தீப்பிடித்தாலும் பிடிக்கலாம்!
காத்தடிக்கும்
கார்காலத்து மாலையில்
கால்வாய்த் தண்ணீரில்
காற்று உரசி உறவாடும்
கணப்பொழுதில்
விராலடிக்கிறான்
நீருக்குள் செங்குத்தாக
கிராமத்து அவன்
மூளை கிறுகிறுக்க
முங்கி எழுந்து
முடிந்து வைத்திருக்கும்
ரெண்டுரூவா லைபாய்
தேய்த்துக் குளித்து
தலை துவற்றுகையில்
படியிறங்கும் அவளின் பக்கம்
பார்வை நனைக்கிறான்
ஆண் அருகிலிருக்கும்
அந்தச் சொரணையற்று
அவள் அப்படி குளிக்க
இவன் இப்படி நோக்கி
ஏறுகிறான் கால்வைத்து
கால்வாய்ப் படி ரெண்டு
கரைநின்று
மறந்து போன
சோப்புடப்பா எடுக்க
திரும்பி இறங்கையில்
கெளுத்தி மீனாக
நீரிலிருந்து எழும்பி
அவன் நீர்த்துப்போக
சிரித்து வைக்கிறாள்
ஒரு சிரிப்பு
அர்த்தம் புரிந்தவானாய்
அமட்டுச் சிரிப்போடு
அசைவின்றி நடக்கிறான்
கிராமத்து அவன்
இன்று இரவு
கோனார் வீட்டு
கொல்லை வைக்கோற்ப் போரில்
தேகங்கள் உரசி
தீப்பிடித்தாலும் பிடிக்கலாம்!.
Comments
Post a Comment