எது கலாம் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மை அஞ்சலி??.



     நேற்று ஊடகம் முழுவதும் ஓரே செய்திதான். முகநூல் நிரம்பி வழிந்தது கலாம் அவர்களைப் பற்றிய செய்திகளால். துயரத்திலும், கொஞ்சம் நிறைவாகவும் இருந்தது எல்லோரும் அவர் இழப்பை உணர்ந்திருப்பதையெண்ணி.

     ஒரு கூட்டம் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் அலுவலகத்துக்கு விடுப்பு அறிவிக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தது. இன்று ஒரு தோழி கவிதையெல்லாம் முடிஞ்சுதா? என்று கேட்டிருந்தார்.போகட்டும், வேடிக்கை மனிதர்கள்.

     கலாம் குறித்த நிகழ்வுகள் தவிர்த்து யாகூப் மேமனை என்ன செய்யலாம் என்ற விவாதமும், எம். பி க்களுக்கான சப்சிடி குறித்த விவாதமும் ஓடிக்கொண்டிருந்தன. இன்னொரு தொலைக்காட்சி கலாம் அவர்களுடைய நேர்காணலில் தலைமைப்பண்புகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை திரும்பத் திரும்ப யாருக்கே உரைக்க வேண்டி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடீஸ்வரர்கள் கல்வி மற்றும் சிறந்த வாழ்வியல் சூழலுக்காக இந்தியாவைத் துறந்து இரண்டாம் நிலை குடிமக்கள்களாக வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தித்தாள் செய்தி வேறு. எல்லாம் ஏற்படுத்திய விளைவு அவரைக் கிளப்பிவிட்டிருந்தது. அறை நண்பர் அலறிக்கொண்டிருந்தார். என்ன தேசம் இது?!. ஆயிரமாயிரம் கோடி கொள்ளையடித்த ஊழல்களை மறந்துவிட்டு உணவுக்கான 6 கோடி சப்சிடி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சில,பல கெட்ட வார்த்தைகளாலும் திட்டிக்கொண்டிருந்தார் நாடாளும், நாடாண்ட அரசியல் மாமேதைகளை.
கலாம் அவர்கள் குறித்து பேச்சு திரும்பியது. நான் என்னுள் அவர் ஏற்படுத்திய அதிர்வுகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன் நண்பரிடம். சில பரஸ்பர கேள்விகளை விவாதித்தோம் கிட்டத்தட்ட அதிகாலை 3 மணிவரை.

  1. எந்த ஜனாதிபதி போலுமல்லாமல், ஏன் அவர் தனது கனவுகளை தொடர்ந்து சிறார்களிடமும், மாணவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்?
  2. வளர்ந்த தலைமுறை மீது நாடாளுகின்ற நன்மக்கள்! மீது அவருக்கு நம்பிக்கையில்லையா?
  3. ராக்கெட் அறிவியலில் மூழ்கிக் கிடந்தவர் இந்தப்பக்கம் திரும்பி உழைக்க என்ன செய்திருக்கும் அவர் வாழ்வு  அவரை?
  4. மணமுடிக்காமல் தேச நலனுக்கு இப்படி உழைக்க எந்த போதிமரம் அவருக்கு உதவியது ?
  5. ஏன் வளர்ந்ததலைமுறையினை விட்டுவிட்டு கடைசி மூச்சு வரை இளைய தலைமுறையோடு நேரம் செலவழித்தார்?
  6. இன்றைய வளர்ந்த தலைமுறைகளுக்கு என்ன பிரச்சினை?
     என கேள்வியும் பதில்களுமாய் பேசிக்கொண்டிருந்த போது, பேசிக்கொண்டே யோசித்தபோது தோன்றியது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது இன்றைக்கு இருக்கிற, நாடாளுகிற, வளர்ந்த தலைமுறை ஒன்றும் கழட்டப் போவதில்லையென. அதிகபட்சம் முகப்புத்தகத்தில் குமுறிவிட்டு,  திரையரங்குகளிலும், காப்பி ஷாப்களிலும் குடித்தும், கும்மாளமிட்டும் மறந்துபோய் விடுவார்கள் என. அப்படியே ஒன்றிரண்டு பேர் கிளம்பி வந்தாலும் அவர்களுக்கு குடுக்கவேண்டியதைக் குடுத்து! திருப்பியனுப்ப பதிவுசெய்யப் பட்ட சில பல அடிமைகளின் நிறுவனங்கள் இங்கு உள்ளன என்பது.

