Posts

Showing posts from 2015

என்ன மர்மம்?!

Image
பயணிகள் நிறைந்த பேருந்துப் பயணத்தில்  தெளிந்த வட்டமாயிருந்த  அழகுப்பெண்ணின் முகம்! கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு  இருக்கையின்றி  நின்று கொண்டும்  தொங்கிக் கொண்டுமிருந்த சிலரின் பாவனைகள்!  நாளை உலகம் அழியும்முன்  நவீனமாய்த் தவழும்  கைப்பேசியை அறிந்துகொள்ளும் அறநோக்கோடு  அமர்ந்து வந்த சிலர்!  அத்தனை விசித்திர மனிதரையும்  அழகாய்த் தாங்கி பயணித்து  தவிக்கவிட்டு இறக்கி பயணப்பட்ட  குளிரூட்டப்பட்ட பேரூந்தென எல்லாம் நினைவுப் படுகையிலிருந்து எள்ளளவாய் மறந்து போனாலும் அசிங்கத்தை மிதித்துவிட்டு அவன் அள்ளிவந்த மணமட்டும் அம்மணமாய் இன்னும் அழியாது அலைவது என்ன மர்மம்?!

ஊழியாக்கப்பட்ட பெருமழை!

Image
கழிவறையில் அமர்ந்து  நாளிதழ் விரிக்கையில்  மழைக்காலத்திற்கு  ஊழிக்காலமென புதுப்பெயர் சூட்டி  வழிந்து கிடந்தன  கவிதைகளும் செய்திகளும்! கொஞ்சம் குளிர ஆரம்பித்திருந்த  பாலைவன நகரத்தில்  மழைபற்றிய செய்திகள்  வந்துக் குவியத் தொடங்கியபோது  குளிரையும் மீறி நனையத் தொடங்கியிருந்தது உடல்!  ஆழ்ந்த உறக்கம்  தொலைந்த பொழுதுகளில்  மேலிருந்து வீசும்  மின்விசிறிக்காற்றினை  மேக மழையாய்  நினைத்து பயந்து  முகப்புத்தகம்வழி  முகப்புச் செய்திகளை  தரிசித்து தனித்திருந்தது உடலுடைய மனம்!  மழைநீர் சாக்கடையோடு  கலந்த பொழுதுகளில்  பெற்றோரை தொலைத்த பிஞ்சின் புகைப்படம் விரிகையில்   வீடிழந்து  வெற்றுமனிதர்களாய்  சுற்றம் மொத்தம்  சுற்றும்முற்றும் அலைகையில்  முட்டிவரை நீரில்  முனங்குகின்ற வெகுசனம்  பார்க்கையில் வந்தாரை வாழவைக்கும்  வளமைப் பூமியில்  சோற்றுக்கு சண்டையிட்...
நரைத்தமுடி கத்தரிக்கையில் சிகை கோதியவாறு கடக்கின்ற சிறுமி சொல்கிறாள் இளமைக்கான இலக்கணம்! சோறு கொஞ்சம் பசுநெய் கொஞ்சம் உப்பு கொஞ்சம் பருப்பு கொஞ்சம் சுவைக்கு வேண்டும் அம்மா கை பிசைதல்!!! என்றோ சந்தித்த உன் நினைவின் நீட்சி ஓன்று போதும் இப்பிறவிப் பெருங்கடலை பேரன்புடன் நீந்திக்கடக்க! எங்கோ வீட்டின் மூலையில் தேய்ந்து ஓய்ந்து கிடக்கின்ற உன் பழையப் புகைப்படம் பார்த்தபின் கடக்கிற அந்த ஒருநொடி தான் என் ஒரு யுகவாழ்க்கை!  !

முப்பது நொடிகள்

Image
புழுதிப் பறக்கிற சாலையில் காற்றில் கலைகிற சிகைதிருத்தியவாறு வருகிற உனைப் பார்த்த அந்த நொடி! தோழியுடன் சிரித்து உரையாடிக் கொண்டிருந்த நீ தலையுயர்த்தி தன்மையாய்ப் பார்த்த குளிர் நாளின் அந்த நொடி! மழையும் புவியும் இணைந்து இசைக்கிற பின்னிரவில் நின் நினைவு போர்த்தி காதல் பிரசவித்த அந்த நொடி! எதிரில் நீ அமர்ந்திருக்க என்னமோ உயிர் சூடேறி உருகும் ஐஸ்கிரீம் தோற்க உருகி உதிர்ந்த அந்த நொடி! எப்போதோ நீண்ட எதார்த்த உரையாடலில் அவ்வப்போது சிறு மௌனம்சூடி நீ "ம்ம்ம்" சொல்லிய அர்த்தம்பொதிந்த அந்த நொடிகளென முப்பதுநொடிகள்தான் தேறும் இதுவரை வாழ்ந்த மொத்த வாழ்வில்.

