மரணத்தின் வலி எத்தகையது?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப்ஸ் பந்து தாக்கி விபத்தில் உயரிழந்தமை குறித்து செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கின்றன. எகிறி எனப்படும் பவுன்சர் பந்துவீச்சில் படுகாயமுற்று, கோமா நிலைக்கு சென்று மரணித்திருக்கிறார் இருபத்து ஐந்து வயதேயான பிலிப்ஸ். கிரிக்கெட் உலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
மரணம் குறித்த எனது நினைவுகளை கிளருகிறது இந்த இளம்வீரரின் மரணம். இருபத்து ஐந்து வயதில் மரணம். ஏற்றுக்கொள்ள முடிகின்ற ஒன்றா இது. ஜீரணிக்க இயலுமா இதை. எதிர்பார்த்திருப்பார்களா அவரது குடும்பத்தினர் இதை. அவ்வளவு எளிதில் கடக்கின்ற நிகழ்வா இது. மரணிக்கின்ற நிகழ்வை விட, அதை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு பயணிக்கிற நெருங்கிய உறவுகளின் மனநிலை கொடுமையானது. எத்தகைய எதிரிக்கும் நிகழக்கூடாத அந்த நிகழ்வு, சோகம் பிலிப்ஸ் குடும்பத்தாருக்கு நிகழ்ந்திருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவர் உறவுகளுக்கு தேவையான மன தைரியத்தை அவர்களது இறைவன் அவர்களுக்கு கொடுக்கட்டும்.
எனக்கு விவரம் தெரிந்து நான் சந்தித்த முதல் மரணம் சித்திரை மணியுடையது. சித்திரை மணி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆறுமுகம் எங்கள் கிராமத்தில் எங்கள் கோவில் பத்து தெருவில் வாழ்ந்துவந்த எனது தந்தையாரின் தோழர் திரு.சித்திரை அவர்களின் ஒரே புதல்வன். சித்திரை அவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள், மணியும், மூன்று பெண்களும். நால்வரில் மணி இரெண்டாவது. பவானி, பரமேஸ்வரி என தங்கைகள். அவனுடைய அக்காவின் பெயர் உமா என்று நினைக்கிறேன். அப்போது மணி பத்தாவது படித்துக் கொண்டிருந்ததாய் நியாபகம். நான் ஆறாவது என்று நினைக்கிறேன். காக்கி ட்ரவுசரும், வெள்ளைச் சட்டையுமாய் ஆரஞ்சு வண்ண இருக்கையுரையிட்ட மிதிவண்டியில் மணி காமராசர் பள்ளிக்கு செல்வது எனக்கு இன்றும் கண்முன் விரிகிறது. விடுமுறை நாட்களில் மணியின் மிதிவண்டியில் பின்னால் அமர்ந்துகொண்டு ஆத்துக்கு பலமுறை குளிக்கச் சென்றிருக்கிறேன். சூது வாது தெரியாத வெள்ளந்தி சித்திரை மணி. தெருவில் எல்லோருக்கும் பிடித்த ஆள். தோப்பில் மாங்காய் திருடித் தின்பது, முக்கில் உட்கார்ந்து அவர்கள் அரட்டைகளை கவனிப்பது என்று சித்திரை மணியை பார்க்காது நாட்கள் சென்றதே இல்லை எப்பொழுதும். "ஏய் வேலுபிள்ளை எங்கடே போற" என்று அடிக்கடி சித்திரை மணி என்னைக் கேட்பது இன்னும் நினைவிருக்கிறது. அவர்கள் வீட்டில் பின்பகுதியில் கார்த்திகைக்கு பொருத்தப்படும் மெழுகுவத்திரிகளை சேகரித்து உருக்கி, சூடன் டப்பாக்களை வெட்டி கிடைக்கும் பாதி அச்சில் ஊற்றி பொம்மைகள் செய்து விளையாடியிருக்கிறோம். அவர்கள் வீட்டின் ஒவ்வொரு அறைகளும்,கதவும், ஜன்னல் கம்பிகளும் அடுக்கி வைத்திருந்த சாமான்களும் என எல்லாமுமே எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.
