தடை செய்யப்பட்ட கவிதைகள்
நான்
எழுதி பகிராத
எண்ணற்ற
தடை செய்யப்பட்ட கவிதைகள்
என்னிடத்தில்
குவிந்து கிடக்கின்றன
அவை பெரும்பாலும்
நாம் பகிர்ந்துகொண்ட
உடலைப் பற்றியதாயிருக்கின்றன
நீ பகிராத
உன்னுடலைப் பற்றியதாயும்
இருக்கின்றன
இருநீர் உண்ட
இருதயம் சுண்ட
நினைவுகள் பின்னிக்கிடக்கும்
நிம் பிறப்பின் ரகசியங்கள்
நிறைந்தவை அவை
காமம் கொப்பளிக்கும்
கனவில்
நானும் நீயும்
நிகழ்த்துவதாய்
நான் மட்டும் கண்ட
சொப்பன குவியல்கள்
நிரம்ப உண்டு
அவற்றில்
உன் உதட்டுக் குவிப்பின்
ஓரங்களிலிருந்து
கால்நகக் கணிப்புவரை
வரலாற்று வர்ணனைகள்
வரியோடிக் கிடப்பவை அவை
தூய ஆடை
அணிந்துகொண்டு
துப்புறவு உடல்கொண்டு
அழுக்குமனதுடன்
நாம் அலைந்த தினங்கள்
அடுக்கப்பட்டுள்ளன வரிகளாய்
அக்கவிதைகளில்
என்பாதி நீயென
உன்பாதி யாரென
உணர்ந்துகொள்ள
உதவும் போதிமரங்கள்
ஒருவகையில் எனக்கு
அக்கவிதைகள்
நான் நினைவில் தியானிக்கும்
கனவில் பிராயணிக்கும்
காற்றில் அடங்காத
காதலி உன்னுடன்
கைகள் மட்டும்
கோர்த்து அலைகிறவாறு
காதல் கவிதைகளும்
கொஞ்சமதில் உண்டு!
நீயும் நானும்
வடிந்து உறைந்தபின்னும்
நினைவாய் வாழ
நிச்சயம் வாழும்
எனது இந்த
தடைசெய்யப்பட்ட கவிதைகள்.
Comments
Post a Comment