பெய்யெனப் பெய்யும் மழை

Image
காரோடும் வீதிகளில் கணமற்ற படகுகளும் பயணித்தல் காணக்கிடைக்காத கண்கொள்ளாக் காட்சிதான்! தொட்டிவைத்து மீன் வளர்த்த வீடே மீன்களுக்கு தொட்டியானது கூட ரசிக்க கூடியதுதான்! வறண்ட ஆற்றில் நிறைந்து ஓடும் வெள்ளம் வரலாற்று அவசியந்தான்! மின்சாரம் பொய்த்த இரவில் சம்சாரம் புலம்ப அகல் விளக்கின் ஒளியில் அண்ணம் உண்ணுதல் கூட அழகுதான்! குடிநீரையும் கழிவு நீரையும் கலந்து குடிப்பது மலங்கழிக்க இடமின்றி மழங்க விழிப்பது நேற்று நிலத்தில் கட்டிய வீட்டுக்கு நீந்திச் செல்வது கனவு இல்லம் கரையப் பார்ப்பது ஆயுசு உழைப்பில் சேர்த்த செல்வம் அழியக் காண்பது பொதுநலமற்று சுயநலத்தோடு அடிமனதையும் அரசுகளையும் தொடர்ந்து வைத்திருக்கும் இயற்கையை அழிக்கிற நம் பொருட்டுதானெனில் பெய்யெனப் பெய்யும் மழையும் பேரழிவும் அழகுதான் அவசியந்தான் - நம் . அறிவுக்கு எட்டுமட்டும்! 

நர்மதா குட்டிகள்

Image
காலைக் கடமைகளுக்கு பிறகு  புதிதாய் வாங்கிய  நீள் செவ்வக வடிவ  உயர் தொலைக்காட்சியில்  கார்ட்டூன் பார்க்கத் தொடங்குகிறாள்  அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்ற வீட்டில்  தாத்தா,பாட்டியோடிருக்கும்  நான்கு வயதான நர்மதா குட்டி கண்களுக்கு நல்லதில்லையென  பாட்டி தொலைக்காட்சியினை அணைக்கையில்  கொஞ்சம் முகம் வாடித் தொடங்குகிறாள்  ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியோடு  தனது உரையாடலை கதவுகள் பூட்டியே கிடக்கும்  அண்டை அயலாரின் நகரத்தில்  கார்ட்டூன் கதைமாந்தர்கள்தான்  நண்பர்களாதலால் அவர்களோடு அவளுக்கிருக்கிறது  ஒரு அதிசய உலகம் அலுப்போடு பாட்டியின்  அவசர உணவூட்டலிலோ  அங்கலாய்க்கும் தாத்தாவின்  அயர்வு விளையாட்டிலோ  ஒருபோதும் நிறைவதில்லை  நர்மதா குட்டிக்கு  வயிறும்,மனமும்  உயர்ரக ஆடைகளும்  உணவுப் பண்டங்களும்  நிரம்பக் கிடைக்கும் உலகில்  அம்மையும் அப்பனும்  அருகிலிருப்பது ஏன்  இத்தனை அரிதாயிருக்கிறது ...

நிழல்

Image
இரவில் கனவில் கடந்த நிழல்  பகலிலும் கூடவே வெயிலில்லை, வெளிச்சம் கூட  அதிகமில்லை  இருந்தும்  கூடவே நிழல்  என்னோடிருப்பதாய்  நான் நம்பும் என்னுடல் நிழலில்லை எனதருகில்  அவ்வப்போது வருகிற  யாருடைய நிழலுமில்லை  மனதின் ஆழத்தில்  மறைத்து வைத்து சுகித்துக் கொண்டிருக்கிற நிழலாய்த் தெரிகிற  நிஜமோ இது!    

