புத்தனாவது கடினம்
செய்ய ஒன்றுமில்லா
சிந்தனைப் பொழுதுகளில்
நின் நினைவற்று
மூளை கசக்கி
முயன்றது முடித்தலே
பெரும் பிரயத்தனம்தான்
அன்றொருநாள்
நளனாக நினைத்து
நல்லபடி சமைத்தேன்
நன்கு உண்டேன்
உறக்கம் கொள்ளுகையில்
உன்நினைவு கொன்றது
பிறிதொருநாள் உழைப்பில்
பிணைந்து தொலைந்து
பின்னிருக்கை அமர்ந்து
பேரூந்தில் பயணிக்கையில்
சகபயணி தீண்டல்
சட்டென நின் நினைவைத் தந்தது
மணிக்கொரு கனமாய்
மூளை மயக்கம் கொள்ளுகையில்
மயங்கிக் கொள்கிறது
கண்ணில்பட்டு - கிட்டே
கடக்கையில் மறையும்
கானல் நீர்போல்
நிந்தன் நினைவு
தியானத்தில்
ஒருபொருள் தீர்மானித்து
உச்சி குவிக்க சொன்னதும்
உடனே உன்முகம் தீர்மானித்து
என்சொல் மறுக்கிற
இதயம் தொலைக்க
செத்துத்தான் பிறக்கவேண்டும்
நின் சிந்தனை தொலைக்க!!
இனி நான்
புத்தனாவது
இயலாத கடினம்!
Comments
Post a Comment