இது எங்கள் குழந்தைகளின் பூமி :-
வன்முறைக் கத்தியெடுத்து
வாஞ்சையாய் நெஞ்சில்
சொருகிப் பார்க்கிறான்
கத்தி கச்சிதமாய் உள்ளிறங்கி
ஒவ்வொரு செல்லாய், சதையாய்
கிழிக்கையில் பீறிட்டு
கிளம்புகிறது சாத்தான்களின்
சதசதக்கும் இரத்தம்
சாதித்த சத்தம்
எங்கிருந்தோ ஒரு
தேவ தூதன்
ஓடிவருகிறான் குழந்தையாக
சிறுவன்போல
நுழைந்த கத்தியினை
நொடிப்பொழுதில்
பக்குவமாய் வெளியெடுத்து
பலமருந்துகள் தடவி
காயமாற்ற எத்தனிக்கிறான்
சாத்தானுக்கும் வேதம் ஓதும்
சலனமின்றி
வலி காண்பிக்காது
வயதை கவனிக்காது
அவன் வெளியெடுத்த கத்தியை
அன்பின் வாசமின்றி
அவன் நெஞ்சிலே சொருகி
கொப்பளிக்கும் குருதியிலே
களிப்புறும் தீவிரவாத சாத்தானை
களையெடுப்பது எப்படி?
இரங்கல்களும்,
ஆறுதல்களும்
உதவிகளும்
எப்படி திரும்பச் சேர்க்கும்
தொலைந்த கனவுகளை??
துரத்தும் நினைவுகளை??
உயிர்வாதை தெரியாத
ராணுவமும் - பதில்
உயிர்பலி கேட்கும்
தீவிரவாதமும்
எங்கேனும் ஒழிந்து போங்கள்
இது
எங்கள் குழந்தைகளின் பூமி -அவர்கள்
எங்களோடு வாழும் சாமி.
Comments
Post a Comment