ஒரு கதை

Image
ஒரு கதை சொல்லப்படுகிறது அது காதல் கதையாய் இருக்கிறது இரு கதை மாந்தர்கள் காதலர்களாய் வருவது மாதிரி சொல்லப்படுகிறது அக்கதை எங்கெங்கோ இருக்கும் இரு உள்ளங்கள் உருகுமாறு படிக்கப்படுகிறது அக்கதை காவியமாகியிருக்கிறது அக்கதை!

தீபாவளி

Image
பட்டாசுகளின் சத்தங்களை பார்த்து தெரிந்துகொள்ளும் முதல் தீபாவளி இது! முகநூல்தான் முதலில் சொன்னது இந்த தீபாவளி தினத்தை - ஏன் வாழ்த்துக்களையும் கூட! முகம் மட்டும் தெரிந்த அகம் அவ்வளவாய் தெரியாத அத்துணை பேரும் வாழ்த்த ஆன்லைனில் கழிகிறது அந்நியபூமியில் தீபாவளி! ஆருயிர் நண்பர்களும் அளவளாவும் உறவுகளும் புத்தாடை தழுவும் பூரிப்பு உணர்வும் தொட்டுப் பட்டாசுகள் வெடித்து தொல்லை செய்த பொழுதுகளுமாய் கடக்கும் பால்ய தீபாவளி! பருவத் தீபாவளி! இன்னும் கழிந்து கொண்டுதான் இருக்கிறது கனவில் ஒவ்வொருவருடமும் உலகில் எங்கிருப்பினும்!

மாமி

Image
     அலுவலகம் முடித்து சரியாக 5 மணி அந்த அரசுப் பேருந்தில் வருகிற வாடிக்கை சுந்தருக்கு. அந்த 1B நம்பர் பேரூந்து கொஞ்சம் விசேஷம். சுந்தருக்கு மட்டுமல்ல இசையை, விரும்புகிற எல்லோருக்கும். அந்த பேரூந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனருக்கு இசையின் மீது பேராசை, பிரயாசை இருக்கவேண்டும். எப்போதும் தொடர்ச்சியாக திரையிசை பாடல்களையோ, சில இசைக்கருவிகள் மட்டும் ஒலிக்கும் இசையையோ எப்போதும் ஒலிக்கவிட்டு பயணிகளை கட்டி வைத்திருப்பர். அன்றைய அந்த ஒருமணி நேர பயணம் அவனது வாழ்க்கையில் மற்றுமொரு மிக முக்கிய நிகழ்வாகப் பதியப்போகிறது தெரியாமல் அன்றும் வழக்கம்போல் இசைப்பேரூந்துக்காக விரைந்து கொண்டிருந்தான்.      சுந்தர் ஒரு பட்டதாரி வாலிபன். சராசரி உயரம், நல்ல நிறம், பெண்களை தலைதிருப்பிப் பார்க்க வைக்கிற, ஆண்களை கொஞ்சம் பொறாமைப்பட வைக்கிற அழகன். கிராமத்தில் பின்னணியிலிருந்து சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்த புது ஆத்மா. இரண்டாம் தரமாக ஒரு மோட்டர் சைக்கிளை வாங்கியிருந்தான். ஆனாலும் இந்த இசைப்பேரூந்துக்காக அதை அவன் அலுவலகப் பயணத்துக்கு ...

அரை ட்ரவுசர் போட்ட அப்பத்தா!!!

Image
     புராண, இதிகாசங்களின் படி சொல்லவேண்டுமானால் கலியுகத்தில் இருக்கிறோம். கொஞ்சம் நவீனமாக சொல்ல வேண்டுமென்றால் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம். செல்போன், ஐ பேட், லேப்டாப், என ஏதோவொன்று குடும்ப உறுப்பினர்கள் போல, நண்பர்கள் போல் இல்லையில்லை நகமும் சதையும் போல நம்மோடே ஒட்டிக்கொண்டு இருக்கிறது எங்கும் எப்போதும். உங்களது, எனது என எல்லாரது நடவடிக்கைகளும் தினசரியாக எங்கோ பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இந்த டிஜிட்டல் யுகத்தில். நமது அந்தரங்கத்தை யார்வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எட்டிப்பார்க்க வழிவகை செய்திருக்கிறது இந்த நவீன மின்சாதனங்களின் புரட்சி.      மிகுந்த அறிவாளிகளுக்கு எல்லா நிறுவனங்களிலும் பிழைப்பு இருக்கிறது. கொஞ்சம் சுமாரான அறிவாளிகளுக்கு இது கஷ்ட காலம்தான். கடந்த காலத்தில் எல்லா நிலை மனிதர்களுக்கும் ஏதாவது ஒரு பிழைப்பு, வாழ்வியல் ஆதாரம் ஓன்று இருந்தது. எங்கள் ஊரிலிருந்த இறந்தவர் உடல்களை எரிக்கும் சகோதரர் இறந்தபிறகு அந்த வேலையை செய்கின்ற ஆள் இல்லையென சொன்னார்கள். இப்படி நிறைய சிறுதொழில் செய்தவர்கள் சுவடின்...

