குடிநீரில் மூத்திரம் பெய்து குடிக்கிற அவன் :-




நேற்று சாலையோரத்தில்
யதேர்ச்சையாகத்தான் 
அவனைப் பார்த்தேன்

வருகிறாயா வீட்டிற்கு
என்று முடிப்பதற்கு முன்பே
வாகனமேறி அமர்ந்துவிட்டான்
மனிதம் கருதி
மடத்தனமாக ஏதும்
நடந்துகொள்ளவில்லை நான்

வந்ததும்
ஒரு குவளை தேநீரையும்
ஒரு பிடி பலகாரத்தையும்
தின்று ஏப்பம் விட்டுவிட்டு
காப்பீடு ஏதும் தேறுமா
என்று முயற்சித்தான்
சோப்பு, சீப்பு என எதையாவது
தலையில் கட்ட எத்தனித்தான் 

தேறாது என்ற முடிவில்
பழைய நண்பர்களையும்
பக்கத்து வீட்டுக்காரர்களையும்
பழி பழி என்று பழித்துவிட்டு
அலுவலக அன்பர்களையும்
காய்ச்சி காதுகளில் 
ஈயம் ஊற்றினான்

நான் எதை பேச எத்தனித்தாலும்
தனக்கும் அந்த அனுபவம்
தரமாகத்  தெரியுமெனவும்
தொடர்ந்து பேச அனுமதியாமல்
வயிற்று உப்புசம்
வந்ததுபோல்
வாந்தி வாந்தியாய் எடுத்து
எண்ணங்களை நாராடித்தான்

எனக்கு நிகழ்ந்த சில
நல்ல நிகழ்வுகளை சொல்லுகையில்
நன்றாக முகமிறுகினாலும் 
முயற்சி செய்து
மகிழ்வது போல் நடித்துப்பார்த்தான்

எவ்வளவு முயற்சித்தும்
முடியாமல்
இருபது நிமிடம்
முடிவாய் அறுத்து
கழிப்பிடம் சென்று
கழித்த நிம்மதியானவனைப்போல்
இடத்தை காலி செய்தான்
குடிநீரில் மூத்திரம் பெய்து தினம்
குடிக்கிற அவன்.

கழுவி விடவேண்டும் நான் - கொஞ்சம்
கழிப்பிடமான நினைவை!!.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்