     அதனால்தான் அவரது பெரும்பாலான சந்திப்புகள் சிறார்களையும், மாணவர்களையும் நோக்கி நீண்டிருக்கிறது. விதையில்தான் விருட்சத்தின் கனவு வெளிப்படுமென நன்றாக உணர்ந்து செயலாற்றியிருக்கிறார். இங்கே எதிர்கால இந்திய தலைமுறைகளை குறிவைத்து ஒரு பெரிய அரசியல் சத்தமில்லாமல் நடந்து கொண்டேயிருக்கிறது. வளருகின்ற தலைமுறையை சுயசிந்தனையற்ற, தன்மானம் இழந்த அடிமை தலைமுறைகளாக மாற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி  திட்டமிட்டு வெகு வேகமாக நடந்து கொண்டேயிருக்கிறது. ஏற்கனவே ஒரு பெரும்பகுதி அடிமைகளாக மாற்றப்பட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டது.  இப்போது பள்ளியிலிருக்கும் தலைமுறைகளுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. கருவிலேயே அழிக்கும் தந்திரம் இது. பரிசோதனை எலிகள் மாதிரி உருவாக்கும் முயற்சி. இது நிற்காது தொடரும், நாம் விழிக்காது  உறங்கின்.

     மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு கல்வி பெரும்பாலும் தனியார்வழி போதிக்கப்படுகிறது. அதன் நிறுவனர்கள் பெரும்பாலும் அரசியல் பெரும்முதலைகள். சரி கல்வித்திட்டமாவது சரியாக இருக்கிறதா. மாணவனை சுயமாக சிந்திக்கவிடாத, மகுடிக்கு மயங்குகிற பாம்பினை அடைத்து வைப்பதை போன்ற சூழலில் இருக்கிறது. என்னையே நான் இங்கு திரும்பிப் பார்க்கிறேன். எனக்கு சமூகம் குறித்த, நல்வாழ்வு குறித்த, நற்பண்புகள் குறித்த போதனைகள் எங்கு சொல்லிகொடுக்கப்பட்டது. எங்கிருந்து நான் இருக்கிற கொஞ்ச நஞ்ச குணங்களைக் கற்றுக்கொண்டேன் என்று யோசிப்பின், அது வகுப்பறைகளில் பெரும்பாலும் நிகழ்ந்தாக எனக்கு நினைவிலில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வு விழுக்காடு குறித்தும், என்ன படிப்பின் வேலை கிடைக்கும், வருமானம் பெருக்கலாம் என்றுதான் சொல்லிவந்திருக்கிறார்களே தவிர. உருப்படியாக எதையும் சொன்னதாக தெரியவில்லை. சில முன்மாதிரிகள் அவ்வப்போது தோன்றியிருக்கிறார்கள். முழுவதும் பணம் சம்பாதிப்பது சார்ந்த கல்விமுறை. கொஞ்சம் தெரியாத்தனமாக பாடம் நீங்கலாக வாசிக்க பழகியதால் கொஞ்சம் ஏதோ உலகம் புரிகிறது என்றுதான் சொல்லவேண்டும். இன்று கல்வியினை நம் தேசத்தில் தொடங்கும் ஒரு மாணவனுக்கு மேற்சொன்ன கல்விமுறைதான் பெரும்பாலும் போதிக்கப்படுகிறது. இவர்கள் எப்படி முழுமனதாக சமூகம் பற்றிச் சிந்திப்பார்கள்?. விதையை தவறாக ஊன்றிவிட்டு விளைச்சலை குறை சொல்வது என்ன