மேற்ப்படி!! மேற்ப்படி!!

Image
தொடர்ச்சியாக செல்போனில் உரையாடிவிட்டு, இன்று அவளை நேரில் சந்திக்க போவது கிளர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது குமாருக்கு. "இன்னைக்கு போயா இப்படி மழை அடிச்சி ஊத்தணும்" கொட்டித் தீர்க்கும் மழையை நொந்து கொண்டான் குமார். மழையில நனஞ்சிகிட்டே அவள முதல்ல பாக்குறது கௌதம் மேனன் பட ரொமாண்டிக் சீன் மாதிரி இருக்கப்போவதாக கற்பனையில் சிறகடித்துக் கொண்டே, அவள் வருவதாக சொன்ன ஐஸ்க்ரீம் பார்லருக்கு வண்டியினை விரட்டிக் கொண்டிருந்தான். குமார் 29 வயதான இளைஞன், வேலைமாற்றலாகி திருச்சி வந்திருந்தான். நகரத்தின் நடுவில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். ஆறுமாத திருச்சி வாசம். அறையில் வயதில் மூத்த இரு நண்பர்களும் நகரத்தை பற்றியும், இன்னபிற பேச்சுலர் சமாச்சாரங்களைப் பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தார்கள் ஆறுமதமானபோதும். போதும் என்று சொன்னாலும் விட மாட்டார்கள் என்பது விளங்கியதால் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வரலாம் என்று அருகிலிருந்த மெஸ்ஸுக்கு போகையில்தான் அவளை முதன் முதலாகப் பார்த்தான். அது ஒரு மார்கழி மாதம். தமிழ் சினிமாவில் வரும் ஹீரோயின் இன்ட்ரோ காட்சி மாதிரி. ஒரு வளைய...

பரமன் சித்தப்பா

Image
கையில் பகவத்கீதையை தாங்கிக்கொண்டு பரமன் சித்தப்பா பஸ்ஸிலிருந்து இறங்கும் போது மணி மத்தியானம் மூணு இருக்கும். மொதெல்ல பரமன் சித்தப்பா யாருன்னு தெரிஞ்சுக்குவோம். எங்க அப்பாவோட சித்தி பொண்ணோட வீட்டுக்காரர்தான் பரமன் சித்தப்பா. எனக்கு உண்மையில மாமா முறை. சின்ன வயசிலே இருந்தே சித்தப்பான்னே கூப்பிட்டு பழகிட்டதுனாலே இப்பவும் அப்படித்தான் வருது.  பரமசிவங்கிறது அவரது உண்மையான பேரு. தென்னக ரயில்வேல பாய்ண்ட்ஸ் மேனா வேலை பாக்குறாரு. மூணு சிப்ட் வேலை அது. மாத்தி மாத்தி வரும். எப்போ போவாரு, எப்போ வருவாருன்னு எங்க சித்திக்கு மட்டுந்தான் தெரியும். எங்களுக்கு இந்த ஷிப்ட் வேலை கான்செப்ட் புரியவே ரெம்ப நாள் ஆச்சு. பரம சித்தப்பா நல்ல வாசகர், அதுக்கப்புறம் நல்ல "குடிமகன்". அவர எப்போதும் ஒரு கையில பாட்டிலும் இன்னொரு கையில புக்குமா பாக்கலாம். தூங்குற நேரம், குளிக்க போற நேரம், குடிக்குற நேரந்தவிர எப்போதும் எதையாவது வாசிச்சுக்கிட்டே இருப்பார். அவரு படிக்கிற புக் எல்லாம் தடித்தடியா இருக்கும். நாங்கெல்லாம் நல்ல படிக்கிற இந்த மனுஷன், நல்ல குடிக்கவும் செய்யுறாரேன்னு நினைப்போம், பேசிக்குவோம். ...

