நன்றிகள் 2014 ம் ஆண்டுக்கு :-

                                   எனது 2014 - ஒரு பார்வை


     இப்படியான ஆண்டின் இறுதி தினத்தில் சென்ற வருடம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதே நினைவிலில்லை. இந்த 2014 ல் இப்படி உட்கார்ந்து திரும்பிப் பார்த்து யோசிப்பதையே கூட இந்த வருடத்தில் பெற்ற மிகப்பெரிய முதிர்ச்சியாக எண்ணுகிறேன்.

கவிதைகள்:-
     எனது கவிதைகளுக்கு இது முக்கியமான வருடம். இன்மையில் எனது கவிதைகள் வெளியானது தொடர்ச்சியாக.  சில இலக்கிய நண்பர்களின் அறிமுகமும், அவர்களுடைய எழுத்துக்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்த வருடத்தில்தான் வாய்த்தது. இலக்கின்றி கிறுக்கிக் கொண்டிருந்த என்னை கொஞ்சம் இலக்குகள் நோக்கி சிந்திக்க வைத்து எனது கவிதைகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்க்கொண்ட வருடம் 2014. அடுத்து பயணிக்க வேண்டிய  பயணங்கள் குறித்த தெளிந்த சிந்தனைகளையும் விதைத்த வருடம். திரு.அபிலாஷ் அவர்களுடனான சந்திப்பும், திரு .எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பும் இந்த வருடத்தில் மறக்கமுடியாத அர்த்தமுள்ள சந்திப்புகள். blog ஆரம்பித்து கொஞ்சம் ஆக்கப் பூர்வமாக எழுதத் தொடங்கிய வருடம்.

எனது வாசிப்பு :-
     நான் அதிகம் வாசித்த வருடம் 2014. முகப்புத்தகத்திலும், இணையத்திலும் நூல்களாகவும், சஞ்சிகைகளாகவும் மண்டை வலிக்க, நிறைய இரவுகளிலும், பகலிலுமாக புத்தகங்களை கட்டிக்கொண்டே கழிந்த வருடம். ஆங்கிலத்திலும், தமிழிலும் என மாறி மாறி வாசித்து இருக்கிறேன். நிறைய நண்பர்கள் முக நூல் வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்கள் இந்த வருடத்தில். அதிக அளவில் தமிழ் நூல்களை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக எனக்குள் விழுந்த வருடம்.

எனது புகைப்படவியல்:-
     எனது புகைப்படவியல் ஆர்வத்திற்கும் கொஞ்சம் தீனிபோட்ட வருடம். காமெராவும் கையுமாகவே மேற்கொண்ட பயணங்களில் திரிந்த திருப்தி இந்த வருடத்தை நினைக்கையில் எனக்கு உண்டு. சில நல்ல புகைப்படங்களும் இந்த வருடத்தில் எடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் குறித்து CWC, MIM நண்பர்களோடு முகப்புத்தகம் வாயிலாக நிறைய பரிமாற்றங்கள் நடந்த வருடம் இது.  சென்னை செம்மொழிப் பூங்கா, நண்பர் வீடு, உறவினரின் கயத்தாறு தோட்டம், எனது குடும்பத்தோடு, மகளோடு, மகளை எடுத்த புகைப்படங்கள், எனது சொந்த ஊரின் புகைப்படங்கள் என நிறைய நினைவுகளை இந்த வருடத்தில் புகைப்படங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளேன். மிக்க மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகின்றன அவற்றை திரும்பப் பார்க்கையில்.

எனது குடும்பம்:-
     கொஞ்சம் நிதானம் பழகிய வருடம். முடிந்தவரை எல்லாவற்றையும் நல்லவிதமாகவே பார்க்க முயன்ற வருடம். மனைவியோடும் அதிகம் உரையாடியதும், மகளோடு அதிகம் விளையாடி மகிழ்ந்ததுவும் இந்த வருடம் தான். நன்றாக பேசப் பழகும் மகளோடு மழலை ரசிக்க கழித்த பொழுதுகள், இந்த வருடத்தில் மறக்க முடியாதவை. அம்மா, சகோதரர்கள், ஆச்சி, கொஞ்சம் உறவினர்களோடு என நன்றாக கழிந்த வருடம். வாழ்வை அதிகம் ஊன்றிக் கவனித்ததுவும், மகிழ்ந்ததுவும் அதிகமென நினைக்கிறேன்.

எனது நட்புகள்:-
      மிச்சமிருக்கிற வாழ்வுமுழுவதும் கூட வருகிற மாதிரி ஒரு நட்பை சம்பாதித்திருக்கிறேன். ஒரு நட்பை இழந்திருக்கிறேன்.ஒரு பள்ளிகால தோழியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்திருக்கிறேன். நண்பர்களுடனான உரையாடல்கள் இந்த வருடத்தில் அதிகம். அதிகம் பொருட்செலவு செய்த வருடமும் கூட.

     நிறைய நினைவுகளை, கற்பிதங்களை, அனுபவங்களை தந்திருக்கிறது 2014. 2015 என்ன தருகிறதென்று பார்க்கலாம்.!!   

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