வாசிக்கும் பழக்கம் மரபியல் தொடர்பானதா?
நான் ஒரு நான்காவது படித்துக்கொண்டிருக்கையில் என நினைக்கிறேன். எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டருகே முருகண்ணன் சலூன் கடை வைத்திருந்தார். ஒல்லியாக கூன் விழுந்த தேகக்காரர். எனது தந்தையார் அடிக்கடி தலைமுடிதனை வெட்டுவதற்காக எனது தம்பிகள் இருவரையும், என்னையும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே கொண்டு உட்கார வைத்து விடுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழியும். காத்திருந்து முடி வெட்டிவிட்டு வருவோம். மூன்றுபேருக்கும் ஒரேமாதிரிதான் வெட்டுவார்.( அனேகமாக ஊருக்கே ஒரே மாதிரித்தான் வெட்டுவார் என நினைக்கிறேன்!!) நாங்கள் மூவரும் சண்டையிட்டுக் கொள்வோம் ஒரே மாதிரி வெட்டியதற்காக. ( நீங்கதான் அண்ணன் தம்பிங்கன்னு தெரிய வேண்டாமா அதான் அப்பிடி வெட்டிருப்பான் இது எங்க அம்மா வாதம். செம! தீபாவளிக்கு மட்டுந்தான் புதுத்துணி எடுத்துத் தருவார்கள் வீட்டில், ஒரே மாதிரி, நீளமா சட்டைக்கும், டிரவுசருக்கும் துணி எடுத்து ஒரே மாதிரி சட்டையும், டிரவுசரும் தைத்து தருவார்கள். வானத்தைப் போல விஜயகாந்த் சகோதரர்கள் மாதிரி. அதற்கும் ஒரு பெரிய சண்டை நடக்கும் அது வேற கதை.) நாம மேட்டருக்கு வருவோம்.
செய்தித்தாள்களோடு முதல் அறிமுகம் எனக்கு முருகன் அண்ணன் சலூன்கடையில்தான் நிகழ்ந்தது. தினமும் காலையில் நிறைய ஆண்கள் கூடிநின்று செய்தித்தாளை வசிப்பது எனக்கு விசித்திரமாயிருக்கும். எதோ பள்ளிகளில் நாங்கள் பரிட்சைக்கு படிப்பதுபோல. விவரம் தெரிய ஆரம்பித்த பின் நானும் அவர்கள் போல் காத்திருந்து வெள்ளிக்கிழமை தோறும் வரும்
சிறுவர்மலரைப் படிக்க ஆரம்பித்தேன். யார் எனக்கு சிறுவர்மலர் பற்றி சொன்னார்கள் எப்படி அதை முதலில் படிக்க ஆரம்பித்தேன் என்று எனக்கு நினைவிலில்லை.
அப்பொழுதெல்லாம் சிறுவர்மலர் படிக்க பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். முருகன் அண்ணன் கடையிலிருந்து யாராவது வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். அதை திரும்ப அவர்கள் கொண்டு வந்து தரும்வரை காத்திருந்து படிக்க வேண்டும். தனுஷ்கோடி மாமா வீட்டிலும் தினமலர் வெள்ளியும், ஞாயிறும் மட்டும் வாங்குவார்கள். மாமா வீட்டில் அத்தையும் அவரது மகள் முத்துவும் அவ்வளவு எளிதில் சிறுவர் மலரை தந்துவிட மாட்டார்கள். அவர்கள் இருவருக்கும் தெரியாமல் செந்தி அண்ணன் எடுத்துப் படிக்கத் தருவார். அதை அங்கே அவர்கள் வீட்டில்வைத்தே படிக்க வேண்டும். கடகடவென படித்து முடித்து விட்டு கொடுத்துவிட்டு மீண்டும் அடுத்த வாரத்துக்கு காத்திருப்பேன். பின்னாட்களில் அப்பு வீட்டுக்கு செல்லத் தொடங்கியதிலிருந்து எனக்கு சிறுவர்மலர் எளிதாக படிக்கக் கிடைத்தது.
சிறுவர்மலரில் வரும் எல்லாக் கதைகளையும் ஒன்றுவிடாது படித்துவிடுவேன். கதைகளின் பெயர்கள் குறித்து அதிகம் நியாபகமில்லை. சிந்துபாத் கதையும், கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு சிறுவர் கதையும், அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையும் இன்றும் நினைவிலிருக்கிறது. தனுஷ்கோடி மாமா வீட்டில்ருந்து இந்த கதைகளைப் படித்துவிட்டு வரும்பொழுது அந்த கதைகளின் உலகத்தில் நானுமிருப்பதாய் கற்பனை செய்துகொண்டவாரே வீட்டிற்கு நடந்து வருவது அவ்வளவு அலாதியான சுகம். சிறுவர் மலருக்கென்று ஒரு வாசமிருக்கும். அந்த நாட்கள் அவ்வளவு அழகானவை.
