மரப்பல்லி
எனதறையில் அலைகின்ற
ஒரு அழகு மரப்பல்லியிடம்
உனைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தேன்
நீ அடிக்கடி சண்டையிடுவதாய்
சொன்னேன்
வாலாட்டி
ஒரு வினோத ஒலியினை
எழுப்பியது
நீ அடிக்கடி மௌனிப்பதாய்
சொன்னேன்
மறுபடியும்
வாலாட்டி
அந்த வினோத ஒலியினை
எழுப்பியது
நீ எப்போதும் உண்மை பேசுவதேயில்லையெனச்
சொன்னேன்
அதே வாலாட்டல்
அதே வினோத ஒலி
நீ கொஞ்சம் சுமாரான அழகியெனச்
சொன்னேன்
வாலட்டலின்றி
வினோத ஒலி மட்டும்
நான் உன்னை காதலிப்பதாயும்
சொன்னேன்
சுவற்றிலிருந்து
தொப்பென விழுந்தது
மரப்பல்லி
வாலட்டலுமில்லை
வினோத ஒலியுமில்லை.
புவிவாழும் இப்பிராணி
பூகம்பத்தை வரும்முன்பே உணருமாம்!!
Comments
Post a Comment