Posts

Showing posts from November, 2014

தலைப்பின்றி!

Image
உச்சி வெயிலினை  ஓரங்கட்டி  மேலாடைத் தாண்டி  தழுவுது குளிர்  மொட்டைமாடியில்  படர்ந்திருக்கும் ஈரம்  மழை வந்து  தரை நனைத்து  தடம் விட்டுச் சென்றதை  சொல்கையில்   தூரத்தில்  காக்கையோ, புறாவோ  எனத் தெரியாத  பனிப்புகையில் இரைதேடும்  பிரஞ்கையற்று    இருபறவைகள் கூடிக்கிடந்தன   தலைவிழுந்த  மழை சிலுப்பி  மண்சாலைக் கடந்த அவள்  என்றோ என்சாலைக் கடந்த  என்னவளாகத் தெரிகையில்  இடி இடித்தது எனக்கோ, மழைக்கோ   என்றவாறு.  

காவியத்தலைவன் ( 2014 ) - எனது பார்வை :-

Image
         எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் வசந்தபாலனும் பழைய தமிழ் நாடகப் பள்ளிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது ஜெயமோகன் பரிந்துரைத்த "எனது நாடக வாழ்க்கை" என்ற மறைந்த அவ்வை சண்முகம் அவர்களின் சுயசரிதத்தைப் வசந்தபாலன் படித்து அந்த நூலின் உதவியோடு இருவரும் இணைந்து எழுதிய கதை இந்த காவியத்தலைவன் படக்கதை. சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற பழைய இசை நாடகங்களை முன்மாதிரியாகவும் கொண்டு இயக்குனர் இந்த கதைக்களத்தினை அமைத்துள்ளார்.      கதைக்களம், 20ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து தொடங்கி சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் நிறைவுறுகிறது. தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் ( நாசர் ) ஸ்ரீ பால சண்முகானாந்தா என்ற நாடகக் குழுவினை நடத்திவருகிறார். இளவயதில் நாடகக் குழுவில் சேர்த்து விடப்படும் கோமதிநாயகம் ( பிரிதிவிராஜ்), பிறகு அவர் கண்டு சேர்க்கும் ஆதரவற்றச் சிறுவன் காளி (சித்தார்த்), இருவரும் முன்னணி வேஷங்கள் கட்ட நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்தக் குழுவில் தாயுடன் வந்து சேரும் வடிவு (வேதிகா),  இளவரசி (அனய்கா), கொடுவாய் (தம...

மரணத்தின் வலி எத்தகையது?

Image
             ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப்ஸ் பந்து தாக்கி விபத்தில் உயரிழந்தமை குறித்து செய்திகள் தொடர்ந்து  வந்த வண்ணமிருக்கின்றன. எகிறி எனப்படும் பவுன்சர் பந்துவீச்சில் படுகாயமுற்று, கோமா நிலைக்கு சென்று மரணித்திருக்கிறார் இருபத்து ஐந்து வயதேயான பிலிப்ஸ். கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.    மரணம் குறித்த எனது நினைவுகளை கிளருகிறது இந்த இளம்வீரரின் மரணம். இருபத்து ஐந்து வயதில் மரணம். ஏற்றுக்கொள்ள முடிகின்ற ஒன்றா இது. ஜீரணிக்க இயலுமா இதை. எதிர்பார்த்திருப்பார்களா அவரது குடும்பத்தினர் இதை. அவ்வளவு எளிதில் கடக்கின்ற நிகழ்வா இது. மரணிக்கின்ற நிகழ்வை விட, அதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு பயணிக்கிற நெருங்கிய உறவுகளின் மனநிலை கொடுமையானது. எத்தகைய எதிரிக்கும் நிகழக்கூடாத அந்த நிகழ்வு, சோகம் பிலிப்ஸ் குடும்பத்தாருக்கு நிகழ்ந்திருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவர் உறவுகளுக்கு தேவையான மன தைரியத்தை அவர்களது இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும்.      எனக்கு விவரம் தெர...