மாதிரி டிஸைன். கலாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது இங்கே வீரியமிக்க நல் விதைகள் குறைபாடான சூழலில் விதைக்கப் படுகின்றன என்று, முடிந்தவரையில் அதை களைய, மாற்ற, அதை தாக்குபிடித்து வீரியம் பெறச் செய்ய, நல்ல விளைச்சலை பெற முயலுவோம் என்பது. அதனால் தான் தன் வாழ்நாள் லட்சியமாக மாணாக்கர்களை நோக்கி பயணப்பட்டார். எந்தத் தேசத் தலைவன் இந்த நூற்றாண்டில் இந்த வாழ்வு வாழ்ந்திருக்கிறான்?. அவர் ஆசிர்வதிக்கப் பட்டவர். சேற்றில் செந்தாமரையாக முளைத்தவர். தர்க்கரீதியாக இந்த இந்திய வாழ்வியல் சூழலில் ஒருவன் தானாக முயன்று போராடி கூட அவர் போன்ற இலட்சிய மனநிலையை அடையமுடியுமா என்பது மிகுந்த சந்தேகமே. அதற்குள் நீ நல்ல படிக்கணும்,( பாட புத்தகங்களை) வேலைக்கு போகணும், கை  நிறைய சம்பாதிக்கணும், நல்ல எடத்துல பொண்ணு கட்டணும், வீடு வாங்கணும், கார் வாங்கணும், சொத்து சேத்துட்டு செத்துப் போயிரணும் என்று டிரவுசர் அவுக்க ஆரம்பித்து விடுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் வளருகின்ற இளைய தலைமுறை என்ன மாதிரி வரும். கொஞ்சம் வளர்ந்த பிறகு சாதி ரீதியான, மத ரீதியான, இனம் சார்ந்த பிரிவினைவாத தாக்குதல் வேறு. எந்த பருவத்திலும் ஆரோக்கியமாக வளர விடுவதேயில்லை. ஏதோ ஒரு சூத்திரம், தந்திரம், செப்படிவித்தை வேண்டும் ஆளும் வர்க்கத்திற்கு மக்களை வளரவிடாமல் அடிமைகளாகவே வைத்திருக்க. கண்ணாடி டம்ளரில் தண்ணியை வைத்துக்கொண்டு, ஒரு வட்ட மேசையில் சாத்தான்களின் கூட்டம் ஓன்று திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறது. மொத்த தேசத்தின் முதுகெலும்பையும் எப்படி அரிக்கலாமென. கலாம் அவர்களோ இதைவிட மோசமான பின்னணியிலிருந்து வந்து,  இந்த உன்னத நிலையை அடைய தன்னை, தன்  வாழ்வின் செயற்பாடுகளை முன்னுதாரணமாக்கி, அதை பரப்ப முயன்று கொஞ்சம் வெற்றியும் கண்டிருக்கிறார்.

    இன்றைய இளைய தலைமுறை மட்டும் எதையும் தனித்து சாதித்து விட முடியாது. நற்சிந்தனை ஓன்றும் காசு குடுத்தால் வந்துவிடாது. விதையை பலமாக தூவுங்கள். களைகளை அழிக்க முயற்சி ஏடுங்கள். குறைந்தபட்சம் நீங்கள் திருந்தவிட்டாலும் உங்கள் சிறு மகனையோ, மகளையோ கலாம் கண்ட கனவினை நோக்கி  வளர்க்க முயலுங்கள். அதுதான் எதிர்கால இந்தியாவுக்கு நாம் செய்யும் கடமை, நன்மை. இந்த கலாம் என்ற மாமனிதனுக்கு நாம் செய்யும் உண்மை அஞ்சலி.  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