செம்மைச் சிறகு
உறங்கி எழுந்து
விழித்த கணத்தில்
நிரந்தரமாக உறங்கியிருந்தது
தேசத்தின் நேசத்தின்
அக்னிச் சிறகு
கடற்கரை நகரில்
மசூதி தெருவின் மடியில்
உதித்த சிறகு
எங்கோ ஷில்லாங்கில்
உயரத்தின் உச்சியில்
தனது பறத்தலை முடித்து
உதிர்ந்து கொண்டது
இல்லாமையை
ஏளனத்தை
சகித்துக்கொண்டே
சரித்திரமான இறகு அது
இந்த இறகுக்கு
இருதய அடைப்பு
ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்
இந்த எளிமைக்கு
முடிவென்பதே
இயற்கையின் வஞ்சனைதான்
இளைய கைகள்
வருடி வருடி
முதுமை தன்னை
முழுதாக்கிக் கொண்ட
முழுமை ஜீவன் அது
விஞ்ஞானம்
மெஞ்ஞானம்
இறைஞானம்
எல்லாம் தெளிந்த
எங்கள் சிந்தனைச் சிறகு அது
நிமிர்ந்த நடை
தளர்ந்தபின்னும்
தேச நலனுக்காய்
தீப்பொறித் தாங்கி
தீரப்பறந்த சிறகு அது
சிறகின் இறகிலிருந்து
தெறித்த சிந்தனை ஒன்றாவது
சிறக்க வாழின்
இறக்காது வாழும்
என்றும் நம்முடன்
தனக்கு தீயிட்டு
தரணி அழகுசெய்த
அந்தச் செம்மைச் சிறகு.
Comments
Post a Comment