பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி..
இன்று நண்பன் கார்த்திக்கு பிறந்தநாள். என்னைவிட ஒரு ஐந்தாறு அகவை மூத்தவன் வயதிலும், என்னைவிட ஐந்தாறு வயது உடலிலும் இளையவன்! கிட்டத்தட்ட 8 வருடமாக பழக்கம். சென்னைக்கு இரெண்டாம் முறையாக வேலைக்கு வந்த புதிதில் எக்மோர் அலுவலகத்தில் அவனை முதலில் சந்தித்ததாய் நியாபகமிருக்கிறது. கொஞ்சம் மேல்தட்டு உடையமைப்பும், உருவ அமைப்பும் அவனின் ஈர்க்கும் குணங்கள். மேலாளரின் ஆணையின் பேரில் கார்த்திக்கோடு சில நாட்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. வாழ்க்கை போகிற போக்கில் பயணிக்கிற எனக்கு, வாழ்வை தன் போக்கில் எப்பொழுதும் திருப்ப பிரயத்தனப்படுகின்ற கார்த்திக் ஒரு அப்போதைய, அவசிய, அழகு அனுபவம் எனக்கு. இப்போதும் கூட.
எட்டு வருடக் கதையையும் எழுதினால் எபிக் ஆகிவிடும் வாய்ப்பு இருப்பதால் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்!. மேற்கு மாம்பலம், பரோடா வீதியில் ஒரு வீட்டில் தனியாளாய் அவன் வாடகைக்கு இருந்த தினங்கள் அவை. மிகச் சிறந்த நகைச்சுவையாளன், அவனது கலாய்த்தலுக்கு கண்ணீர் சிந்தி என்போல் சிரித்த பலபேரை எனக்குத் தெரியும். சக நண்பர் "சிலை" அன்பழகனை வைத்து கார்த்தி செய்த "டிஸ்கோ சாந்தி காமெடி " இப்போதும் எவர்கிரீன். எப்போதும் யாரையாவது ஓட்டி எல்லோரையும் இருதயம் வெளியில் விழும் அளவுக்கு சிரிக்க வைக்கிற ஒரே குணத்திற்காகவே கார்த்தியோடு நட்பு பாராட்டலாம். கொண்டாட்ட மனிதன்.
வெளியில் கொஞ்சம் படபடப்பாக, பகட்டாக தெரிந்தாலும் உள்ளம் நல்ல உள்ளம் கார்த்திக்கு. அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் பொறுமையாய் பயணிக்க வேண்டும் அவனோடு. பாதி பயணத்தில் வெறுப்புற்று சிலர் பரப்புரை செய்வதுண்டு..அவை முழுப்பயணம் செய்யாதவன் எழுதுகிற பயணக் கட்டுரை மாதிரி. அர்த்தமற்றவை. எல்லா மனிதருக்குமுரிய மரபுவழி , வாழ்வியல் வழி சார்ந்த குணநலன்கள் கார்த்திக்கும் சில உண்டு. கார்த்தி குறித்தும் அவனது இத்தகைய குணநலன்கள் குறித்தும் விமர்சனங்கள் உண்டு. அவை முள்ளைப் பார்த்து பலாச்சுளையை தவிர்த்த மாதிரியான மனநிலைகள்.
இந்த எட்டண்டுகால நட்பில் தன்னுள், புறத்தில் நிறைய மாற்றங்களை செய்து, செய்ய அவன் மெனக்கெட்டு வருவது நிரம்ப மகிழ்வளிகிறது. வைதேகி@ ப்ரியா, கார்த்திக்கு துணைவியாக வாய்த்த பிறகு நிறைய மேம்படல்கள் இருவருக்கும் பரஸ்பரம் வாய்த்தது என்பது நாங்கள் கண்டு மகிழ்கிற ஓன்று.
கார்த்திக்கும் எனக்கும் வாழ்வியல் சார்ந்த, வழக்கங்கள் சார்ந்த கருத்துவேற்றுமைகள் இருப்பினும். எங்கள் இருவரில் கார்த்திதான் சிறந்த நண்பன். தன்னைநோக்கி வாழ்க்கை எறியும் அத்தனை சவால்களையும் மிகுந்த துணிவோடு, நம்பிக்கையோடு எதிர்கொள்கிற வகையில் எனக்கு முன் மாதிரி நண்பன்.எனது வாழ்வில் எல்லா மனிதர்களும் ஏதோ அர்த்தத்தோடே வருகிறார்கள் என்று நம்புகிறேன். சில மனிதர்கள் மகிழ்ச்சியையும், சிலர் படிப்பினைகளையும் தருகிறார்கள். கார்த்தி இரெண்டையும் கலந்து தந்தகொண்டிருக்கிற மனிதன்.
இந்த இனிய பிறந்த நாளில் கார்த்தி எப்பொழுதும்போல் மகிழ்வோடும், பிரியாவோடு மிகுந்த மன நிறைவோடும் வாழவேண்டி வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
குறிப்பு: நான், ஏனையோர் பொறாமைப்படுகிறஅளவுக்கு கார்த்திக்கு பெண் நண்பர்கள் அதிகம்!!!!!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி..
அன்புடன்.
வேலூ பாலசுப்பிரமணியன்.
Comments
Post a Comment