அந்த ஒற்றைமுடி :-

Image
கண்ணில் விழுந்த அந்த ஒற்றைசிறு முடிதனை வெகு நேரமாய் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எங்கிருந்து வந்து என் கண்ணில் விழுந்திருக்கும் அது காபாலத்தின் மீதிருந்தா கண்ணின் மேலிமையிலிருந்தா உடலெங்கும் முளைத்திருக்கும் பூனைமுடிகளில் ஏதோவொன்றாயிருக்குமா அக்குளின் வியர்வையால் அலங்கரிக்கப்பட்ட முடியாயிருக்குமா இல்லை அந்தரங்கப் பகுதியிலிருந்து அரிப்பின்வினை உதிர்ந்து அயர்ந்த விழி வந்தடைந்திருக்குமா எங்கிருந்து வந்து என் கண்ணில் விழுந்திருக்கும் அது இல்லை அது எனது முடியே இல்லையா மகளின், மனைவியின் தாயின், தந்தையின் தமையனின் முடியாயிருக்குமா இல்லை என் ரத்தம் சாராத எவரோ ஒருவரின் எந்தபாக முடியாகவும் இருக்குமோ எதற்கு எனக்குள் இத்தனை சிந்தனை விழுந்த முடியை விசையுடன் ஊதித்தள்ளி விட்டு வேறுவேலை பார்ப்பதற்கு பதில்.   

கடைசிவரை.!!

Image
அருந்தி வைத்த தேநீர் கோப்பை உண்டு வைத்த சில்வர் தட்டு போலத்தான் உன் நினைவும் காய்ந்துகொண்டு கடக்க மறுக்கிறது பலமுறை அழைத்த அழைப்பை சிலமுறை பார்த்த பொழுதும் எப்போதாவது பேசுகின்ற நீ எதைப்பற்றியும் பேசுவதில்லை வந்தக் கடுப்பை வார்த்தைகளாய் கோர்க்க விழைகையில் யார் யாரோ அர்த்தமின்றி அழைத்து அழிக்கிறார்கள் சிந்தனையை உன்னை பேசவைப்பதுவும் தொலைந்த வரிகளை மீட்டெடுப்பதுவுமாகிய செயல்களை செய்கின்ற நான் காதலனாகவும் போவதில்லை கவிஞனாகவும் போவதில்லை கடைசிவரை.!!

செப்புச் சமையல்

Image
நெகிழிக் குடுவையில் காரட் பொறியல் வைக்கத் தெரியுமா உங்களுக்கு? தட்டில் சோறும் சிறு டம்ளரில் குழம்பும் வைக்கத் தெரியுமா? ஐந்தாறு நொடிகளில் தேநீரும், குளம்பியும் ஆத்தித் தரத் தெரியாது ஆளுயர உங்களுக்கு எதிர்பாராது எப்போதாவது ருசியாக சமைத்து வயிறு நிரம்பச் செய்யும் வக்கனை சமையல்தான் ஆகப் பெரிதாகத் தெரியும் உங்களுக்கு நாவில் சுவைக்காது வயிறு நிரம்பாது செப்புச் சாமான்களில் மனம் நிறைய சமைத்து தினம் நிறைய உண்பிக்க மழலை அவளுக்கு மட்டுந்தான் இம்மண்ணுலகில். என்றும் தெரியும்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் சில நிமிடங்கள்

Image
     நேற்று சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் - ல் நடைபெற்ற "படி" விருதுகள் வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன் எனது மனைவியுடன். எழுத்தாளர் எஸ்.ரா  தலைமையுரையினை கேட்கவேண்டி சென்றிருந்தோம்.      எஸ்.ரா. பற்றி நான் சொல்லுவதற்கு எதுவுமில்லை. இருந்தபோதிலும், தமிழ் இலக்கிய உலகினை பற்றி அவ்வளவாகத் தெரியாத, வாசிப்பதை மறந்து போய், துறந்து போய், கணிப்பொறிகளுக்குள்ளும், தொலைக்காட்சிகளுக்குள்ளும் முற்றுலுமாக மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் எனது சில, பல நண்பர்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் அவரை பற்றி சில வார்த்தைகள். எஸ்.ரா அவரது எழுத்துக்களை ஆனந்த விகடன் மூலமாகத்தான் முதலில் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்துகளின் மீது பெருங்காதல் கொண்டு அவரது தேசாந்திரி, சிறிது வெளிச்சம் போன்ற விகடன் பிரசுர புத்தகங்களை படித்து அவரின் ரசிகனானேன். அவர் விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர் என்பதுவும், கோவில்பட்டியில்தான் அவரது அம்மா தாத்தா வீடு என்பதும் தெரிந்தபொழுது இன்னும் அருகில் இணக்கமாகத் தெரிந்தார்.  எஸ...

