780 / 1200
+2 ரிசல்ட் வந்து தமிழ் நாடே அதிரி புதிரியாக இருக்கிறது இந்நேரம். என் மகன் / மகள் அவ்ளோ மார்க் எடுத்திட்டா, என்னைப்/ எங்களைப் பெருமை படுத்திட்டா. என் பையன் நல்ல மார்க் எடுக்கல. எதிர்காலம் போச்சு. என எல்லார் வீட்டிலேயும் டிரவுசரை அவுப்பார்கள்.
இளையராஜா ஒரு முறை தேசிய விருது குறித்து இவ்வாறு சொன்னார். " விருதுக்கும், இசைக்கும் என்னய்யா சம்பந்தம்" என்று. அதுமாதிரிதான் இப்போ நானும் சொல்றேன் மார்க்குக்கும் வாழ்க்கைக்கும் என்னய்யா சம்பந்தம். நான் +2 படித்த அனுபவத்தை இப்படி பட்ட நேரத்தில சொன்னதான் பயபுள்ளைக படிப்பாணுக என்பதால் சொல்லித் தொலைக்கிறேன்!!!!
இது எனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல். (கி.பி.1998ல்!! )
தமிழ் - 86
ஆங்கிலம் - 80
கணிதம் - 79
அறிவியல் - 85
சமூக அறிவியல் - 76
மொத்தம் - 406
நான் பத்தாம் வகுப்பில் நானூறுக்கு மேல் மதிப்பெண் எடுக்கவேண்டுமென்று
என்னை பள்ளியில் படித்தது போதாதென்று மணிசுந்தரி மிஸ்ஸிடம் டியூஷன் வேறு சேர்த்து விட்டார்கள். மிஸ் செம ஸ்ட்ரிக்ட். விடுமுறை நாட்களில் நன்றாக உறக்கம் வருகின்ற பொழுதுகளிலும். நண்பர்களோடு எப்போது கிரிக்கெட் விளையாடபோவேனென்றும் தெரிந்துகொண்டு டியூஷன் வைப்பார் நன்றாக போதிக்கவும் செய்வார். அவர் இல்லாவிட்டால் ஆங்கிலம் நமக்கு யம பாஷை ஆகியிருக்கும்!!!. பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் ஆங்கிலத்தில் 80 மதிப்பெண். என் வாழ்க்கையிலேயே நான் ஆங்கிலத்தில் எடுத்த அதிக மதிப்பெண் இதுதான் இன்றுவரை!. இதற்கு முந்தைய ஒன்பதாம் வகுப்பு வரை 35 மதிப்பெண் எடுப்பதற்கு முக்கிக் கொண்டிருந்தேன் என்பது வேறு விஷயம்!!!. என்னையும் 406 மதிப்பெண் எடுக்க வைத்தது மணிசுந்தரி அவர்களுடைய திட்டமிட்ட பயிற்றுவித்தலே ஒழிய அடியேன் ஒன்றும் செய்யவில்லை. என் வாழ்க்கையில் பின்னால் பொழுதுகளில் வாழ்க்கை மாறிமாறி உருட்டும் போதெல்லாம் அசராதிருக்க எனக்கு தேவையான மிகப்பெரும் தன்னம்பிக்கையினை அந்த பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாரான பொழுதுகள் தாம் தந்திருக்கின்றன என்பதையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும். பத்தாம் வகுப்பு இறுதிதேர்வான சமூக அறிவியலுக்கு முந்தைய நாள் டியூஷனுக்கு போகிற வழியில் தோழி கிருஷ்ணவேணியிடம் இப்படித்தான் சொல்லிக்கொண்டேன், " இன்னியோட முடிஞ்சுதுடா சனியன்". இனிமே டியூஷன் போய்டவே கூடாதுடா சாமி" என. அவ்வளவு விருப்பமின்மை படிப்பதற்கு. கட்டாயத்தின் பேரிலேயே படித்து 406 மதிப்பெண்கள் எடுக்க முடியுமென்றால் விரும்பிப் படித்தால் / செய்தால்? யோசித்துக் கொள்ளுங்கள்.
