர்த்து கலைத்து  விளையாடிக் கொண்டிருக்கிறது  வினைசெய்யும் நெஞ்சம்  நின் ஓரக்கண் பார்வை  தந்த அழுத்தத்தில்  ...

முந்தைய நொடிவரை

Image
ஒளிரும் நீள் செவ்வக திரையில் வந்தமர்ந்து வாழ்ந்து செல்லும் கார்ட்டூன் கதாபாத்திரங்களோடு உயிராவதும் கைகளில் துடைப்பங்கொண்டு குப்பைகள் சிதறி சுத்தப்பாடம் சொல்வதும் வார்த்தைகளற்ற வரிகளில் இசை கோர்த்து சந்தம் சேர்த்து பாடலாக்கி பாடுவதும் நொடிகளில் விழிகள் உருட்டி ஆத்திரத்தையும் அன்பையும் பொழிவதும் உறங்க, உண்ண தாய்மடி வேண்டி கதைகள் கேட்டு கனவோடு துயில்வதுவும் வாஞ்சை பொங்கி வழியும் தருணங்களிலெல்லாம் இதயம் மலர ஈர முத்தம் தருவதுவும் வரிகளிலும், வார்த்தையிலும் அடங்காத அசைவுகள் ஆயிரம் உதிர்த்து ஆத்மா நிரப்புவதும் செய்கின்ற அவள் சிறுமியென்றே இத்தனை நாள் நினைத்திருந்தேன் அகல விரிந்து கிடந்த அங்காடி தன்னில் தாய் தொலைத்து தடுமாறி அழுத தன்வயதொத்த சிறுவனின் நினைவில் வெகுநாட்கள் கழித்து "பாவம்ல..அவன் அவங்க அம்மாகிட்ட போயிருப்பான்ல" என்று மனிதம் பொங்க கேட்டதற்கு முந்தைய நொடிவரை.

கவிதையாதல்

Image
தங்கக் கம்பியாய் நீண்டு வாழ்விடமெங்கும் வனப்பாய் நுழையும் காலைக்கதிரின்  லயிப்பில் பச்சைப் பசும்புல்லில் நீர் விசிற பரவும் மணத்தில் ஈச்சமர அடிநிழலில் கொஞ்சி சண்டையிட்டு கூடிக் களிக்கும் மைனாக்களின் ஈர்ப்பில் தடித்த உடல்மொழியோடு - நிலம் கடிக்க நடைபயிலும் குணவதிகளின் பார்ப்பில் பின் காட்டி முன் சிந்திக்கச் செய்யும் யுவதிகளின் கடப்பில் என எல்லாவற்றிலும் ஒளிந்திருந்தாலும் புதரடியில் அனாதையாய் இறந்துகிடக்கும் சிறுகுருவியின் துயரந்தான் நெஞ்சடைத்து கவிதையாகிறது.

அடர்த்தி!

Image
அதிகாலை வெண்புகையாய் சூழ்ந்துகிடக்கும்  இப்பனிக்குத்தான்  எவ்வளவு அடர்த்தி!  அதிரடியாய்  அதனோடு  போட்டியிட்டு சுடும்  சூரியனுக்குத்தான் எவ்வளவு அடர்த்தி!  குளிரோடும் கொஞ்சியும்  சூட்டோடு மிஞ்சியும்  போராடி மகிழும்  இந்த தேகத்திற்குத்தான்  எவ்வளவு அடர்த்தி!  இந்த மிதவேளையில்   ஆழ்மனதில்  அழுந்தக் கிடந்து  ஆட்டுவிக்கும் - உன்  அன்புதான்  எத்தனை வியப்புக்குரிய  அடர்த்தி!  

ஒரு கவிதை செய்யலாமே!!

Image
அங்காடியில் அலைந்தமர்ந்து அமர்கின்ற கண்களில் நீல வண்ண உடையில் மேகமாய் ஒருத்தி நீண்ட பச்சை மேலங்கியில் நெஞ்சை இழுக்குமொருத்தி காதல் பொங்கும் கருமை நிறத்தில் கண்சாயம் பூசியொருத்தி சிவந்த வானம் மறந்து போகச் செய்கின்ற சிவப்பு சிரிப்பிலொருத்தி எங்கோ தள்ளி ஏதும் தெரியாது வெண்மை சிரிப்பை மட்டும் சன்னமாய் உதிர்க்கும் ஒருத்தி வண்ணங்களாய் வருகின்ற எல்லா ஒருத்தியிலும் வாழ்வில் வராத நீயே விரிகிறாயடி என் செய்ய என்கிற அவனிடத்தில் "எனக்கு கல்யாணம் ஆயிட்டேடா" என்கிறவளிடம் அதனாலென்ன ஒரு கவிதை செய்யலாமே என்றான். 