கணவனாதலால்!!

Image
அடுத்த தினம்  ஆரம்பித்த பொழுதிலும்  விழித்திருந்தேன் உபயம் ஒரு  உலகத் திரைப்படம்!  நீட்டி முழக்கி - உறக்கத்தை  நெருங்கிய பொழுதில்  அணைக்க மறந்த  அலைபேசி ஒலிகேட்டு  ஆராய்ந்தது கை!  அனுப்பிய சான்றிதல்கள்  குழப்பம் விளைவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  அட்டையின் நிலைமை குறித்த  அர்த்த ராத்திரியில் வரும்  அவசர மின்னஞ்சல் அது!    தீர்க்கமற்று எல்லாவற்றிலும்  தெளிவில்லாதவளாய்  இருப்பது கண்டு  தெறித்த கோபம்  அடுக்கடுக்காய் காரணங்களை  அடுக்கிக் குவித்தது அதனால் இரத்தம் கொதித்தது     உறக்கம் மறந்து  உயர்ரத்தம் அழுத்தப் பாய்ந்ததில்  விளைந்ததென்னவோ  கைகலப்பின்றி - வெறும்   கவிதை களோபரம்தான்! கணவனாதலால்!!

வட்டத்தை சுருக்குதல்

Image
நொடிகளாய் சிதறி நிமிடங்களாய்க் கரையும் ஏதோவொரு மணித்துளியில் பிறக்கிறது நின் சிந்தனை! அறிமுகமும் அன்றாடங்களும் பேசிக்கழிந்து போன பகுதி கடந்த காலமாகையில் நிகழ்காலத்தில் மீதமிருக்கிறாய் நீ மட்டும்! காலங்களை பிணைக்க கடுமையாய் எத்தனிக்கையில் குழப்புவதாய்க் குறுக்கிடுகிறது வரையறுத்த விதிகள் உனக்குமட்டும் நின் சிறு வட்டத்தில்! இருவருக்கும் வட்டமுண்டு! நீ உள்ளேயும் நான் எப்பொழுதும் வெளியேயுமாயிருக்கும் வட்டம் இருவருக்குமுண்டு வட்டத்தை சிறிதாக்குவதில்தான் நீ மகிழ்வாயெனில் நினக்காக வாழ்வையே சுருக்குமெனக்கு வட்டத்தை சுருக்குதல் என்றும் பெரிதல்லவே!

நேசம் தொலைத்த மனிதர்கள்

Image
நிழல் பின்தொடர  நடந்து வந்து  அறை நுழைகையில் ஜன்னலில் காத்திருக்கிறது  ஒரு அக்கா குருவி  இந்த அரபு தேசத்திலும்  ஆச்சர்யமாய்!   மஞ்சள் தங்கமாய்  மணல் தகிக்கும்  தேசத்தில்  சிறுவயதில் மீன்பிடித்துப் போட்டது போலொரு பூனையினை பார்க்கையில்  கானல் நீராய்  புலப்பட்டு மறைகிறது  புரிதல் ஏதோ! கழிப்பறை சன்னல்களை  காற்றுபோக திறக்கையில்  எங்கிருந்தோ  பறந்து நுழையும் ஈசலுக்கும் தெரிந்திருக்கிறது  எனக்கு தெரியாத  ஏதோவொன்று! இரவில் நுழைந்து இருளில் கடித்த எறும்புதான்  இடித்துச் சொல்லிற்று  தேச வித்தியாசமெல்லாம்  நேசம் தொலைத்த மனிதர்கள்  உங்களுக்குத்தானென்று!       

வதந்தி

Image
இரண்டு குழந்தைகளுள்ள புகைப்படத்தினை முகப்புப் படமாக பதிந்திருந்தேன் இணையத்தின் குழுமமொன்றில் ஹே! யாரிந்த இரெண்டாவது குழந்தை? ஒளிர்ந்தது செய்தி நண்பனின் மனையாளிடமிருந்து எங்கள் குழந்தைகள்தான் அள்ளிவிட்டேன் அமட்டுச் சிரிப்போடு சற்றுநேரத்தில் நண்பனிடமிருந்து மாமா! சொல்லவேயில்லையே! என்று ஒளிர்ந்த செய்திக்கு கண்ணடிக்கும் மஞ்சள் பொம்மையை அனுப்பிவிட்டு கடமைகளில் மூழ்கிப்போனேன் பதிந்த குழந்தையைவிட பலமடங்கு வளர்ந்திருக்கும் இந்நேரம் இணைப்பில் எனக்குப்பிறக்காத இரெண்டாவது எழில் குழந்தை!

