காறிய எச்சில்





கணவனை இழந்த
கைம்பெண் ஒருத்தியியைத்
எனக்குத் தெரியும்
அடிக்கடி
அவளை
அர்த்தமின்றி
காறிஉமிழும்
கரிய உலகத்தின்
பெரும்பகுதியையும் தெரியும்

நல்லவிதமாய் எனை
நாளும் பாதிப்பதால்
நாசுக்காய் தள்ளியிருந்து
நன்றாய் அவளை கவனிப்பதை
நல்அலுவலாய்க் கொண்டிருக்கிறேன்

அன்றொருநாள்
அந்திமப்பொழுதில்
ஆண்சட்டை அணிந்து
அழகாய் இருந்தாள்
அவ்வளவுதான்
காறிஉமிழத் தொடங்கியது
காழ்புணர்ச்சி தாளாத
கரிய உலகம்

புதல்விகளின் புரிதலால்
புதிதாய் அணிவதை
பொட்டோடு வருவதை
வழக்கமாகக் கொண்டிருந்தாள் அவள்
உடையவன்
உலகத்திலிருந்து தொலைந்தாலும்
உள்ளத்தில் தொலையாததும்
காரணமாயிருக்கலாம்
காறி உமிழ்தல்கள்
கண்மறை பேச்சுகள் தொடர்ந்தன

மகளின் திருமணத்தில்
மங்கலம் கருதி
மறைந்திருக்க பணித்தது
சாத்தான்களின் கூடாரமான
கரிய உலகம்

கொதித்து வசைமாரிப் பொழிந்த
ஆண்ம மகள்களால்
கொண்டாட்டம் தொலைத்தது
மனிதர்கள்  உருவில்
மடையராய் நடமாடும்
கரிய உலகம்

இல்லவனின்றி
இறுக்கும் உள்ளுலகம்
சுருக்கும் வெளியுலகம்
என்ன செய்வாள்
எனக்குப் மிகப்பிடித்த
கைம்பெண்ணாம் அவள்

தலைகிறுகிறுக்க
கொலைவெறி மேலோங்க
கொன்று குவிக்கலாம்
கரிய உலகமதை என
அவளின் சார்பாய்
அவசர திட்டங்கள்
தீட்டத் துவங்கினேன்

திட்டப் பிரதியோடு
அவளை சந்திக்கையில்
என்னிடத்தில் சொன்னாள்
நானும் திட்டங்கள்
வைத்திருக்கிறேன்
கீழ்க்கண்டவை அவை
எனும் விவரிப்போடு

இன்று முதல்
பெரிய சிவப்பு பொட்டுக்கடை
தழைய கட்ட புடவைக்குவியல்
மணக்கும் பூக்கள் மனம்போல் சூட
அங்கம் தாளாத ஆபரண அணியல்
அதிகாரம் ஒடுக்க நிரம்ப அகங்காரம்
மோதி மிதிக்க வலுத்த கால்கள்
முகத்தினில் உமிழ நிரம்ப
காறிய எச்சில்

என முடிந்தது அவள்
திட்டங்களின் கோப்பு

சந்திப்பு முடிந்து
வெளிவருகையில்
நானும் கொலைத்திட்டத்தை
கொளுத்திவிட்டு
காறிய எச்சிலை
வாய்கொள்ளத் தொடங்கியிருந்தேன்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்