தாத்தா உலகநாதன்

Image
ஆறடிக்கும் கொஞ்சம் குறைவாக  வளர்ந்து முடித்த அவர்  எனக்கு ரெம்ப முன்பே பிறந்ததால் தாத்தா முறை!   செதுக்கிய கேசமும்  செவ்வனே மழித்த முகமும் பட்டை விரலும்  கட்டை தேகமும்   பரந்த பாதமும்  பாரகான் செருப்பும் அருபமாய் மனதில் வரும்  அவரின் அடையாள இத்தியாதிகள்!  ராணுவ உத்தியோகம்  காவல்துறை கடமையென  காடோடி வந்தவரின்  கால்கள் நடந்தது - கடைசியில்  கட்டையாய் சுருங்கிய  கடைகோடி கிராமத்தில்!  நேரத்துக்கு சாப்பாடு  தாரத்துடன் சண்டை  பேரத்துக்கு ஒப்பாமை  பேரன்களோடு பேசுதல்  ஒற்றை மிதிவண்டியில்  ஊர் ஊராய் பயணம்   என்பன சில அன்பரின்  ஆகக்கடைசி பெருங்குணங்கள்! விரல்கள் குவித்து நச்சென்று தலையில் அவர் கொட்டிய அசுர குட்டுகளுக்கு அன்று அழுது இன்று எண்ணிச் சிரித்து நியாபகத்தில் பின்னோக்கி சுழல்தல் அவர் அருளிய நினைவுச் சுகம்! டயனோரா டிவி  லொடலொட பீரோ  சில்லறை நிரம்பிய சில்வர் கப்  ...

நிறம்

Image
திரண்ட வெள்ளைச் சதைக்குவியலை மட்டும் அழகென்று பிதற்றும் கருத்த தேகத்தோனை இன்று வழியில் சந்தித்தேன்! முகத்தை வெள்ளையாகக் காண்பிக்க தடித்த முகப்பூச்சு அணிந்திருந்தானவன் அது மூளைவரை சென்றமை புலப்பட்டது அகலவாய் அவன் திறந்தபோது! வதனம் வெள்ளையாகவும் வனப்புடல் வேறொரு நிறமாயும் அலைகின்ற இவனுக்கு அழகென்னத் தெரிந்திருக்கும்? மனம் பேச, அடக்கிவைத்தேன்! உடல்முழுதும் பூச்சு மொழுகிய ஒரவள்கள் கடக்கையிலே பூச்சு தாண்டி பொலிவானது அவனுக்கு முகம்! மாநிறம் மட்டமென்றான் - அது மனித நிறமே இல்லையுமென்றான் பூச்சு மூளைக்கு இறங்கிய புது வெள்ளையன்! எரிச்சல் தலைக்கேறி ஏதும் போதிக்காமல் இறங்கி நடக்கையில் வெள்ளைச் சதைக்குவியலை மட்டும் அழகென்று பிதற்றும் வெளிறிய சந்ததிகள் வெளியேறி நடக்கக் கண்டேன்!.

ஐன்ஸ்டீனெல்லாம் அப்புறந்தான்!

Image
குழப்பம் தெளிகையில்  முடிவெடுத்து  பரபரப்பாய் கிளம்பி  சேர்ப்பிடம் சேர்ந்து  காய்களும் கனிகளும்  ரொட்டியும் கட்டியுமாய்  இரெண்டொரு வார சமையலுக்கு  எல்லாம் வாங்கி  வீட்டு சாப்பாட்டின்  விந்தைகள் பேசி  வயிறுகளை காக்க  வம்படியாய் சபதம் ஏற்று  கூடை பிதுங்கி பேருந்துக்கு காத்திருக்கையில்  சிந்தை கலைக்கும்  பிரியாணியின் வாசம் நுகர்ந்ததும்  "நாளைக்கு ஹோட்டல் போய் சாப்பிடலாமா" எனக் கேட்டுச் சிரிக்கிற   மனைவியைப் புரிந்தவனே  மகா விஞ்ஞானி  ஐன்ஸ்டீனெல்லாம் அப்புறந்தான்! 

தீராத குவியலாய்

Image
நேற்றும் புதிதாய் வந்து சேர்ந்தன சோடி புது காலணிகள் பழைய அதே சோடி கால்களுக்கு சட்டைகளும், பனியன்களும் உள்ளாடைகளும் கை,காலுறைகளும் என முதிர்வுரும் உடலை வனப்படுத்த குவித்துக் கொண்டே இருக்கிறேன் இளமை மெருகேறி எதிர்பதமாய் கொழிக்கின்ற மனது மட்டும் குவித்துக்கொண்டே இருக்கிறது செத்தாலும் தீராத குவியலாய் உன் நினைவை!.