அப்பு வீட்டுக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, அம்புலிமாமா, கோகுலம், சிறுவர் மலர், ராணி காமிக்ஸ் என நிறைய சிறுவர் புத்தகங்கள் அறிமுகமாயின. அப்பு வீட்டில் அவர்களது தாத்தா அறையிலிருந்து கொண்டு ஆளுக்கொரு புத்தகமாக நான், பாபு, அப்பு எல்லோரும் விழுந்து விழுந்து படித்தது ஒரு தனி அனுபவம். ராணி காமிக்ஸ்ல் மாயாவியின் கதைகளை ரசித்துப்படித்த தினங்கள் அவை. அப்பு வீட்டில் அவர்களது அம்மா நன்றாக படிக்க கூடியவர்கள். சென்ற மாதம் ஊருக்கு சென்றிந்தபோது கூட ஆனந்த விகடனில் வந்த கிரீஸ்டோபர் நோலனைப் பற்றிய கட்டுரை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவ்வளவு வாசிப்பு ஆர்வமிக்கவர். அப்புவும் எப்பொழுதும் பல மாந்திரிக சிறுவர் கதைகளை நோட்டு, நோட்டாக அப்பொழுதே எழுதுவான். பின்பு அதை அவன் அப்படியே விட்டுவிட்டது கொஞ்சம் சோகம். அவர்கள் வீடு இல்லாவிடில் எனது வாசிப்புக்கு பெருந்தீனி கிடைத்திருக்காது அப்போது.
பின்பு ஏழாவது படிக்கிற பொழுது, வீரப்பன் பற்றிய செய்திகளை பஸ் ஸ்டாண்டில் இருந்த களஞ்சியம் சலூனில் விழுந்து விழுந்து படிப்பேன். களஞ்சியம் எனக்காகவே அந்த தினத்தந்தி செய்தித்தாள்களை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்திருந்து தருவார். ( "பாரு இந்தப் பையன் இந்த சின்ன வயசில எப்படி பேப்பர் படிக்குறான். நீயும் இருக்கியே ,எருமை எருமை" என்று என்வயதொத்த அவரது பையனை அந்தக் காய்ச்சு காய்ச்சுவார் களஞ்சியம், அவர் பையன் என்னால் கொல்லாமவிட்டது புண்ணியம்!!) எட்டாம் வகுப்பில் ஹாவாலா ஊழல் நிகழ்ந்த சமயத்தில் அது பற்றிய செய்தியை கத்தரித்து எடுத்துச் சென்று அதற்காக எங்கள் தலைமையாசிரியர் திரு.மதுர நாயகம் என்னைப் பாராட்டியது நினைவிலிருக்கிறது. பின்பு ஹோட்டல் வைத்திருந்த மணியண்ணன் கடையில் குமுதம், கற்கண்டு போன்றவற்றை சென்று வாசித்தது நினைவிலிருக்கிறது.
பின்பு காமராஜர் பள்ளிக்கு வந்த பொழுது பேட்டை வீரபாகு நகர் நூலகத்தில் மெம்பராகி படித்தது, கல்லூரி நூலகத்தில் சாண்டில்யன் முதலான நாவலாசிரியர்களை வாசித்தது,தம்பி மகாதேவன் (சதீஷ்) வீட்டிலிருந்து எடுத்துவந்து விகடன், குமுதம் வசித்தது எனத் தொடர்ந்தது. எனது ஊரான சுத்தமல்லியிலிருந்து பாளையங்கோட்டை மாவட்ட நூலகத்துக்கு சைக்கிளில் சென்று வாசித்தது. (கிட்டத்தட்ட 20 KM தூரம் சைக்கிளில் செல்வோம் நானும் நண்பர்கள் வெயிலுமுத்து, மீனா கணேசன் ஆகிய இருவரும். இப்போ சத்தியமா முடியாது!!). சென்னை வந்த காலங்களில் கன்னிமாரா நூலகம் சென்றது, வாசிக்கும் நண்பர்களின் உந்துதல் என ஏதோ ஒருவகையில் இன்றும் வாசித்தல் தொடருகிறது. இடைப்பட்ட காலங்களில் எல்லாம் குறைந்த பட்சம் செய்தித்தாள்களையோ, விகடன் போன்ற புத்தகங்களையோ வாசித்தே வந்திருக்கிறேன். தீவிர வாசிப்பாளனாக இல்லாவிட்டாலும் வாசிப்பாளனாக இருந்துகொண்டிருக்கிறேன்.