காரணம் பொருட்டே!

Image
மிகக்குளிர்ந்த அறையினை  விட்டு வெளியேறுதல்  வெப்பு மிகுந்த  வெளியின் உள்ளேருதல் காரணம் பொருட்டே  ஆடை நனைய  அங்கம் பிசிபிசுக்க  கண்ணுக்கு மறைந்தாலும்  காற்றில் வசிக்கும்  வெப்பு மிகுந்த  வெளியின் உள்ளேருதல் காரணம் பொருட்டே கொஞ்சம் நடந்து  கடைக்கோ, உணவகத்துக்கோ  காரணம் கண்டறிந்து  கடையேறுதல்  பசியாறுதல் எல்லாமும்  காரணம் பொருட்டே சினிமாக்களில் லயித்து  சிற்றின்பங்களில் சுகித்து  சிலகணங்கள் தொலைத்தாலும் அடிக்கடி  அந்தி சாய்கையில் வெளியில்  வேண்டாது உள்ளேருதல்  வேடிக்கையான  காரணம் பொருட்டே  தனித்திருத்தலும்  தனித்திருத்தல் தவிர்த்திருத்தலும் தரணியெங்கும் சுற்றியலைதலும்  தவிர்க்க முடியா   வெப்பு மிகுந்த  வெளியின் உள்ளேருதல் போல்  வேண்டா  பெருங்காரணம் பொருட்டே!

நீயின்மையின் சாட்சியாய்

Image
தூசிபடிந்த அறையினுள் நான் வழக்கமாய் நடக்கும் பாதை வெயில் படுகையில் புலனாகிறது அருந்திவிடுவதாய் வாங்கிவைத்து அழுகிக்கொண்டிருக்கின்றன வண்ணவண்ண வனப்புத் திரவக்குடுவைகள் குளிரூட்டியில் பகலில் கொறித்துவிட்டு மறந்துபோன இனிப்பினை சூழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தன இரவில் எறும்புகள் அழுங்கல் குழுங்களில்லாது வைத்தது வைத்தபடி அசிங்கமாய்க் கிடக்கிறது அலமாரியின் அங்கங்கள் நீயின்மையின் சாட்சியாய் நீளும் வீட்டில் உனக்காக வாங்கின சிறு உணவருந்தும் தட்டினை திரும்பத்திரும்ப துடைத்து விட்டு நாட்கள் தேய்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இளையராஜாவும் திருவாசக சிம்பொனியும்

Image
இளையராஜா சிம்பொனி இசையில், திருவாசகத்தின்  ஐந்து பாடல்களுக்கு இசையமைத்து 2005 ஆண்டிலேயே வெளிவந்திருந்தாலும், அதனை கேட்கும் பேறு சமீபத்திலேயே வாய்த்தது. அதிலொரு பாடல் கீழ்க்கண்ட "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்ற அச்சப்பத்து தொகுதியில் வருகின்ற திருவாசக பாடல்களின் தொகுப்பு. ஒரு 20 முறை இந்த இரவில்  கேட்டிருப்பேன். அப்படியே மாணிக்கவாசகரின், திருவாசகத்தின் காலத்திற்கு கூட்டிச் செல்கிற இசை அது. மேல்நாட்டு சிம்பொனி இசையை திருவாசகத்திற்கு பொருத்தி இசையாட்சி செய்திருக்கிறார் இளையராஜா. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒருமுறை இரவின் அமைதியில் கேட்டுப்பாருங்கள். நிச்சயம் நீங்கள் மாணிக்கவாசகரோடு கைகோர்த்து அவர் காலத்திற்கு சென்று வருவீர்கள்.அதற்கு நானல்ல இளையராஜா உத்திரவாதம். இளையராஜா அவர்கள் வருங்காலங்களில் திரையிசை பாடல்களுக்கு இசையமைப்பதை விட்டுவிட்டு சங்க இலக்கிய பாடல்களுக்கு இசையமைத்து வாழ்வியல் பேறு அடைந்து எல்லோருக்கும் வழங்கலாம். அந்த பாடல் இதோ... புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல்,...

