பூனைகளுலகம்
வெளியிருந்து
வீடு நுழைகையில்
வளர்ந்தவாலைச் சுருட்டி
வராண்டாவில் படுத்திருக்கிறது
கரியபூனை ஓன்று
இருப்பதே தெரியாதவாறு
வாழ்வில் என்னிலையை
நினைவுபடுத்துதல் போல
ரேடியக் கண்களை
உருட்டி உருட்டி
பார்க்கிறது பூனை
என்னைத்தான் பார்க்கிறதென நானும்
என்கையிலிருக்கும் பையிலிருப்பதென்ன
என அதுவும் நினைப்பதுவும்
கன்னியர் பின்னழைந்த
கடந்த காதல் வாழ்வினை
கணநேரத்தில் கடத்துகின்றன
படியேறி நுழைகையில்
இறங்கி வருகிற இன்னொரு
சாம்பல்நிறப் பூனை
சட்டென நெட்டிமுறித்து
சப்தமின்றிச் சிரிக்கிறது
என்னைப்பார்த்தா
என் வாழ்வைப் பார்த்தா
என பதறுகையில்
திறக்கிறது
தாளிட்ட கதவு தானாக
காலடியில் இன்னுமொரு பூனை
ஒளிர்கின்ற கண்கள்
உயர்ந்த காதுகள்
உள்ளடங்கிய உதடுகள்
சிலிர்த்து விரிந்த மீசைமயிர்கள்
சின்ன மூக்கு
செதுக்கியதுபோல் பஞ்சுமுடிகள்
பூனைகள் ஏன் செல்லப்பிராணிகள்
புரிகிறது இப்போது!
உள்ளே வந்து
உண்டு களித்து
உடல் கிடத்தி
உறங்கியதும்
நான் பூனையாய் மாற
நாயொன்று துரத்துவதாக
நல்லக் கனவொன்று வருகிறது.
Comments
Post a Comment