எனக்கு ஏன் வாசித்தல் பிடித்தது? என்னோடு சலூனுக்கு வந்த எனது தம்பியர் இருவருக்கும் சிறுவர்மலர் பற்றி அப்பொழுது தெரியுமா எனத் தெரியவில்லை. அவர்களை ஏன் சிறுவர் மலர் ஈர்க்கவில்லை?. நான் விழுந்து விழுந்து தினத்தந்தி படித்த களஞ்சியம் கடையில் என்னருகிலேயே பெரும்பாலும் உட்கார்ந்திருந்த களஞ்சியம் அவர்களின் மகனுக்கு ஏன் படிக்கத் தோணவில்லை?. எனக்கு நிறைய சிறுவர் புத்தகங்களை அறிமுகம் செய்த அப்பு வீட்டில் இப்பொழுது அப்புவோ, அவனது அண்ணன் பாபுவோ,
ரோகிணி அக்காவோ வாசிப்பதாகத் தெரியவில்லை. அவர்களது அம்மா இன்றும் கண்ணாடி அணிந்துகொண்டு எதையாவது வாசித்த வண்ணமிருக்கிறார். மறைந்த எங்கள் பரமசிவன் மாமா கடுமையாக வாசிப்பார். இப்போது எனது குடும்பத்திலும் என்னைத் தவிர யாரும் பெரிதாய் வாசிப்பதாயத் தெரியவில்லை. ஏன் இப்படி.? ஒவ்வொரு குடும்பத்திலும் பெரும்பாலும் ஒருவர் மட்டும் வாசித்தலை நேசிக்கிறார். அப்படியெனில் இது என்ன பரம்பரை வழி வருகின்ற ஜீன்களின் மாயமா.? எது சிலரை தொடர்ந்து வாசிக்கச் செய்தும், பலரை அந்த வாடையே இல்லாமலும் இருக்கச் செய்கிறது. எனக்கென்னவோ புகுத்துதலின் வழி, திணித்தலின் வழி இது நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. எனக்கு யாரும் சொல்லியும் கொடுக்கவில்லை. நான் வாசிப்பேன் என்பதே எனது குடும்பத்தில் அநேக பேருக்குத் தெரியாது. இயல்பாய் வாசித்தலை பழக்கமாய் கொண்டிருந்த அனைவரும் இன்னும் வாசிக்கிறார்கள் , அப்புவின் அம்மா மாதிரி, எங்கள் பரமசிவன் சித்தப்பா மாதிரி, எனது மாமியார் மாதிரி. ஏனில்லை மற்றவர்கள்?? எனது எண்ணப்படி பழக்கத்தையும், சூழ்நிலைகளையும் தாண்டி ஏதோ ஒரு மரபியல் உந்துதல் வாசித்தலை நேசிக்கச் செய்கிறது என நினைக்கிறேன். அத்தகைய உந்துதல் இயல்பாய் ஏற்படாமல், புகுத்தப்பட்டவர்கள் சில காலத்தில் வாசித்தலை விட்டு விலகிப் போவதையும் பார்க்கிறேன். இயல்பாய் வாய்த்தவர்கள் விலகிப்போனாலும் வந்து மறுபடியும் சேர்ந்துவிடுகிறார்கள். தம்பி மகாதேவன் (சதீஷ்) சொன்னது நியாபகம் வருகிறது. இப்போதெல்லாம் அவன் நெடுங்காலமாக படித்துக் கொண்டிருந்த அந்த வார இதழைப் படிப்பதில்லை, அனால் அதற்க்கு பதிலாக வேறு சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பதாய் சொன்னான். ரசனை மாறும் போதும் வேறு புத்தகங்களைத் தேடிபடிப்பவர்களே பிறவி வாசிப்பவர்கள். மற்றவரெல்லாம் போட்டித் தேர்விற்கு படித்துவிட்டு அந்தப் புத்தகத்தை தொலைத்துவிடுபவர்கள் போன்றவர்களாகத் தானே இருக்கிறார்கள். வாசித்தலை இப்படி நாம் தொலைத்துவிட, மறந்துவிட முடியுமா என்ன?.