ஒரு காதல் கடிதம்

Image
ஒரு காதல் கடிதம் :-         வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு கிழக்கும் மேற்கும் பயணிக்கின்ற  சாலையில் ஒரு மாலைப்பொழுதில் உன்னை முதலில் பார்த்த நியாபகம் நேற்று நடந்தது போல் இன்றும் நினைவிலிருக்கிறது. அன்று கதகதத்த மாலைசூரியனைப் போல் உன் கண்கள் என் நோக்கி பலபலத்ததையும், வீசிய காற்றில் கலைந்த உனது சிகைபோல் எனக்குள் ஏதோ ஒழுங்காயிருந்தது கலைந்தமையையும் இன்று உணருகையில் புலப்படுகிறது . ஹார்மோன்களின் கலகத்தால் ஏற்படும் உடற்செயலியல் வினைதான் இதுவெனினும்,  உன்னை முதலில் பார்த்த நொடியில் எனக்குள் இத்தகைய வினைகள், விபரீதங்கள் ஏற்பட எந்த அறிவியல், சுரப்புகளின் விதி காரணம் என்பது பலமுறை பலதேடல்களிலும் எனக்கும், இன்றுவரை அறிவியலுக்கும் புலப்படவில்லை. அது ஏதோ ஈர்ப்பு என்ற நினைப்பு கூட எனக்கில்லை அந்தநாள்தனின் அந்திமப் பொழுதுகளில். இருள் சூழத்தொடங்கிய அந்த கருக்கள் பொழுதில் வெவ்வேறு திசைகளில் இருவரும் அவரவர்  இலக்கு நோக்கி பயணப்பட்டோம், நீ எனக்குள் ஒரு பிரயாணத்தை, ஒரு மாயைப் பயணத்தை தொடங்கியிருப்பது அறியாது நான் உறங்கியவாரே சென்றுகொண்டிரு...

வேர்களோடு தொடர்பு அவசியமா ??

Image
வேர்களோடு தொடர்பு அவசியமா ??:-      நம் எல்லோருக்குமே தெரிந்த எளிய அறிவியல் உண்மைதான். செடியோ. கொடியோ, மரமோ எல்லாம் அழகாய் ஆரோக்கியமாய் பூமிக்கு மேலே காட்சியளிக்க தரைக்குள், பூமிக்குள் மறைந்து கிடக்கின்ற அந்த சிறிதும் பெரிதுமான வேர்கள் அவசியம். யாரோ சொன்னதுபோல " தாஜ்மஹாலின் வியக்கவைக்கிற உண்மை அழகு என்பது விழிக்கு தெரிகின்ற வெள்ளை சலவைக்கல்களில் மட்டுமல்ல, விழிக்குத் தெரியாது அந்த வெள்ளை சலவைக்கல்களைத் தாங்கி நிற்கும் அந்த அஸ்திவார அழுக்கு கருங்கற்களில்தான் அதிகம் இருக்கிறது" ( The real beauty of Taj Mahal is not just lies on the white marbles on the above but on the dirty black stones which is on it's below as basement ). இந்த வாசகம் மிக எளிதாக வேர்களின் அவசியத்தை, அவற்றின் தொடர்பின் அவசியத்தை ஒரு பரிணாமத்தில் சொல்கிறது.         வரலாற்றை புரட்டிப் பார்க்கையிலும் இந்த உண்மை புலப்படும். தனது வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்வியலை, தனித்தன்மையை ஒவ்வொரு நாகரிகமும், சமூகமும் தொடர்ந்து வேர்களின் வீரியத்தை உணர்ந்து புரிந்து ...

நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும்

Image
நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும் :-        இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கும் சுகா வின் "ராயல் டாக்கீஸ்" ன் பாதிப்புதான் இந்த பதிவிற்கு பாதி காரணம். மீதி காரணம் நான் நெல்லைக்கு இந்தமுறை சென்றிருந்தபோது எனது நண்பர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் தந்த புரிதல்கள்.      கி.பி.2000 ம் ஆண்டு! நான் எனது பள்ளிக்கல்வியினை முடித்துவிட்டு எடுத்த 780 சொச்சம் மார்க்குக்கு எதாவது கல்லூரியில் சீட்டு கிடைக்குமா? இல்லாவிட்டால் என்ன செய்ய என்ற பயத்தில் பேட்டை ஐ.டி.ஐ ல் எல்லாம் விண்ணப்பம் போட்டு வைத்த பொழுது. கல்லூரி இளங்கலை படிப்புகளை குறித்து ஒரு இழவும் தெரியாது. +2 ல இயற்பியல் 2 புத்தகம் படிப்பதற்கே நாக்கு தள்ளுதே, எப்படி மூணு வருஷம் இயற்பியல மட்டும் படிக்கமுடியும் என்று சிந்தித்த! தருணங்களெல்லாம் உண்டு. அவ்வளவு அறிவாளி நான். இந்த சிந்தனைகளை எல்லாம் கலைத்து, எனக்கு இளங்கலை விலங்கியலில் சேர அழைப்பு வந்துவிட்டது. என்னைப்போன்ற O.C மாணவர்களுக்கு மொத்தம் 7 இடங்கள், விலங்கியல் பிரிவில், அதில் எவனோ புண்ணியவான் சேராமல் போய் என...

பீட்சா குழந்தை

Image
பீட்சா குழந்தை :- அப்பாவும் அம்மாவும் வேலைக்கு சென்றபின் குளிரூட்டப் பட்ட அறைகளில் தனியே தொடங்குகிறது அவளது விளையாட்டு பெண்ணடிமைத்தனம் போதிக்கும் சமையல் பாத்திரங்கள் மட்டுமே மாதிரி விளையாட்டு சாமான்களாய் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன நாள் பூராவும் யாருமற்ற தனிமையில் சோறு பொங்கிவிட்டதாகவும் சாம்பார் வைத்துவிட்டதாகவும் சொல்லிக்கொண்டு இல்லாத யார்யாருக்கோ பரிமாறி விளையாடுகிறாள் அவள் அவ்வப்போது வரும் ஆச்சிகளோ, தாதிகளோ ஆடைமாற்றி உணவு திணித்து போகிறார்கள் அவளது  விளையாட்டூடே அவள் நண்பர்கள் யார் யாரெனக் கேட்கையில் சொல்கிற ஹைடியும் சோட்டா பீனும் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் என நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம் அம்மா யாரென்பதிலும் அப்பாவுக்கும் மாமாவுக்குமான அடிப்படை வேறுபாடுகளிலும் அவளுக்கு அவ்வப்போது ஏற்படும் அத்தனை குழப்பம் சுவற்றுப் பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும் சுதந்திரமாய் சுற்றித்திரியும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பெற்றவர்கள் பீட்சாவோடு வருகையில் அவை ஓடி மறைகின்றன அவள் அழத்தொடங்குகிறாள்.    

எப்படியிருக்கிறான் கிராமத்து விவசாயி?

Image
எப்படியிருக்கிறான் கிராமத்து விவசாயி ?:-              திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் ( இன்னும் எளிதாக சொல்லவேண்டுமானால் சேரன்மகாதேவி செல்லும் வழியில்) பேட்டைக்கு அடுத்து எனது பிறந்த ஊர் / கிராமம் சுத்தமல்லி அமைந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தினை நம்பியுள்ள கிராமம். பெரும்பாலானவர்கள் அருகிலுள்ள சிறு நகரங்களான டவுன், ஜங்சன், பாளையங்கோட்டை போன்ற இடங்களில் சிறு வேலைகளை செய்து கொண்டும், விவசாயத்தினை பார்த்துக்கொண்டும் வாழ்ந்துவருபவர்கள். அதிகபட்சமாக பெரும்பாலானோர் தினக்கூலிகளாகவும், மாதச் சம்பளம் எனில் அதிக பட்சம் ரூ.5000 முதல் ரூ.7000 வரை வாங்குவார்கள். ( அதுவும் RMKV,  POTHYS முதலான துணிக்கடைகளில் நிரந்தரமாக வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும்.) ஆனால் வீட்டு வாடகையைத் தவிர அவர்களும் பெருநகரவாசிகள் போல செலவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களே. உணவகங்கள், வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை, பள்ளிக்கட்டணங்களின் பூதாகர வளர்ச்சி, போன்றவற்றை இத்தகைய சிறு வருமானச் சூழ்நிலையையால் எதிர் கொண்டு வாழ்ந்து வருப...

மாற்றம் எங்கு தேவை?