தீடீரென்று ஒருநாள் உடல்நலக்குறைவு என்று சொன்னார்கள். அடுத்த நாளே இறந்து விட்டதாகச் சொன்னார்கள். எல்லோரும் போய்ப் பார்த்தோம். தலைமாட்டில் எண்ணெய் விளக்கொன்று எரிய சித்திரை மணி படுத்திருந்தது மனதை என்னவோ பண்ணியது. எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். தெருவே சோகமயம் பூண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையானால் மறக்காது தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளித்து உடம்பை பேணுகிற சித்திரை மணி எரியூட்டவேண்டிய உடலோடு கிடந்தது யாருடைய சாபம்?. வீட்டிலிருந்து வெளிய வருகையில் மணியின் அப்பா சுவற்றில் சாத்தி வைத்திருந்த மிதிவண்டியினை தொட்டவாரே மௌனமாயிருந்தார். இனிமே இந்த வண்டிய என்னைத் தவிர எவன் சீண்டுவான் என எண்ணியிருப்பார் என நினைக்கிறேன். ( மணிக்கு அந்த வண்டியை அவ்வளவு எளிதில் ஓட்டக் குடுக்க மாட்டார் சித்திரை ). நன்றாக வளர்ந்த சிவந்த உருவம் மணியுடையது. அதில் உயிரில்லை என்பதை என்னால் அப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியாத சிறுவனாயிருந்தேன். ஏன் சித்திரை மணி இறந்தான் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. பேய் அடித்துவிட்டதாகவும், யாரோ களித்த களிப்பினை மிதித்து விட்டிருப்பான் எனவும் எல்லோரும் மணியைப் பற்றியும், சித்திரை பற்றியும் பேசிய வண்ணமிருந்தார்கள். அவனது நண்பர்களிடையே பெரும் சோகம் நிலவியது. அவனது நண்பர் எசக்கியப்பன் அண்ணன், மணி இறந்த கோவத்தில் வீட்டிலிருந்த சாமி போட்டாக்களை எல்லாம் நொறுக்கிவிட்டார் என்றும் எல்லோரும் பேசிகொண்டிருந்தனர் வெகு நாட்களுக்கு. காற்றில் திரிந்த அவனது ஆன்மா வேண்டுமானால் கேட்டிருக்கக் கூடும் அவன் இறப்பின் பொருட்டு அவன் குடும்பம் படும் வாதையை.
மணிக்கு தெரியுமா தான் இவ்வளவு சின்னவயதில் இறந்துபோவமென்று. ஆயுள் குறைந்த வண்ணத்துப்பூச்சி மாதிரி ஆரவாரமாய் மகிழ்வோடு வாழ்ந்துகொண்டிருந்த மணியைக் காலம் ஏன் கொன்றது?. அப்படியென்ன அவனது மரணத்தின் தேவை அப்பொழுது. சாகவேண்டிய வயதா அவனுக்கு!. கலகலவென சிரித்துக்கொண்டு கண்களுக்குள்ளேயே நிற்கின்ற அவனை கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகும் அவனது இறப்பு குறித்து எண்ணுகையில் கண்கள் பணிக்கச் செய்த, எடுத்துக்கொண்ட அடையாளப்படுத்தமுடியாத ஒன்றை பழிக்கத் தோன்றுகிறதே. இத்தகைய இறப்புகளை எது தீர்மானிக்கிறது. விதி என்ற ஒற்றைச் சொல்லா?. அவனது தங்கைகளும், அதே மாதிரி திடீரென இறந்து போய்விட்டதாகக் கேள்விப்பட்டப்பொழுது சோகம், விரக்தி அதிகமாகியது அடையாளந் தெரியாத அந்த விதியின் மீது. மூன்று பிள்ளைகளையும் இருபதுக்கு மேற்ப்பட்ட வயதில் சாகக்கொடுத்துவிட்ட அந்ததகப்பன் சித்திரையின் மனநிலை எப்படியிருக்கும்?. கண்முன்னே ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் சாகையில் அந்த பெற்றதாய் எத்தனைமுறை செத்துப் பிழைத்திருப்பாள்?. பாலும் சோறுமாக ஊட்டி, ஊட்டி வளர்த்து இப்படி அற்ப வயதில் இறக்கின்ற பிள்ளைகளைப் பார்க்கையில் அந்த தாய்மனது என்ன பாடு பட்டிருக்கும். அவளது சோகத்தை, ஆற்றுகின்ற, தேற்றுகின்ற வலிமை இந்த விதியெனும் ஒற்றைச் சொல்லுக்கிருக்கிறதா?. எதற்கு எளிய மனிதர்களுக்கு இப்படி நடக்கிறது. கடவுள் என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை செத்துப்போன தருணங்கள் அவை. இப்படி வாழ்க்கை காட்டிச்செல்லும் வழிகளில் எழும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் தெரியாது நகர்தலே வாழ்தல் போலும்.