ஏன் இசைக்கருவிகள் வாசித்தலை சிலர் மட்டும் செய்வது போல, அஞ்சல் தலைகளைகளை சேகரித்தல் போல, இன்னும் பிற பொழுதுபோக்குகளைப் போல வாசித்தல் இருக்கக்கூடாது?. ஏன் எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்?. இந்த மாதிரி கேள்விகளும் எழுகின்றன எனக்குள். வாசித்தலை பிடித்தோ, பிடிக்காமலோ கட்டாயத்தின் பேரிலோ நாம் நமது கல்விக்கூடங்களில் செய்கிறோம். அதன் பயனாக விளைவது எத்தனைப் பயனென்று நமக்குத் தெரியும். அப்படியிருக்கையில் வாசித்தலை எந்தவொரு குறிப்பிட்ட பொழுதுபோக்காக கருதவே முடியாது. அவரவர் விருப்பம் சார்ந்தோ, துறை சார்ந்தோ வாசித்தாலும், வாழ்வுக்காக நாம் கட்டாயம் வாசிக்கவேண்டியவை நிரம்ப உள்ளன. உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். திருக்குறளை நீங்கள் வாசித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் உங்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வோ, வீட்டிலும், வெளியிலும் பெரிய மரியாதையோ திடீரென கிடைத்து விடாது. ஆனால் அவற்றை அடைவதற்கு திருக்குறள் செய்திகள் உங்களுக்கு வழிகாட்டும். ஆக வாழ்வியல் இலக்கியங்களை வாசித்தல் அவசியமாகிறது.
ஏன் இசைக்கருவிகள் வாசித்தலை சிலர் மட்டும் செய்வது போல, அஞ்சல் தலைகளைகளை சேகரித்தல் போல, இன்னும் பிற பொழுதுபோக்குகளைப் போல வாசித்தல் இருக்கக்கூடாது?. ஏன் எல்லோரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்?. இந்த மாதிரி கேள்விகளும் எழுகின்றன எனக்குள். வாசித்தலை பிடித்தோ, பிடிக்காமலோ கட்டாயத்தின் பேரிலோ நாம் நமது கல்விக்கூடங்களில் செய்கிறோம். அதன் பயனாக விளைவது எத்தனைப் பயனென்று நமக்குத் தெரியும். அப்படியிருக்கையில் வாசித்தலை எந்தவொரு குறிப்பிட்ட பொழுதுபோக்காக கருதவே முடியாது. அவரவர் விருப்பம் சார்ந்தோ, துறை சார்ந்தோ வாசித்தாலும், வாழ்வுக்காக நாம் கட்டாயம் வாசிக்கவேண்டியவை நிரம்ப உள்ளன. உதாரணத்திற்கு திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். திருக்குறளை நீங்கள் வாசித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் உங்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வோ, வீட்டிலும், வெளியிலும் பெரிய மரியாதையோ திடீரென கிடைத்து விடாது. ஆனால் அவற்றை அடைவதற்கு திருக்குறள் செய்திகள் உங்களுக்கு வழிகாட்டும். ஆக வாழ்வியல் இலக்கியங்களை வாசித்தல் அவசியமாகிறது.
இத்தகைய வாசித்தலின் அவசியத்தை தேவையை உணர்ந்து வாசித்தலை வளர்ப்பதற்க்கான வேலைகளை, வழிகளை கடமையாக எண்ணி எல்லோரும் கட்டாயமாகச் செய்தாக வேண்டும். சக மனிதர்கள் மீது நம்பிக்கையற்ற சமூகமாக மாறியிருக்கும் இன்றைய நாம்!, புத்தகங்களையும் தள்ளிவைத்துவிடின், சிந்தனையில் கற்கால மனிதரானாலும் ஆகிவிடுவோம். பள்ளிகளிலும், வீடுகளிலும் வாசித்தலை ஊக்குவிக்கும் வண்ணம் அந்ததந்த வயதினருக்கு ஏற்ற புத்தகங்களை வாங்குவதும், விழாக்களில் பரிசளிப்பதும், நண்பர்கள் கூடுகையில் புத்தகங்கள் குறித்தும் பேசுவதும், விவாதிப்பதும் என சில செயல்களை முயலவேண்டும். காலைக்கடன்களைப் கழிப்பதைப் போல வாசித்தலையும் ஒரு பழக்கமாக செய்ய எல்லாத் தலைமுறையினரும் முயல்வதிலிருக்கிறது நல்ல வாசிப்பு மரபியலின் எதிர்காலம், மற்றும் புதிய, பழைய புத்தகங்கள் வருதலின் எதிர்காலம். வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும் வாசித்தல். வாசிப்புக்கான நம் மரபியலை மாற்றுவோம்.
Comments
Post a Comment