Image
மாற்றம் எங்கு தேவை? :- நிகழ்வு 1.                      கடந்த ஒரு வருடங்களாக எனது வருங்கால வைப்பு நிதியினை பெற குர்கான்- ல் உள்ள அரசு வைப்பு நிதி அலுவலகத்துடன் (Govt. PF Office) ஒரு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்களாக சேமித்து வைத்த நிதியை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றும் பொழுது (Transfer from one company to another while changing ) ஏற்பட்ட குளறுபடியால் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது குர்கான் வைப்பு நிதி அலுவலகம். நான் விலகிய நிறுவனம் 2007 ல் அனுப்பிய காசோலையை எனது புதிய நிறுவனத்தின் வைப்பு நிதி கணக்கில் சேர்க்கவில்லை இன்றுவரை. அதற்க்கு சரியான காரணமும் தெரிவிக்க மறுக்கிறார்கள். ஒருவருடமாக தொடர்ந்து வருகிறேன் நிழல்போல. " என்னது கையப்புடிச்சு இழுத்தயா" கதைதான். "அண்ணன் எப்போ வர, திண்ணை எப்போ காலியாக" என்கிற பழமொழி மாதிரித்தான் இந்தக் கதை ஓடி கொண்டிருக்கிறது. நிகழ்வு 2.                   ...

வீழ்தல்

Image
வீழ்தல் :- சற்றுமுன் அடித்த மென்காற்றில் சரீரம் விட்டு சாய்ந்தவாறே விழுகிறது உயிர்விட்டு ஓட்டியிருந்த அந்த ஒற்றை இலை பற்றினை விடுத்த பச்சை நொடிகளில் காற்றின் கைக்குழந்தையாய் தாலாட்டுதலுக்கு உட்படுதலை அறிவியலின் எந்தவிதி அணைக்குமோ தெரியவில்லை சுழன்று சுற்றி  தளிர்த்த பூமிநோக்கி தடம் பெயருகையில் சுழல்கின்றன அதன் கழிந்த காலங்கள் பசுமை இலையாய் நிலம்தொட எத்தனிக்கையில் பற்றிப்பிடிக்கும் நீண்ட சிலந்தி நூல் பாவங்களின் எச்சம் அதன் பயணத்தில் ஒவ்வொரு உதிர்ந்த இலையிலும் மரங்களின் வாழ்வு மாற்ற இயலா சுயசரிதையாக     தரைவிழுந்தும் தன்மைகுறையாது உரமாகுதல் உணர்த்தும் உயர் வாழ்வின் தத்துவம் வீழ்தல் விதைத்தலாகும். 

வீடு வாங்கியாச்சா?? கார் வாங்கியாச்சா??

Image
வீடு வாங்கியாச்சா?? கார் வாங்கியாச்சா?? :-          கிராமங்களில் பிறந்து வளர்ந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்துகொண்டிருக்கும் என்னைப் போன்ற, இந்த நகரம் தற்காலிகமா இல்லை நிரந்தரமா எனக் குழப்பத்தில் இருக்கும் பெருநகரவாசிகள் அனைவருக்கும் இந்த பதிவுகள் சமர்ப்பணம்!!!      திருமணம் ஆகியாச்சா? குழந்தை எப்போ? என்பதற்கு அடுத்து பெரும்பாலும் திருமணமானவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் அப்புறம் எப்போ வீடு, கார் எல்லாம் வாங்கப்போரே? என்பதுதான். வீடு, வாகனங்கள் வாங்குதல் என்பது தனிநபர் ஆர்வம் சார்ந்தவொன்று என்ற பிரஞ்கை அற்று திரிகின்ற வெற்றுமனிதர்களின் கேள்விகள் இவை என்றாலும், இவை இன்று ஏற்படுத்தியிருக்கின்ற சமூக பொருளாதார மாற்றங்கள் ஆரோக்கியமானவையல்ல என்பதாலும் இந்தப் பதிவு அவசியமாகிறது.        முதலில் இந்த வீடு குறித்து பார்ப்போம். ஆதிகால மனிதனின் நாடோடி வாழ்க்கைமுறை பரிணாம வளர்ச்சி பெற்று  ஆற்றங்கரையோரங்களில் நிரந்தரமாக தங்கி தங்கள் வாழ்வை மேற்க்கொள்ள எத்தனித்தபோது, இயற்கை பேர...