மணியின் மறைவிற்கு சில மாதங்களுக்குப்பிறகு திரு.சித்திரை அவர்கள் குடும்பத்தோடு அவரது சொந்த ஊரான சத்திரப்பட்டிக்கு சென்றுவிட்டார். அவர் இப்போது இருக்கிறாரா, இல்லையா என்றுகூட தெரியவில்லை. காலஒட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பங்களில் சித்திரை அவர்களது குடும்பமும் ஓன்று. ஆனால் இன்றும் அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டினை கடக்கின்ற போதெல்லாம் நான் சித்திரை மணியையும், அந்த ஆரஞ்சு வண்ண இருக்கையுறை போட்ட மிதிவண்டியையும், பவானி, பரமேஸ்வரி என்ற மணியின் தங்கைகளையும், அவர்களது தகப்பனார் சித்திரை அவர்களையும் நினைத்துக் கொண்டே செல்கிறேன். அங்கே அவர்களது வீட்டின் வாசலில் நின்று ""ஏய் வேலுபிள்ளை எங்கடே போற" என்று சித்திரை மணி கேட்டுக்கொண்டே தான் இருக்கிறான். நானும் உள்ளத்தில் அவனைப் பார்த்து புன்னகைத்தவாறே பதில் சொல்லிவிட்டுதான் ஒவ்வொரு முறையும் வருகிறேன்.
இரெண்டாவது மரணம் எனது தாத்தா இசக்கியா பிள்ளையின் மரணம். கிட்டத்தட்ட வாழ்ந்துமுடித்த அகவையில் அவர் மரணித்திருந்தாலும், எனக்கு ஊர்சுற்றிக் காண்பித்த, கேட்கும் போதெல்லாம் மிட்டாய்கள் வாங்க காசுகள் கொடுத்த, எங்கள் எல்லோருடைய கல்விக்கும், மற்ற தேவைகளுக்கும் உறுதுணையாயிருந்த அவரின் கடைசிப் பயணத்தில் நான் இல்லையென்ற குற்றஉணர்விலும், அவரது கடைசி இறந்தபின் எடுத்த புகைப்படத்தைப் பார்க்கின்ற பொழுதெல்லாம், " எப்படியிருந்த மனுஷன், இப்பிடி ஆயி, போகவும் போய்ட்டாரே" என்று கண்ணீர்விட்ட பொழுதுகள் என என்னை கொஞ்சம் மனம் கனக்கச் செய்த மரணம் அவருடையது. அவரோடு தேரோட்டம் பார்க்கச் சென்ற பொழுதுகள், சுத்தமல்லி பேருந்து நிலையப் பெட்டிக்கடையில் உட்கார்ந்து பேசிய நினைவுகள், எங்கள் அம்மாவின் ஊரான கிராமங்கலத்தில் அவரோடு ஆத்துக்கு சென்ற நினைவுகள் என என்னென்னவோ வந்து மனதை ஏதேதோ பண்ணும் பல சமயங்களில்.
தனது தந்தை எதிர்பாராது இறந்தபிறகு, அவர் சிலகாலம் கனவில் தோன்றி பேசுவதாயும், அவரது நினைவிலிருந்து அவருக்கு செய்ய மறந்த சில செயல்களைஎண்ணி உறக்கமற்று உழல்வதையும் சொன்ன ஒரு நட்பின் நினைவும் வருகிறது.
காலம் எல்லோருடைய வாழ்விலும் சித்திரை மணியைப் போன்றோ, எனது இசக்கியாப் பிள்ளை தாத்தா போன்றோ, இல்லை நட்பின் தந்தையைப் போன்றோ ஒருவரை வெகு சீக்கிரமோ, இல்லை கொஞ்சம் முன்னதாகவோ இறப்பு எனும் மானுடநியதியின் பொருட்டு எடுத்துச் சென்றுகொண்டுதான் இருக்கிறது, சோகத்தை அப்பியவாரே. தந்தையையும், தாயும் இழக்கின்ற பிள்ளைகள், பிள்ளைகளை சாகக் கொடுத்துவிட்டு நடைபிணமான பெற்றவர்கள், நண்பர்களை இழந்துவிட்டுத் தவிக்கிறவர்கள், தங்கையை, அக்காவைத், அண்ணனைத், தம்பியை இழந்து தவிக்கிறவர்கள் என எல்லா வீடுகளிலும், குடும்பங்களிலும், தெருக்களிலும், ஊர்களிலும் நம் மனதை பிசைகின்ற, கண்களைப் பனிக்கச் செய்கின்ற மனிதர்கள் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் செய்கின்ற காலம் அல்லது விதி, மரணத்தின் வலிகள் பற்றி எந்த பிரஞ்கையும் இல்லாது,எந்த தண்டனைகளையும் பெறாமல் இப்படி தொடர்நிகழ்வில் ஈடுபட்டு தப்பித்தும் வருகிறது. காலத்தை, விதியினை பழிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால் மரணத்தின், பேரிழப்பின் ஆற்றாமையைப் போக்கிக்கொள்ள.
Very Good Narration
ReplyDeletethanx anna.
ReplyDelete