இன்று தீர்ப்பு வந்திருக்கிறது
சிலர் அகமகிழ்ந்திருக்கிறார்கள்
சிலர் மனமுடைந்திருக்கிறார்கள்
சிலர் என்ன நடக்கிறதென்றே தெரியாதிருக்கிறார்கள்
அவர்கள்தான் பெரும்பாலும்
தேர்வும் செய்கிறார்கள்
இன்று தீர்ப்பு வந்திருக்கிறது
இங்கு கொலைசெய்து தப்பிக்கலாம்
இங்கு கொள்ளையடித்தும் தப்பிக்கலாம்
இங்கு பணமிருந்தால், பதவிகள் இருந்தால்
யமனையும் தின்று ஏப்பம் விட்டும் தப்பிக்கலாம்.
இன்று தீர்ப்பு வந்திருக்கிறது
இங்கு மாரி பொய்த்திருக்கிறது
இங்கு மணல் மரித்திருக்கிறது
இயற்கையை சுரண்டி
இரப்பையையும் நிரப்பும்
கூட்டங்கள் மட்டும் கொழித்திருக்கிறது
இன்று தீர்ப்பு வந்திருக்கிறது
இனிமேல் சட்டத்தில் கிறுக்கலாம்
இனிமேல் சாத்திரத்தை ஏறக்கட்டலாம்
சாமான்யனை ஏறி மிதித்து
தினம் சாகடிக்கலாம்
இன்று தீர்ப்பு வந்திருக்கிறது
எங்களுக்கான தீர்ப்பு
இனி என்றும் எழுதப்படபோவதேயில்லை
என்று உறுதியாக நினைக்கச் செய்யும்
தீர்ப்புகளில் ஒன்று
இன்று வந்திருக்கிறது!.
Comments
Post a Comment