இதற்குத்தானே இது எல்லாமும் :-
மாலையும் இரவும் மயங்கிப் பிணங்கும் பொழுது, அவனும் அவள்களும் மருத்துவமனையிலிருந்து அவர்களாகக் கிளம்பினார்கள் அம்மாவாகியிருக்கும் அவளது தமக்கையைப் பார்த்துவிட்டு. பிஞ்சு உயரின் பிசிரற்ற அழகினைப் பற்றி சிலாகித்து பேசியவாறே இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில் காற்றும் அவர்களோடு கதைகேட்டவாரே வந்து கொண்டிருந்தது. போரூர் முக்கிய சந்திப்புக்கு சற்று முன்பாக அவர்கள் வருகையில் அது அவனின் கண்களில் பட்டது, கற்பனையை விரித்தது. அவன், அவளிடம் அங்கே அது கிடப்பதாகச் சொல்லி வண்டியினை ஓரமாக நிறுத்தி எடுத்துவரப் பணித்தான். அவளும் அவனைப் போலவே கற்பனை எகிற ஓடிச்சென்று எடுத்து வருகையில் கூடவே பயணித்த காற்றுக்கும் பதட்டம் நிலவியது, என்னவாக இருக்கும் அதுவென.
கையில் அது இருக்க மறுபடியும் தொடங்கியது காற்று கூடவரும் பயணம். மின்விளக்குகளும், இதர வாகனங்களின் ஒலிகளும் என்னதான் கண்கள் கலைத்தாலும் அது மட்டுமே சிந்தை முழுதும் நிரம்ப ஆக்கிரமித்திருந்தது.
அப்படியென்னவாயிருக்குமது? என்ன இருக்கும் அதற்குள்? ஏக கற்பனை நிரம்பி வழிய, அவள் அவ்வளவு முயன்றும் திறக்கவில்லை அது. போகுமிடம் வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என அவன் சொல்ல, அவர்கள் அது பற்றியே பேசிக்கொள்ள ஆரம்பிக்க சிரிக்க ஆரம்பித்திருந்தது அது!. சேருமிடம் சேர்ந்ததும், பசி வயிற்றினைக் கிள்ள உணவகத்துக்குச் சென்று அமர்ந்தார்கள். அதுவும் அவர்களுடன் ஆரோக்கியமாக அமர்ந்தது. உணவு குடலை நிறைக்க உள்ளம் முழுவதும் அது நிறைத்திருந்தது. அவன் அதை சேருமிடம் சேர்பித்து விடலாமெனச் சொல்லுகையில் அவளும் அதை ஆமோதித்தாள். உடனே தகவல் தெரிவிப்போம் என்று முடிவு செய்து உண்டதும், வீடுவந்து தகவல் தெரிவிக்க அழைப்பினை செய்தார்கள். எதிர்முனையில் இசைந்த பெண்ணின் குரல் அவர்கள் தகவல் சொன்னதும் மகிழ்வில், இன்ப அதிர்ச்சியில் வார்த்தைகள் குழற நன்றிகள் சொன்னது. தகவல்களை உறுதி செய்துகொண்ட பின்பு நாளை மறுபடியும் மருத்துவமனை வருவதாகவும், வரும்பொழுது தருவாதாகவும் அவன் சொல்ல எதிர்முனை மகிழ்ந்து மறுபடியும் நன்றிகள் சொன்னது. அழைப்பை முடிந்ததும் அது ஒரு ஓரத்தில் அலமாரியில் பத்திரப்படுத்தப்பட்டது. சின்ன அவள் விளையாட்டுப் பொருளாகாதிருக்க வேண்டி.
மறுநாள் மதியவாக்கில் அதை தவறவிட்ட அவள் நன்றியையும் சிறு பரிசையும் தந்துவிட்டு அதை வாங்கிச் செல்லுகையில், சேர்ப்பிடம் சேர்ந்த மகிழ்ச்சியில் அதுவும், அவளும் கண்ணில் நீர்வழிய கைகூப்பிய நன்றி எனக்கு மட்டும் புரிந்தது. இதற்குத்தானே இது எல்லாமும்.
( போரூரில் SRMC மருத்துவமனையில் பிரசவித்திருந்த மனைவியின் தங்கையை பார்த்து திரும்பும் வழியில் ரூ.1450 மற்றும் இதர சில முக்கிய ஆவணங்களுடன் கிடைத்த ஒரு கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருப்தி நிகழ்வு இது. என்றோ சாலையில் கண்டெடுத்த ஒரு பெரும் நகைப்பையை ஆசையின்றி அதீத அக்கறையோடு உரிமையாளரிடம் சேர்ப்பித்த நாகர்கோவில் நண்பர் APEX டேவிட் அவர்களும், நண்பர் ரெஜினால்ட் அவரது Purse -ஐ தவறவிட்ட பொழுது பணத்தாசையின்றி பத்திரமாக எடுத்து தந்த நபரைப் பற்றி அவர் சொன்ன நிகழ்வும் எனது இந்த முதல்முறை செயலுக்கான உந்துதல்கள். நான் கூச்சத்துடன் உங்களிடம் பகிர்ந்து கொள்வது கூட உங்களில் யாரையாவது இந்த நிகழ்வு உந்தி யாருக்கேனும் என்போல் உதவச் செய்யும் என்ற பெரும் நம்பிக்கையன்றி வேறெதுவுமில்லை. தயவு செய்து பாராட்டுக்களை தவிர்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகள்.. உதவப் போகும் உங்கள் நல்மனதுக்கு)
Comments
Post a Comment