செம்மொழி (காதலர்) பூங்கா, சென்னை -86

Image
செம்மொழி (காதலர்) பூங்கா, சென்னை -86 :-      சென்னையில் காதலர்கள் பெருகிவழியும்! அளவிற்கு அவர்கள் சந்தித்து காதல் வளர்ப்பதற்கான இடங்கள் தேவையான அளவிற்கு இல்லாததது வருத்தமே!. எல்லாவற்றிக்கும் ஏதேதோ சங்கங்கள் தோன்றி போரடுவதுபோல், காதலர் சங்கமொன்றினை தோற்றுவித்து சங்கமத்துறைகளுக்காக காதலர்கள் அரசிடம் போராடலாம்!.      செம்மொழிபூங்காவிற்கு புகைப்படம் எடுக்கவேண்டி சென்றிருந்தேன். அது செம்மொழிப் பூங்கா என்பதைவிட செம்மொழி காதலர் பூங்கா என்பதுதான் சரியாக இருக்கும். வந்திருந்த அத்துணை பேரும் ஜோடிகளே..ஜோடிகளே ..ஜோடிகளே. எல்லா பத்து அடிகளுக்கும் ஒரு ஜோடிகள் இருப்பின் எப்படி புகைப்படம் எடுப்பது.? இருந்தும் எடுத்தேன். என்ன செய்ய. நுழைவுக் கட்டணம் எனக்கு ரூ.15, காமிராவுக்கு ரூ.50, இருசக்கர வாகனம் வாகனம் நிறுத்த ரூ.15. கொஞ்சம் காஸ்ட்லி பூங்கா. காதலர்களை வைத்துதான் பூங்கா ஓடிக்கொண்டிருக்கிறது போலும். சிறுவர்கள் விளையாட தரமான சிறு விளையட்டுப்பகுதியொன்றும் இருக்கிறது. கொஞ்சம் புகைப்பட ஆர்வலர்களும், சினிமா படபிடிப்பு மாதிரி நிகழ்வுகளும் நடக்கின்றன. ஏனை...

ஒலி

Image
ஒலி :- சற்று சன்னமாகத்தான் கேட்க ஆரம்பித்தது முதலில்   பிறகு கொஞ்சம்  சத்தம் கூடியது  பிரளயமான  பெரும் சத்தமாக  கேட்க ஆரம்பித்திருந்தது  தற்போது அந்தப் பெருஒலி  வாசிப்பில்  ஈடுபட்டிருந்த என்னை  வழிதவறச் செய்திருந்தது நான் யோசிக்கும் பொழுதில்  அந்த ஒரு ஒலி ஒலியெழுப்பியவருக்கு இந்நேரம்  உடல் உபாதை  ஏதும் வந்திருக்கலாம்  என்னும் சிந்தனையெழுப்பிய பெருஒலியது  அறைவிட்டு வெளிவந்து  எட்டிபார்த்து  இணைத்துக் கொண்டேன்  என்னையும்  ஆச்சியும் பேத்தியும்  அதிரச் சிரித்த  அந்த நகையொலியில். 

ஒற்றை மழைத்துளி

Image
ஒற்றை மழைத்துளி :- நேற்றுமுதல் நிமிடம்தவறாது உரையாடிக்கொண்டிருந்த அந்த ஒற்றை மழைத்துளியைக் காணவில்லை தேடிக்கொண்டிருக்கிறேன் முதலில் சந்திக்கையில் வேப்பம்பழ நுனியில் வெற்றி நடனம் ஆடிக் கொண்டிருந்தது பிறந்த கொண்டாட்டமென நினைக்கிறேன் பிறகு புடைசூழ மின்சாரக்கம்பியில் குழுமி நகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து கையசைத்துவிட்டு வந்தேன் மதியம் துணி காயவைக்கும் கொடியில் காய்ந்து கொண்டு நட்பில் கனல் மூட்டிக்கொண்டிருந்தது சற்று முன்வரை அறையின் சன்னல் தாழ்வார நெகிழிக்குழாயில் வழிந்து வந்து பேசிக்கொண்டிருந்தது என்னுருவாக்கமும் அதனுருவாக்க்கவும் இன்னும் இன்னும் எத்தனையோ பேசிக்களித்தோம் எல்லா இடங்களிலும் நானும், நல்ல மழைத்துளியும் தேநீர் அருந்திவிட்டு திரும்பி வருகிறேன் எங்கேயும் செல்லாமல் இங்கேயே நில் என்று சென்று திரும்புகையில் காணவில்லை தோழித்துளியை சற்றே உருண்டையாய் நிறமல்லாதவொரு  நிறத்தில் சிரித்தவாரே எங்கேனும் என் மழைத்துளியைப் பார்க்கின் எனக்குத் தெரிவியுங்கள் ஆனால் உங்களுக்கு அவளை பார்க்கும் அளவிற்கு அருமை நேரமிருக்குமா என்ப...