நான் 406 மதிப்பெண் எடுத்ததை நானே நம்பவில்லை. எனவே எனது மணிசுந்தரி மிஸ்ஸும் கொஞ்சம் கழித்தே நம்பினார். அதிலும் ஆங்கிலத்தில் வேறு 80 மதிப்பெண். டவுட் வரத்தானே செய்யும். ( வினாத்தாள் அவுட் ஆன ஒரு தேர்வில் கூட நான் 80 மதிப்பெண்கள் எடுக்காதவன்! so பாம்பறியும் பாம்பின் கால்) நான் படித்தது திருநெல்வேலி, பேட்டை காமராஜர் பள்ளியில். அலெக்ஸ் என்று ஒரு கிளார்க் இருந்தார் அப்போது. +1 க்கு விண்ணப்பம் வாங்க போகும்போதே "என்னப்பா 406 மார்க்கா நீ 1st group (Maths +Biology) எடுத்திரு என்று விண்ணப்பத்தை திணித்தார். இப்போதும் புரிந்திருக்கும் உங்களுக்கு என் கல்வியறிவின் ரகசியம்!. அலெக்ஸ் அவர்கள் அள்ளித்தந்த அந்த விண்ணப்பத்தை அள்ளிக்கொண்டு 1st group ல் சேர்ந்தேன். அந்த க்குருப்பில் என்ன நடக்குமென்று ஒரு எழவும் தெரியாது. 400 மற்றும் அதற்கு மேற்ப்பட்டவர்களுக்கு 1st குரூப் , 300 லிருந்து 400க்கு உள்ளனாவர்களுக்கு 2nd குரூப் pure science, accountancy some time.. இதில் அவரவர் சாதிவாரியான ஒதுக்கீடு முறைகள் வேறு உள்குத்தாக. நாம் அங்கு சென்று குழம்ப வேண்டாம். GM என்றொரு குரூப் ம் இருந்தது.
+1 வகுப்பு ஆரம்பித்து போகப்போகத்தான் புரிந்தது நாம் தப்பான இடத்தில் வந்து அமர்ந்து விட்டோம் என. நமக்கும் கணிதத்துக்கும்,இயற்பியலுக்கும், வேதியியலுக்கும் ரெம்பத் தூரம். அதுவும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அந்த தூரத்தை அதிகப் படுத்திக்கொண்டே போய் அலர்ஜி ஆகிற அளவிற்கு ஆக்கிவிட்டார்கள்.! பாதி நேரம் பேய் முழி முழித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். எதையெல்லாம் கற்றுக்கொள்ளக்கூடாது என்பதை மட்டும் நன்றாக கற்றுக்கொண்டிருந்தேன் அன்றைய நாட்களில். கொஞ்ச நாட்களில் என்னை மாதிரியே ரெம்பப் பேர் அங்கே அப்பிடித்தான் இருந்தார்கள் same blood!!! எனத் தெரிந்தது. நான் எனது ஆர்வப்படி வரலாறோ, தமிழோ முதன்மைப் பாடமாயுல்ல பிரிவில் சேர்ந்திருக்க வேண்டும். விதி யாரை விட்டது. 406 மதிப்பெண் எடுத்ததன் விளைவு டிரவுசரைக் கிழித்தார்கள். +1,+2 இரு வருடங்களிலும் ஒரு முறை கூட கணிதத்தில் நான் தேறியது கிடையாது. கணித ஆசிரியர் ஸ்ரீனிவாசன் step mark போடமாட்டார். முழு கணக்கும் சரியென்றால் மட்டும்தான் மார்க், நமக்கும் முழுகணக்குக்கும் ஆகவே ஆகாது. காப்பி அடிக்கலாம் என்றால் பயபுள்ளைக முழுகணக்கையும் காட்ட மாட்டானுக. பிறகெப்படி. ஆனால் இறுதித் தேர்வில் எப்படியும் தேறிவிடுவோமெனத் தெரியும்.அப்புறம் என்ன. முடிவு தெரிந்தவனுக்கு இடையில் என்ன நடந்தாலென்ன!! philosophy..philosophy...!! எப்போதும் கவலை கொண்டதில்லை. எல்லோரும் பயந்து பயந்து படிக்கையில் நான் ஜாலியாக சுற்றிக்கொண்டிருப்பேன்.
இறுதித் தேர்வுக்கு முந்திய நாட்களில் நன்றாக சாப்பிட்டு விட்டு உறங்கிவிடுவேன். வீட்டில் பயந்து கொண்டு இருப்பார்கள். என்னடா பய இப்படி தூங்குறானே என்று. பெரிய பிரயத்தனத்தோடு எல்லாம் படிக்கவுமில்லை, தேர்வெழுதவுமில்லை. ஆனால் நன்றாகத் தெரியும் தேர்ச்சி பெற்று விடுவோமென. விழுந்து விழுந்து படித்த நண்பர்கள் எல்லாம் 850 ம், 950 ம் எடுத்திருந்த பொழுது நான் 780 மார்க் எடுத்திருந்தேன். What a performance!!! மதிப்பெண் பட்டியல் இதோ. (கி.பி.2000 த்தில்!!!)
