குறைந்தபட்ச மனிதனும், அதிகபட்ச ஞானியும் :-
இரவு விளக்கின்
வெளிச்சத்தில்
நிழல் நிஜம்போல் நடக்க
நான் கிடக்கிறேன் கீழே
நிழலாக
சுவற்றுக் கெவிலியின்
மொழியும்
சுற்றும் நொடிமுள்ளின்
ஒலியும்
உரக்கக் கேட்கும்
உன்னத தருணங்கள் அவை
வீட்டு மனிதரெல்லாம்
படுக்கையிலே
பல்லிகள் போல்
துயில்ந்திருக்க
வீட்டுப் பல்லிகளெல்லாம்
மனிதர்கள் போல்
புழங்கும் இரவு அது
நாம் நினைப்பது
நமக்குள்ளே
எதிரொலிக்கும்
நமக்கொலிக்கும்
நிசப்த நிமிடங்கள் இவை
ஜன்னல்வழி
சந்திரனோடு நீங்கள்
சத்தமின்றி
பேச வேண்டுமாயின்
சகாயமான தருணம்
எப்போதும் இதுதான்
உலகம் அவிகையில்
விழித்திருப்பது
உள்ளுலகம்
விழிப்போடு இருப்பதற்கான
புறப்பாடு
மின்பொருட்களை
அணைத்துவிட்டு
மிகையான இரவோடு
மீண்டும் மீண்டும்
விழிப்போடு
தனித்திருப்பின் நீங்கள்
குறைந்தபட்சம் மனிதனாகவும்
அதிகபட்சம் ஞானியாகவும்
ஆனாலும் ஆகலாம்!!
Comments
Post a Comment