ஜன்னல்வழி மழை ரசித்தல்

Image
ஜன்னல்வழி மழை ரசித்தல்:-               ஜன்னல்வழி மழையை கவனித்தல் ஏன் இன்றும் எல்லோருக்கும் சுவாரஸ்யமாய் இருக்கிறது என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இல்லத்தின் எல்லோருமே ஏதாவது சிலநிமிடங்கள் ஜன்னலோர மழையை கவனிப்பதை, ரசிப்பதைப் பார்க்கிறேன். எனக்குள் இருக்கும் கவிதை என்னை மழை நோக்கி இழுக்கிறது, இல்லை மழை என்னுடைய கவிதையை இழுக்கிறது. எனக்கு ஏதோ நடப்பதுபோல் எல்லோருக்கும் ஜன்னல்வழி மழை பால்யத்தையோ, காதலையோ, பதின்பருவ நினைவுகளையோ, பள்ளித் தோழமைகளையோ எதையோ, எங்கேயோ தேக்கி சேமித்து வைத்திருந்த நினைவுகளை இழுத்து வந்து இமை முன் நிறுத்தி நனைக்குமென நினைக்கிறேன்.          இதை ஏன் ஜன்னல் வழி மழை செய்யவேண்டும்?. ஜன்னலின் அமைப்பு கட்டம் கட்டமாக இருப்பதற்கும் உளவியலுக்கும் ஒரு ஒருங்கிணைவு இருப்பதாக நினைக்கிறேன். வாழ்வின் பல்வேறு கட்ட நிகழ்வுகளை, ஜன்னலின் இந்த அமைப்புகள் நியாபகப்படுத்தி ஒருங்கிணைத்து ஒரு அக மகிழ்வினை தருமென உணர்கிறேன். மழையின் வேகத்திற்கு ஏற்ப மனநிலை மாறுவதையையும், வேகம் அதிகரிக்க அதிகரிக்க மனதுள் நினைவுகளி...

இண்டர்ஸ்டெல்லரும் இனிய தமிழ் ரசிகனும் - விமர்சனம்!!:-

Image
இண்டர்ஸ்டெல்லரும் இனிய தமிழ் ரசிகனும் -  விமர்சனம்!!:- interstellar குறித்து நிறைய கருத்துக்கள், விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தது, மற்றொருபக்கம்  வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்கவே இல்லை. நண்பர் ஒருவர் christopher nolan ஐ மதிக்கும் விதமாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்க போவதாகச் சொல்லவும், ஆர்வம் அதிகரித்து நேற்று சத்யம் திரையரங்கில் பார்த்தோம். படம் குறித்து நிறைய பேர் படம் செமையா இருக்கு ஆனா கொஞ்சம் புரிய மாட்டேங்குது என்று வேறு அலுத்துக்கொண்டார்கள். இந்த மாதிரி sci-fic படங்களை பார்ப்பதற்கு முன்பு நான் சில வேலைகளை செய்துகொள்வேன். முதலில் அந்த படம் குறித்த கதையை, சில தகவல்களை இணையம் மூலமாகவும் மற்ற சாத்தியமான வழிகளின் மூலமாகவும் தெரிந்து கொஞ்சம் புரிந்து கொண்டு படத்தினை பார்க்க செல்வது. படத்தினை பற்றிய அந்த pre collected knowledge படத்தினை ரசித்துப் பார்க்க உதவியாக இருக்கும். இதென்ன விஜய் படமா இல்லை இயக்குனர் ஹரி படமா? எளிதாக பார்த்து புரிந்து கொல்ல.. sorry.. கொள்ள!! (அவர்கள் படமே என்ன சொல்ல வராங்கன்னு பல நேரம் குழப்பமா இருக்கும் என்பது வேறு) Interstellar படத்...

