பாகுபலி ஓர் இந்திய ட்ராய்
பாகுபலி வியாபர யுத்திகள் கிளப்பிய ஆர்வம், இயக்குர் ராஜமௌலி படம் என்கிற எதிர்பார்ப்பு, வரலாற்றுப் படங்களின் மீதான ஆர்வம் எல்லாம் சேர்ந்து என்னை நேற்று திரையரங்கிற்க்கு நகர்த்தியிருந்தது பாகுபலியைக் காண. ட்ராய், க்ளாடியேட்டர் போல நம்ம ஊர் சினிமா வந்திருக்குமா என்ற எதிர்பார்ப்பில் நுழைந்த எனக்கு ஏமாற்றமில்லை.
பாகுபலி நிச்சயமாக ஒரு பெரும் முயற்சி, கனவு முயற்சி. கமல் கைவிட்ட மருதநாயகம், இயக்குனர் ஷங்கர் சொல்லிக்கொண்டேயிருக்கும் பொன்னியின் செல்வன் போன்றவற்றை இனிமேல் யோசனையின்றி படமாக்கலாம் என்பதற்கு விதையூன்றியிருக்கிறார் ராஜமௌலி.அந்த மெனக்கெடலுக்கும், தைரியத்திற்கும் ஒரு பெரிய சல்யூட். 280 கோடி ரூபாய் பட்ஜெட் என்று சொல்கிறார்கள். படத்தில் அந்த காகிதங்கள் செய்த ஜாலம் தெரிகிறது. மூன்றாண்டு கால உழைப்பு அவர்களுக்கு கைகூடியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவின், ஏன் தென்னிந்திய சினிமாவின் வியாபார எல்லைகளை உடைக்கும் பெரும் பிரயத்தனத்தை அசால்டாக கடந்திருக்கிறார் இயக்குனர், சினிமாவின் மீதான காதலால். ஒரு முழு நீள வரலாற்றுக் கதையாக இருந்த போதிலும் அதை நம் மக்களுக்கு ஏற்ற வகையில், எல்லா வித மசாலாக்களை தூக்கல் நெடி இல்லாது சேர்த்ததில்
இது ஒரு அக்மார்க் இந்திய வரலாற்றுச் சினிமா.நல்ல முன்னோடி முயற்சி.
கதை, அமர சித்திர கதைகளின் பாதிப்பால் உருவானது எனச் சொல்லிக்கொள்கிறார்கள். யூகிக்கக் கூடிய நம் எல்லோருக்கும் போதிக்கப் பெற்ற காதல், வாரிசு உரிமை, சூழ்ச்சிகள், நட்பு, நிரம்பிய அரச கதைதான் என்றாலும் அதை திரைக்கதையாக சொன்ன விதம் ரசிக்கச் செய்தது. காட்சிகளில் எது ரியல், எது ரீல் (Visual Effects) என்று பிரித்தறிய இயலாவண்ணம் கோர்த்திருப்பது பிரம்மாண்டத்தை திரை தாண்டியும் கடத்தியிருக்கிறது. மொத்த படத்தையும் தாங்கி நிற்பது சாபுசிரில் குழுவினரின் கலை இயக்கமும், கிராபிக்ஸ் வடிவமைத்த குழுவின் உழைப்புந்தான். பிரமாண்ட அருவி காட்சிகள், ரத்தம் தெறிக்கும் போர்க்கள காட்சிகள் என எந்த விதத்திலும் நாம் உலக சினிமாவிற்கு நிகரானவர்கள் என்று மார்தட்டி சொல்லலாம்.
சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அளவிற்க்கு நாயகர்கள் நடிக்க முடியவில்லை என்பது சிறு குறை. தமன்னா நியாயம் செய்திருக்கிறார். பிரபாஸ்க்கும், ராணாவுக்கும் அந்த பாத்திரத்தின் கனத்தை தாங்குகிற அளவிற்க்கு அனுபவம் குறைவு என்பது திரையில் தெரிகிறது. கட்டப்பா சத்யராஜ்தான் கண்களில் நிற்கிறார் இன்னும். ட்ராய்யில் ப்ராட் பிட் டும், க்ளேடியேடரில் ரஷுள் குரோவ்வும் மனதில் நிற்பதுபோல. பின்னணி இசை சோடைபோகவில்லை. வசனங்கள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். படம் அந்தரத்தில் முடிந்தது மாதிரி இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. முயற்சித்து முழுமையான முதல் பாகமாக நிறைவு செய்திருக்கலாம்.
ராஜமௌலியின் முன்னோக்குப் பார்வைக்காக, சத்யராஜின் நடிப்புக்காக, அந்த அருவி, போர்க்கள காட்சிகளுக்காக, கொஞ்சம் தமன்னாவின் அழகுக்காக கண்டிப்பாக பார்க்கலாம் இந்த இந்திய, தென்னிந்திய ட்ராய் யை.
தமிழ் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குத்தாட்ட சினிமாக்களை எடுப்பதை கொஞ்சம் குறைத்துவிட்டு சாண்டில்யனின் கதைகளையும், பொன்னியின் செல்வன் போன்ற நமது கிளாசிக் நாவல்களையும் படமாக்கினால் புண்ணியாமாய்ப் போகும்.
Comments
Post a Comment