உங்களுக்கேன் வழிக்கொரு இறை.??
எங்கு தோன்றியது
எனத்தெரியாமல்
எழுதும் எழுத்துபோல்
ஆரம்பிக்கிறது
அவளின் பிரசவ வலி
அடிவயிற்றில்
அப்பிப் பிடித்து
வலி வாதை
வதைக்கையில்
உலகம் மட்டும் ஏனோ
இயல்போடே இருக்கிறது
மரண வாசலின்
சுவர்களை போலிருக்கின்றன
மல்லாக்கப் படுத்துக் கொண்டு
மருத்துவமனையில்
பிரசவஅறை நோக்கி
பயணிக்கிற பாதைகள்
அங்குமிங்கும் அமுக்கி
பிஞ்சுக்குழந்தை பிதுக்கி
பிறப்பிக்கும் வலி
பேரண்டம் உடைகிற பெருவலி
போனாலும் போகலாம்
உயிர்வளி உதடுகள் வழி
அந்தரங்க உறுப்புவழி
அவர்கள்
அறிவியல் தந்திரங்கள் செய்கையில்
தோன்றுமெண்ணம் தொடுக்க
தொன்மையிலுமில்லை
தோதுவான மொழி
கல்யாணம் கசக்கிறது
கலவி கசக்கிறது
கல்லறை வலி
கவ்வும் நரகமாய்
கால்களுக்கிடையில் இருக்கையில்
இறந்துதான் பிறக்கிறோம்
இருந்தும் பிரசவிக்கிறோம் எனில்
நாங்கள் இறையன்றி
வணங்குவதற்கு உங்களுக்கேன்
வழிக்கொரு இறை.??
Comments
Post a Comment