பதட்டமாயிருக்கிறது
அந்த மின்சார படிக்கட்டுகளில்
இறங்கும் போதுதான்
அவளைப் பார்த்தேன்
அடிக்கடி பார்க்கிற அவள் தான்
இன்று கொஞ்சம் ஒன்றிப் பார்த்தேன்
மனது இலகுவாயிருந்த
காரணத்தால் இருக்கக் கூடும்
வருவோர் போவோருக்கெல்லாம்
வாசனை திரவியத்தைத்
தெளித்துக்கொண்டிருந்தாள்
யாராவது வாங்கிவிட
மாட்டார்களா என்கிற ஏக்கம்
அவள் விழிவிட்டு
வெளியே தெரித்துக் கொண்டிருந்தது
காற்றில் திரவிய வாசனையும்
மனதில் அவள் நினைப்பின்
வாசனையும்
பெருகியிருந்ததில்
கொஞ்சம் வந்த வேலை
மறந்து போனது
ஆளைக்கவரும்
அலங்காரம் - கொஞ்சம்
அழகுஉடை
எனக் காலையிலிருந்து
கடை சாத்தும் வரை
என்ன மாதிரி வேலை இது?
ஏன் இப்படி கூவிக் கூவி
அழைக்க வேண்டும்?
வேண்டுமென்றால் வந்து
வாங்குவார்கள் தானே?
அவளது பிள்ளையோ
பெற்றோரோ அவளை
இவ்வாறு பார்க்கையில்
என்ன நினைப்பர்?
என் போல் நினைப்பரோ?
அவளுக்கு இந்த வேலை
பிடித்திருக்குமா??
ஏன் யாருமே
மருந்துக்கு கூட
அவளைப் பார்த்து
ஒரு புன்னகையோ,
வேண்டாமென்றோ கூறாது
கடக்கின்றனர்?
அம்மணமாய் அனைவரும்
அலைகிற ஊரில்
நானும்
கோவணத்தை அவிழ்த்து விடுவேனோ??
பதட்டமாயிருக்கிறது.
Comments
Post a Comment