வாடகை வீடு :-



தான் அதிக நேரம் 
அமர்ந்திருக்கும் 
மொட்டைமாடியில்
போய் நின்று
சில நொடிகள் 
மௌனித்து விட்டு 
வருகிறார் அப்பா 

கலைந்துபோய் 
காலியாகிக் கிடக்கும் 
சமையலறையிலும் 
படுக்கையறையிலும் 
பல நிமிடங்கள் 
நின்று உதிர்க்கிறாள் 
சில கண்ணீர் துளிகளை அம்மா

கதவினையும் 
தான் எப்போதும் 
பிடித்து நடக்கும் 
ஜன்னல் கம்பிகளையும் 
தடவி கணக்கிறாள் 
தள்ளாத பூட்டி ஆச்சி

தினம் காலையில்
அரிசிக்கு காத்திருக்கும்
சேவலுக்கும்
சோற்றுக் காத்திருக்கும்
காகத்துக்கும், அணிலுக்கும்
யார் சொல்லுவார்கள்
என்ற வருத்தத்தில்
ஆச்சி

அழுகைக்கு முந்தைய 
மூஞ்சிகளைத் தாங்கி 
அண்டை அயலார் 
என எல்லோரும் 
விக்கித்து நிற்க

"ஐ ஜாலி 
நாங்க புது வீட்டுக்கு போறோமே" 
என மகிழும் சிறு மகளை 
என்ன சொல்லுவதன்று 
தெரியாமல் 
மழங்க மழங்க 
விழித்து விம்முகிறது  
பிரிவுத் துயரில் 
வாடிக் கிடக்கும் 
வாடகை வீடு.   

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்