கவிஞனாயிருத்தல்

Image
கவிஞனாயிருத்தல்:- காரத்துக்குப்பின் அருந்தும் வெந்நீராய் உன்நினைவு உதைத்ததில் உதித்ததது படியேறி செல்கையில் கலைந்தததை பக்குவமாய் இறுக்கிக் கொண்டேன் இருந்தும் நழுவியது கொஞ்சம் நினைவிலிருந்து வானின் மின்னல் போல் அடுத்தது வரினும் முன்னதை காண்பது முடியாத சத்தியம் முயலமுடியா சாத்தியம் கொஞ்சம் இசை கேட்பின் விட்டதைப் பிடிக்கலாம் என கேட்க்கையில் தொட்டதும் தொலைந்து தொடர்பில்லாதவொன்று தோன்றியது இடையில் கடித்த எறும்பின் இன்னல் எடுத்துக்கொண்டு போய்விட்டது முழுதும் எண்ணாக் கவிதையை எழுதாக் கவிதையை எங்கேயோ கவிஞனாயிருத்தல் கடுத்தம்!!.

வேலுவம்

Image
வேலுவம் !! :- நகக்கண் புண் உன்நினைவுக் காமம் நகர்தல் அசாத்தியம் எறும்பூர தேய்கிற கல் நின் நினைவூற தேய்கிற உடல் எஞ்ஞான்றும் திரும்பிவரா இரவில் விழித்தல் பகலில் துயில்தல் காதல் பசலை படர மாறிய பருவ இலக்கணம் சுரப்பு விகுதி சுண்டும் பகுதி அகத்தழகு காத்தல் அவ்வளவுக் கடினம் நெஞ்சம் வேறு நினைவு வேறு குஞ்சின் பாட்டில் கொள்ளாது பிடி சோறு பொடிபோட்டு பிடி பிடித்து கிடை கிடந்து கீழேப் போக கீழ்க்கண் பார்வை யமன். ஐந்தடி அழகு ஐம்புலன் ஒடுக்கம் அசராது கடக்கின் அமர வாழ்வு அணைக்கும்.

யாருக்கும் தெரியாமல்

Image
யாருக்கும் தெரியாமல் :- கப்பல் செய்துதரச் சொல்லி எனது பால்யத்திற்கு சென்றுவர பாதையிட்டு பணித்தாள் அவள் செய்தித்தாளினை எடுத்துவர சொல்லியதும் கிழித்து எடுத்துவந்தாலவள் ஏனென்று புரியவில்லை செய்தித்தாளினை சற்றே சதுர வடிவமாக்கி நான்காக மடித்து மும்முனையை ஒருபுறமாகவும் ஒருமுனையை எதிர்புறமாகவும் மடித்து இழுக்கையில் காணக்கிடைத்தது கப்பல் சற்றே ஒழுங்கற்ற கப்பலின் வடிவம் சந்தோசம் தரவில்லை முழுவதும் அவளுக்கு முயற்சிகள் தொடர்ந்ததும் முழுமையான வடிவம் பெற்றது காகிதக் கப்பல் அவள் சந்தோசப் புன்னகைபோல் இனி கத்திக் கப்பல் செய்யப் பழக வேண்டும் நான் யாருக்கும் தெரியாமல்!!.

நிதர்சனத் தேடல்

Image
நிதர்சனத் தேடல் :- நினைவு தவிர்த்து வாழ்தலே நிதர்சனத் தேடலாயிருக்கிறது இப்போது நேற்று இரவு துயிலுகையில் துரிதமாய் ஒரு கனவு நிகழ்ந்தது சம்பந்தம் இல்லாத சிலர் ஒரு நிகழ்வின் தொகுப்பாக வந்து போயினர் எல்லோருடைய தெளிவில்லாத முகத்தினூடே உன்முகம் மட்டும் பிரகாசமாய் பிரதிபலித்ததை கண்மூடியிருந்த கனவில் கண்கொண்டு பார்த்தேன் உள்ளுறக்கம் சற்றே உளுப்பப்பட்டிருந்தது இருந்தும் இயல்பில் விழிக்கவில்லை நான் பிரகாசமான முகம்தாங்கி நீ அலைந்த கனவில் சட்டத்திற்குள் அடைபட்ட உனது ஒரு புகைப்படமும் இருந்தது நன்றாக நனவில் நினைவிலிருக்கிறது உன் நினைவு தவிர்த்து வாழ்தலே நிதர்சனத் தேடலாயிருக்கிறது இப்போது.