தமிழ் - 157
ஆங்கிலம் - 131
கணிதம் - 119
இயற்பியல் - 122
வேதியியல் - 132
உயிரியல் - 119
மொத்தம் - 780
எனக்கு பிடித்ததென்னவோ தமிழும், ஆங்கிலமும்,கொஞ்சம் உயிரியலும் தான். வரலாறும், தத்துவமும் படித்திருக்கலாமோ என இப்பொழுது தோன்றுகிறது!. பிறகு கல்லூரியில் எனக்கு கிடைத்ததைப் படித்தேன். விலங்கியல் இளங்கலை. எனக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் மதிப்பெண்களும் பெற்றேன்.
இன்று 11 வருட Healthcare sales பணியில் கொஞ்சம் சம்பாதிக்கவும் செய்கிறேன்.
நான் எடுத்த 406, இல்லை 780 மதிப்பெண்கள் எந்த பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை என் வாழ்க்கையில். அதன் வழி கற்ற சில கற்பிதங்கள் கொஞ்சம் உதவியிருக்கிறது (that too maximum negative learnings). அவ்வளவே. அதன்பிறகான கல்லூரி வாழ்க்கை, அதற்கு பிறகான உழைக்கின்ற வாழ்வு சொல்லித் தந்த கற்பிதங்கள், சந்தித்த மனிதர்கள், வாசித்த புத்தகங்கள் என எல்லாமும் சேர்ந்துதான் இன்றைய நான்.
இப்போதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது, நல்லவேளை நான் கடினமாகப் படிக்கவில்லை என்பதைத்தான். 10 வது வகுப்பினைத்தவிர. பத்தாம் வகுப்பில் செய்த பிரயத்தனம் எனக்கு பன்னிரெண்டாம் வகுப்பினை எளிதாக எடுத்துக் கொள்ளச் சொல்லிற்று. அப்படியே செய்தேன். எனது தந்தையோ, தாயோ எப்பொழுதுமே என்னை மதிப்பெண்களுக்காக ஏதும் சொன்னதேயில்லை. பிடிக்காத பிரிவில் சேர்ந்து விட்டோமே என்று ஒரு போதும் சோர்வடைந்ததில்லை. அங்கே பிடிக்கிற மாதிரி என்ன இருக்கிறது என கண்டுகொள்கிற மனநிலை எனக்கிருந்தது, இன்றும் இருக்கிறது. இதுதான் மகிழ்வான வாழ்தலுக்கு தேவையென நினைக்கிறேன். எப்பொழுதும் நாம் சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. தவறான முடிவுகளை, அதன் விளைவுகளை எதிர்கொள்கிற மனநிலையினை ஏற்படுத்திக் கொள்கிற பக்குவம் இருந்தால் போதும். அதைத்தான் கல்வி கற்றுத்தர வேண்டும். நமது கல்வி முறைகள் முற்றிலும் ஆரோக்கியமான எதிர்கால, நோக்கில் இல்லையென்பது புரிந்து கொள்ளவேண்டிய ஓன்று. இத்தகைய பணம் சம்பாதிக்க மட்டுமே படிக்கிற, கல்வியைப் பயன்படுத்துகிற, திணிக்கின்ற பெரும்பான்மை சமூக காரணிகளிடமிருந்து இன்றைய இளையதலைமுறை தெளிவாக விடுபடவேண்டும். எனக்கு அது கொஞ்சம் வாய்த்ததாகக் கருதுகிறேன். பள்ளிநாட்களில் சுதந்திரமாக இருந்தேன். இப்பொழுதும் அப்படியே. எல்லா செயல்களை செய்கின்ற பொழுதும் அதற்கான விளைவுகளுக்காக மனதினை முடிந்தவரை தயார் படுத்தி வைத்துக்கொள்கிறேன். அவ்வளவுதான். எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய முயலுவது. ஈடுபடமுடியாவிடில் செய்யாதிருப்பது என சில சுய கட்டுப்பாடுகளோடு, எளிய திட்டமிடல்களோடு கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நானும்.
மதிப்பெண்களுக்கும் வாழ்க்கைக்கும் எப்போதும் பெரிய சம்பந்தமிருப்பதில்லை. வாழ்வென்பது, வாழ்தலென்பது மதிப்பெண்களுக்குள் அடைக்கமுடியாத எளிய நிகழ்வு.பள்ளிக்கல்வி வழி கொஞ்சம் வாழ்க்கையை கற்றுக்கொள்ளலாம். ஆனால் முழுமையான கற்பிதங்கள் அதைத் தாண்டியபின்புதான் இருக்கின்றன. தாண்டவேண்டியது அவசியம். So dear students. So no more overjoy, or over sadness.. life will never end here..!!!!advice..advice..!!!
மதிப்பெண்கள் நிரம்ப எடுத்த
பெரியோரை வியத்தலுமிலமே
எடுக்காத சிறியோரை
இகழ்தல் அதனினும் இலமே.!!
(+2 நானூறு)
Comments
Post a Comment