ஏன் இத்தனை புலம்பல்கள் ??

 

   
     நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அலுவலகம், நிறைய நண்பர்கள் யாருடன் என்ன பேசினாலும் முடிவில் பணம் சார்ந்த, அலுவலக பதவிகள் சார்ந்த பேச்சுகள் வந்து விழுகின்றன. நிறைய புலம்பல்களையும், வெறுப்பையும் தாண்டி பேச இந்த பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒன்றுமே இல்லையா என எரிச்சலுருவதாகவும் சொல்லி அலுத்துக்கொண்டார்.

     உண்மைதான், நகர சூழ்நிலையில் யாராவது ஏதாவது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் நேரங்காலந் தெரியாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலனவர்களின் சராசரி அலுவல் நேரம் அதிகரித்திருகிறது. சராசரி உறக்க நேரம் குறைந்திருக்கிறது, நாம் விரும்பாவிட்டாலும் வீட்டிலும், வெளியிலும் யாரோ ஒருவர் அலுவலக அரசியலையும், பணம் சார்ந்த கதைகளையும் பேசுவதைக் கேட்க வேண்டியதாயிருக்கிறது. அதுதாண்டி நிறைய விஷயங்களைப் பற்றிய சிந்தனையோ, புரிதலோ இல்லாமல் "life is a race" என்று ஒரு பெருங்கூட்டம் ஓடுகையில் இடையில் இடிபடுகின்ற மன நிலையில் சிலர் இருக்கிறோம். முறையற்ற, உறக்கமற்ற உடல், மனது நமது சிந்தனையின் போக்கை மாற்றி நம்மை எரிச்சலடையச் செய்கிறது. அதனால் உருவாகும் அழுத்த, குழப்ப மனநிலைகள், எதிர்காலம் குறித்த பயங்கள் புலம்பல்களாக வெளிப்படுகின்றன எல்லோரிடமும். அலுவலகம் விட்டு வந்ததும் அலுவலகம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிற பலரையும் பார்க்கிறேன். கேட்கிறவனுக்கு புரிகிறதா? இல்லையா என்ற எந்த சிந்தனையும் இன்றி புலம்புவதற்கு இரு காதுகள் உள்ள ஒரு ஆள் கிடைத்துவிட்டான் என்ற மனநிலையில் குமுறிக் கொட்டுகின்ற வாழ்வியலுக்கு எல்லோருமே வந்துவிட்டோம். இந்த வாழ்வியல் மாற்றத்தை உணர்ந்து, அதிலிருந்து தெளிவாக விடுபட திட்டமிட்டு சில மாற்று ஏற்பாடுகளை செய்யாவிடில், நாம் விரைவில் சட்டையைகிழித்துக் கொண்டு திரியும் காலம் வந்தாலும் வரும்.

     எப்படி எதிர்நோக்குவது இந்த சவாலை.

1.  முடிந்தவரை உங்களுக்கு பிடித்தவிஷயத்தை வருமானம் தருகின்ற தொழிலாக செய்கின்ற வழிகளை கண்டுபிடித்து செய்ய முயலுங்கள். "இல்லே இனிமே அப்படியெல்லாம் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது!!" என்பவர்கள், பிடித்த அந்த வேலையை தினமுமோ, வாரத்தில் சில தினங்களோ செய்ய முயலுங்கள். அது குறித்த தொடர்புகளை பெருக்கிக் கொள்ளுங்கள். இதனாலேயே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

2.  அலுவலகத்தில் வீடு பற்றிய சிந்தனையும், வீட்டில் அலுவலகம் பற்றிய சிந்தையும் எழாதவண்ணம் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

3.  உங்களால் முடியாத வேலையை பணத்துக்காகவோ, மற்ற பிற அபிலாஷைகளுக்காகவோ ஒருபோதும் செய்யாதீர்கள். உங்கள் அலுவலக வேளையிலும் ஆர்வம் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் இருக்கின்ற நல்ல விஷயங்களை பார்க்க, பட்டியலிட பழகிக்கொள்ளுங்கள்.

4.  யாராவது எதிர்மறைப் பேச்சுகளை பேச முயலும்போது சுவாரஸ்யத்திற்க்காக கூட அதை கேட்க எத்தணிக்காது புறக்கணியுங்கள்.

5.  மன்னிக்கவும், மறக்கவும் பழகுங்கள்.

6. இந்த வாழ்க்கை வரம், எளியது, குறுகிய காலமுடையது என்பது தினமும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    மேற்கூறியவை எவையும் யாருக்கும் தெரியாதவை அல்ல என்றபோதும் அடிக்கடி நினைவு படுத்துதலே நாம் மேம்பட உதவும் என்பதால் எனக்கும் சேர்த்தே சொல்லுகிறேன்.

Knowing is Good, Doing is Life. We Do for Happy Living. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்