அக்னிச் சிறகு
முதன் முதலாக
கலைந்த கனவுக்கு
காரியமாற்றிய நனவுக்கு - உண்மைக்
கண்ணீர் சிந்தி
வருந்துகிறது தேசம்
நீரில் படகோட்டினார்
குடும்ப நலனுக்காய்
வானிலும் ஓட்டினார்
வளமான தேசத்துக்காய்
செய்தித்தாள் விநியோகித்து
தொடங்கிய இவ்வாழ்க்கை
செய்திகளில் நிறைந்து
முடிந்திருக்கிறது
குடும்பநல சிந்திப்பு
தடையென
தேசநலம் காக்க
சிந்தித்து
தனியனாய் வந்து - இந்திய
தரணிக்கு உறவானார்
பட்டறைக்கல்லாக அடிதாங்கிய
சுத்தியாகி அடித்த
இன்னொரு மூத்த
காந்தியை
கர்மவீரனை
இழந்திருக்கிறது
இந்திய தேசம்
ஒற்று மாறினாலும்
பற்று உன்மேல்
காலத்துக்கு கலாம்
அழிக்காது
கடத்திச் செல்லும்
நின் கனவுகளை
காரியங்களாய்
நீ வந்த வழியை
கண்ட கனவை
உன்னோடு
இதயங்களில் இறுக்கமாக
இருத்தி உழைக்கும்
என்றும்
இந்த இளைஞர் தேசம்
அக்னிச் சிறகுகளை
அடையாளமாய்த் தாங்கி.
Comments
Post a Comment