தொலைந்த நகை
நேற்று பேரூந்துப் பயணத்தில்
சக பயணி ஒருவன்
சத்தமாக வாய்விட்டுச்
சிரிப்பதைப் பார்த்தேன், கேட்டேன்
அவனை விட்டுவிட்டு
அவன் சிரிப்பை நோக்குகையில்
வயிறு சுருங்கி
தொண்டை புடைக்க
கண்ணீர் வழிய
சுற்றம் பற்றிய
சுரணையின்றி
சுடச்சுட
அரங்கேறிக் கொண்டிருந்தது
அந்தச் சிரிப்பு
எவ்வளவு நாளாயிற்று
இப்படி சிரிப்பதை பார்த்து?
இப்படி சத்தமாகச் சிரித்து?
ஏன் இப்போது இப்படி சிரிப்பதேயில்லை?
பொன்னகையை நிரப்ப எத்தனிக்கும் நான்
புன்னகையை இழந்திருக்கிறேனே?
கேள்விகள் குவிய
இறங்குமிடம் மறந்து
பேரூந்தின் போக்கில்
போய்க்கொண்டிருந்தேன்
நகைப்பை மறந்து
நாட்கள் நகர்வதுமாதிரி
ஒருவேளை நான்
மெல்லச் சிரிக்கும்
மேல்தட்டு வர்க்கமோ?! - இல்லை
வாய்க்குள்ளேயே சிரிக்கும்
வசதி வர்க்கமோ?!
சென்றவருடம்
நண்பன் ஒருவன்
நக்கல் செய்கையில்
நகைத்ததாக நிகழ்வு
வருடத்திற்கு ஒருமுறை!
வளமான வாழ்தல்!
எப்போது வருமோ
இந்த வருட கோட்டா?!
விதை செடியாகி
விருட்சமாகையில்
என்ன இழக்கும்?
ஏன் இழக்கும்?
என்போல் இழக்குமா?
பதில்கள் தேடி
பல நேரம்
பயணித்து
சிரித்து கெடுத்தவனிடமே!
சிந்தனை தேடி வந்தேன்
இப்படிச் சிரிக்க
என்ன வைத்திருக்கிறான் இவன்
என்னிடம் இல்லாதது?
கவனிக்கத் தொடங்கினேன்
அவனிடம்
அழுக்கு சட்டையிருந்தது
அதிக பணமிருக்க வாய்ப்பில்லை
தேய்ந்த காலணி
தெளிந்த முகம்
பிறத்தியார் பற்றிய பிரஞ்கை
பிறக்கவேயில்லை
முக்கியமாக
முகத்தில்
மூளைத் தெரியவேயில்லை
எளிய உருவில்
பெரிய செல்வந்தன்!!
இவை
எதுவுமில்லாத
ஏழையா நான்?
அப்படியெனில்
இவ்வளவு காலம்
உழைத்தது? சேர்த்தது?!
இயல்புகள் மறந்து
எதிர்ப்பார்ப்புகள் வளர்த்துமனிதர்களை மடத்தனமாய்
கணிக்கத் தொடங்கியதும்
கலைந்திருக்கக் கூடும்
வாழ்தல் கூட்டின்
வளமான சிரிப்பு
இறக்கிற பொழுதில்- வாழ்வு
இளிக்காமலிருக்க
அணிகிற அத்துணை
அசிங்க ஆடைகளும் தொலைத்து
அம்மணமாகி
அன்றுபோல்
அடிக்கடி சிரிக்க
மறுபடியும்
பழக வேண்டும்!.
Comments
Post a Comment