வெயில்

Image
என் நிழலை என்னோடே கூட்டிவரும் அதனை  நான் கூட்டிவருவதாய் நினைக்கையில் சுடுகிறது வெயில் கொதிக்கின்ற வெப்பின் கூரான மூலையிலெங்கோ கொஞ்சம் சுகம் கொட்டித்தான் கிடக்கிறது தொட்டுத் தழுவும் தென்றலின் தேவசுகம் முழுதும் தெரிய தேவை கொஞ்சம் வெப்பும் தேம்பும் வியர்வை உப்பும் கருத்ததேகம் கவனித்துப் பார்ப்பவர்க்கு தெரியும் எனக்கும் வெயிலுக்குமான ஏகாந்த உறவு உதிக்கின்ற வியர்வைத்துளி உடல்நனைத்து முடிவில் உள்ளம் நனைக்கையில் விண் பார்க்கிற கண்ணில் தெக்கிநிற்கும்  மழைத்துளி ஏக்கம் கவிதை வீதிவரை வந்து தொட்டு விட்டு வீடு நுழைகையில் விட்டுவிடும் வெயில் தீண்டாமைச் சிந்தனையை கொஞ்சம் தீண்டத்தான்  செய்கிறது.

கலவி நுணுக்கம்

Image
நாட்டுக்குள் நுழைந்த  மதம்பிடித்த யானையாய்  நிகழ்கிறது கூடல்  இடித்தும், தகர்த்தும்  ஏத்தியும் சுத்தியும்  முடிக்கையில்  ஒழுங்கற்று கிடக்கும்  நாடாக உடல்கள் பிளிறின் கையில்   பிணையாய் சிக்காது  பேரமைதி தாங்கி  பறக்கும் பறவைபோல்  மனங்கள் மட்டும்!

நான்காம் ஆண்டில் வேலுவின் கவிதைகள்

Image
இன்றோடு மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு துவங்குகிறது வேலுவின் கவிதைகளுக்கு. முதலில் வழக்கம் போல் நண்பர் குருநாத் பனிக் கிரஹி அவர்களுக்கு நன்றிகள். அவரின் தொடர்ந்த ஊக்கமே நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கிறுக்கல்களை மறுபடித்தொடரக் காரணம். பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது மாதிரி அவருக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பதுதான் சரி. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆரம்ப பதிவுகளை எழுதும் போது என்ன எழுதிஇருக்கிறோம் கடந்த 365 தினங்களாக என முழுமையாகத் திரும்பிப் பார்க்கிறேன். சென்ற 2014 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பதிவினை எழுதுகிற வரை 174 கவிதைகளை எழுதியுள்ளேன். கடந்த சில நாட்களாகவே இந்த திரும்பிப் பார்த்தல் நடந்து கொண்டு இருந்தது. அவ்வப்போது நானே என்னுடைய கவிதைகளை வாசித்துக் கொண்டேன். குறை நிறைகளை அலசிக்கொண்டேன். ஒரு தெளிவு கிடைத்தது நமது திறமை பற்றி!. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஒரு பத்து கவிதைகள் தேறும். மற்றவற்றை நிரம்ப பட்டி பார்க்க வேண்டும். புத்தகம் ஏதாவது வெளியிடும் போது அதைச் செய்துகொள்ளலாம் என்று விட்டு வைத்துள்ளேன். மிகச் சிறந்த கவிதையாக எனக்குப் பட...

கனவு வரின்!

Image
உன்னால் மட்டும் கனவு வரின் நான் ஒருதலைக் காதலன்! உன்னோடு கனவு வரின் நான் காதலன்! உன்னோடு ஓரிருவர் கனவில் வரின் நான் கணவன்! உனை தவிர்த்து கனவு வரின் நான் முதியவன்! கனவே வராது போயின் நான் கண்டிப்பாய் காலமானவன்! 

வண்ணத்துப் பூச்சி நீயோ!!

Image
வண்ணத்துப்பூச்சி முதுகில்ஏற்றி  பறக்கிற சுகவாய்ப்பு நினைவில் தோய்ந்து கிடக்கும் காதல் தருணங்கள்  விரிகிறது காதல்பிடித்து  நடந்த கடந்த காலம்  கருவிழி உள்ளிருக்கும்  ஆடிக்கு மங்கலாய்  காதலாய் நீ புலனான  தருணம் கடக்கிற வண்ணத்துப்பூச்சி ஒருவேளை நீயோ?! கிழிக்கிற கதிரொளி கழிக்கிற காற்றொலி   கலைக்கிற - வான்வெளியில்  கடக்கிற யாவும்  நின் கண்ணசைவே  காதல் பிசைவே மலர்வனம் வர  மனம் அது உளற  மணக்கிற வாசம்  சுகிக்கிற நேசம் வழுக்கி விழுகையில்  தாங்கும் இன்னொரு  வண்ணத்துப் பூச்சியும் நீயோ!!

கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.

Image
உடல்கள் உறங்கி பெரும்பாலும் மனங்கள் விழித்திருக்கும்  நகரத்தின் வீதிகளில்   நகருகின்ற  யாருமற்ற பேரூந்தில்  நகராது அமர்ந்திருக்கிற  நானென நினைக்கிற உயிரும்  நகர்ந்து உள்ளே உயிர்த்திருக்கிற  நீயெனப்படுகிற நினைவும்  பேசிக்கொள்வதாய்   நிகழ்கிற ஒருகாட்சியில்  நீயும் நானும் செய்கிற காதலை  நீயும் நானுமே  நிசப்தமாய் நின்று  நிதானமாய் நீண்டநேரம் ரசித்து  நிறுத்தத்தில்  இறங்கி செல்கிறேன்  நான்...  என்னோடு நீயும்... இன்னொரு நீயும்  இன்னொரு நானும்  இறங்க மறந்து   இன்னமும்  காதல் செய்துகொண்டே   கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.

விடியல் வருமட்டும்

Image
சுழலும் விசிறியின்  இறக்கைகளில் படிந்திருக்கிறது  கடந்தகாலத்தின் கசப்புகள் கண்கசக்கும் தூசுகளாய்   ஒவ்வொருமுறை  சுழற்றும்போதும்  உதிர்க்கின்றன  நியாபகத்தின் எச்சங்களை  இருண்ட அறையின்   எங்கோ மூலையில்  ஒளிந்திருக்கக்கூடும்  நினைவின் அடுக்குகள்  கண்ணிறுக்கம்  கொள்ளும்போது  கட்டவிழ்த்து விழுகின்றன  தாங்கமுடியா கணங்களோடு  மரணமொட்டிய நிகழ்வுகள்  பயப்படும் கனவுகளாகையில்  இரவு காத்திருக்கிறது  விடியல் வருமட்டும்.!

எது கலாம் என்ற மாமனிதனுக்கு செய்யும் உண்மை அஞ்சலி??.

Image
     நேற்று ஊடகம் முழுவதும் ஓரே செய்திதான். முகநூல் நிரம்பி வழிந்தது கலாம் அவர்களைப் பற்றிய செய்திகளால். துயரத்திலும், கொஞ்சம் நிறைவாகவும் இருந்தது எல்லோரும் அவர் இழப்பை உணர்ந்திருப்பதையெண்ணி.      ஒரு கூட்டம் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. இன்னொரு கூட்டம் அலுவலகத்துக்கு விடுப்பு அறிவிக்கவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்தது. இன்று ஒரு தோழி கவிதையெல்லாம் முடிஞ்சுதா? என்று கேட்டிருந்தார்.போகட்டும், வேடிக்கை மனிதர்கள்.      கலாம் குறித்த நிகழ்வுகள் தவிர்த்து யாகூப் மேமனை என்ன செய்யலாம் என்ற விவாதமும், எம். பி க்களுக்கான சப்சிடி குறித்த விவாதமும் ஓடிக்கொண்டிருந்தன. இன்னொரு தொலைக்காட்சி கலாம் அவர்களுடைய நேர்காணலில் தலைமைப்பண்புகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை திரும்பத் திரும்ப யாருக்கே உரைக்க வேண்டி தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளில் பல கோடீஸ்வரர்கள் கல்வி மற்றும் சிறந்த வாழ்வியல் சூழலுக்காக இந்தியாவைத் துறந்து இரண்டாம் நிலை குடிமக்கள்களாக வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக...