ஒரு காதல் கடிதம்

ஒரு காதல் கடிதம் :-


 
     வாகனங்கள் காற்றை கிழித்துக் கொண்டு கிழக்கும் மேற்கும் பயணிக்கின்ற
 சாலையில் ஒரு மாலைப்பொழுதில் உன்னை முதலில் பார்த்த நியாபகம் நேற்று நடந்தது போல் இன்றும் நினைவிலிருக்கிறது. அன்று கதகதத்த மாலைசூரியனைப் போல் உன் கண்கள் என் நோக்கி பலபலத்ததையும், வீசிய காற்றில் கலைந்த உனது சிகைபோல் எனக்குள் ஏதோ ஒழுங்காயிருந்தது கலைந்தமையையும் இன்று உணருகையில் புலப்படுகிறது.ஹார்மோன்களின் கலகத்தால் ஏற்படும் உடற்செயலியல் வினைதான் இதுவெனினும்,  உன்னை முதலில் பார்த்த நொடியில் எனக்குள் இத்தகைய வினைகள், விபரீதங்கள் ஏற்பட எந்த அறிவியல், சுரப்புகளின் விதி காரணம் என்பது பலமுறை பலதேடல்களிலும் எனக்கும், இன்றுவரை அறிவியலுக்கும் புலப்படவில்லை. அது ஏதோ ஈர்ப்பு என்ற நினைப்பு கூட எனக்கில்லை அந்தநாள்தனின் அந்திமப் பொழுதுகளில். இருள் சூழத்தொடங்கிய அந்த கருக்கள் பொழுதில் வெவ்வேறு திசைகளில் இருவரும் அவரவர்  இலக்கு நோக்கி பயணப்பட்டோம், நீ எனக்குள் ஒரு பிரயாணத்தை, ஒரு மாயைப் பயணத்தை தொடங்கியிருப்பது அறியாது நான் உறங்கியவாரே சென்றுகொண்டிருந்தேன்.

     இலக்கு அடைந்து காலம் மௌனித்திருந்தது நம்மிடையே கொஞ்ச நாட்களாக. கடக்கின்ற அவள்களிடமும், கனவில் உலாத்தும் அவள்களின் வழியாகவும் உன் நினைவுகளை காலம் விதைக்கும் என்பது நான் எதிர்பாராது உணர்ந்த, தெளிந்த ரகசியம். விளைவுகள் எல்லாவிதத்திலும் விபரீதமாகும் என்கிற நினைப்பின்றி கனவுகளில் லயித்துக் கிடந்த மாயப்பொழுதுகள் அவை. எதிர்பாலின ஈர்ப்பு, காதல் மனதில், உடலில் நிகழ்த்துகிற மாயம் அளப்பரியது. காற்றில் பறத்தலும், மௌனத்தில் சிரித்தலும், இயற்கையை ஊன்றி ரசித்தலும் என அது ஏற்படுத்தும் மாற்றங்கள் மனித வாழ்வில் அளப்பரியவை. அவை உன்வழி எனக்கு நிகழ்ந்ததால் நீ எனக்கு மானசீக காதலியானாய்.

     திட்டமிட்ட, காரிய நோக்கோடு கருமமே கண்ணாய் தொடங்கியது எங்கேயோ கொண்டு சேர்க்க எத்தனிக்கும் நமது உரையாடல்கள். நீயும் நானும் பேசாத பொருட்கள், நிகழ்வுகள், மனிதர்கள் அப்போதைய உலகில் அதிகமில்லை. அவ்வளவும் பேசினோம். தூங்கும் பொழுதில் பேசுவதும், பேசிக்கொண்டே தூங்குவதும் என நம் காதல் பேச்சுகளை காவியமாகக் கூட எழுதலாம். எல்லோரும் விழித்திருக்கையில் தொடங்கும் நமது பேச்சுக்கள் எல்லோரும் உறங்கி, மறுபடியும் விழிக்கையில் வலுக்கட்டயாமாக முடியும் தினங்கள் அவை. முகம் பாராது, உடல் சேராது, வெறும் பேச்சுகள் வழியே காதல் கோட்டையை பெரிதாக முதலில் கட்டியவர்கள் நாம்தான் என நினைக்கிறேன். குடும்பம், தொழில், கல்வி, வாழ்தல் பற்றிய பெரும் நினைவுகள் ஏதுமின்றி கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் இப்படி பேசியே ஓடிவிட்டிருந்தன. நீ என்னுடைய தீவிரக் காதலியாகவும், நான் உன்னுடைய தீவிரக் காதலனாகவும் மாறி வாழ்ந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை.

     அடுத்த சிலவருடங்கள் நாம் வாழ்தல் குறித்தும், அடுத்த கட்டமாக காதலை எவ்வாறு  எங்கு பயணிக்கச் செய்வது என்பது குறித்தும் சிந்திக்க தொடங்கினோம். காதல், வாழ்தலாகையில் கனவுகள் கடுமையாய் வருவதும், காதலியை மனைவியாக்க எத்தனிக்கையில் கனவுகள் கொஞ்சம் கடினமாவதும் இயல்பென நினைக்கிறேன்.  நீ வெவ்வேறு திசைகளில்  உன் சிந்தனையை, காலச்சாரம் குறித்த உனது கற்பிதங்களை மாற்றிக்கொள்ள முடியாத மனநிலையில் சமூக வாழ்வியல் பிரச்சனைகளை குறித்த கவலையில் இருந்தபொழுது, நான் இலட்சிய வெறியுடன் உன்னை கைபிடிக்க எத்தனித்து பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். காதலர்கள் மனங்களை விட்டு வெளிவந்து, சமுகம் குறித்து சிந்திக்கையில் காதலை தொலைக்காது பாதுகாத்தல் பிரயத்தனமான செயல். ஈர்ப்புகள் குறைவதும், பொறுப்புகள் அதிகரிப்பதுவுமான பொழுதுகளில் பரஸ்பர காதலில் தொய்வு ஏற்படுமானால் அந்தக் காதல், வாழ்தல் எனும் அடுத்த நிலையடைவது கடினம். யாருக்கும் தெரியாத ரகசிய காதலியாக மட்டுமே நீ நினைத்து தொடர விரும்பிய காதல் என்னோடு, என்று நீ தெரிவித்த கணத்திலிருந்து நீ என்னுள்ளிருந்து விலக ஆரம்பித்திருந்தாய். அடுத்தடுத்து தொடர்ந்த நமது பேச்சுகள் நமது காதலை அடுத்த நிலைக்கு நகர்த்த நீயே தடைக்கல்லாய் மாறப்போவதை சொல்லியபடியே இருந்தன. முடிவில் நீ, நீ நினைத்தவாரே மௌனித்துக் கொண்டாய். காதலை படிமமாக்கி, ஊமையின் கனவாய் உன்னுள்ளேய மறைத்து வாழ முடிவு செய்து நீ என்னிலிருந்து விலகிச் செல்கையில் என்னுள் பெரும் இடி இடித்து, பேய் மழை பொழியத் தொடங்கியது தினந்தினம்.

     பெண்களுக்கும், ஆண்களுக்குமான வாழ்தல் குறித்த எண்ணங்களில் நிரம்ப வித்தியாசமிருப்பதை உனது பிரிவில் உணரத் தொடங்கியிருந்தேன். பெண்ணென்பவள் விலக முடியாத ஒரு சமூக சார்பில் எப்பொழுதும் உழன்றுகொண்டே இருக்கிறாள் பெரும்பான்மையாக. காதலில் கிடைக்கும் ரகசிய இன்பங்கள் அவளுக்கு பிடித்திருந்தாலும் அவற்றை பகிரங்கப்படுத்தி அடுத்த நிலைக்கு எல்லோருமறிய முன்னேற எத்தனிக்கையில் அவளுக்குள் நிரம்ப கேள்விகள் வந்து விடுகின்றன. என் காதலை எப்படி எனது வீட்டாரிடம் சொல்வது?, காதல் திருமணம், சாதிவிட்டு சாதி, மதம் விட்டு மதம் எப்படிச் செய்து கொள்வது.? இந்த உலகத்தின் பார்வையில் காதல் திருமணம் என்பது வேசி வாழ்கையைப் போலல்லவா இன்றும் பார்க்கப்படுகிறது என்று உனது பிரிவின் பொருட்டு  நீ எனக்கு கேட்ட கேள்விகள் ஏராளம். உனது சமூகப் பயம் நமது காதலை காவு கொண்டு விட்டது . விதி வலியது.

    காதலும், சமூகமும், கலாச்சாரமும் எங்கனம் தொடர்புடையவை. அப்படியெனில் அதைமீறித் தளும்பும் காதல் இயல்பு சரியென்றும், தவறென்றும் நாம் எதைப்பொறுத்து, எங்கனம் தீர்மானிப்பது??  இப்படி கேள்விகளால் என்னை நான் துளைத்தெடுத்து சல்லடையாக்கியிருந்த பொழுதுகள் அவை.
   
     இருசக்கர வாகனத்தில் காற்றை கிழித்துக்கொண்டு மகிழ்வாக பயணிக்கையில், கோவிலில் பிரகாரத்தில் எனைப் பார்த்தும் புன்னகைக்கும் ஒரு குழந்தையை ரசிக்கையில், உணவகத்தில் ஏதோ சிந்தனையில் உண்ணுகையில், இருளும், நிலவுமாக மொட்டைமாடிதனில் கவிழ்ந்து கிடக்கையில், காதலியைத் தேடி அலைந்து திரிந்து இறுதியில் அவளை காணும் பொழுதில் கண்ணீர் சிந்தும் கதாநாயகனை திரையில் காண்கையில், என்று அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் நிகழ்வுகளில் உனது நினைவினைத் கிளறி, என்னை நிலைகுலையச் செய்யும் உனக்கான இந்த முழுமையற்ற காதலை என்செய்ய நான். காலம் நீள, காதல் மறைந்து போகும் என்று கூறி மறைந்து வாழும், மறைத்து வாழும் உன் போல் இல்லையே இந்த ஆண் மனது.

      நீ சொல்லிய சிறு வார்த்தைகளும், பல சொற்றொடர்களும் அசரிரி போல் காதுகளில் அவ்வப்பொழுது ஒலித்துக்கொண்டு ஆயிரம் விவாதங்களை, விபரீதங்களைச் சிந்திக்கச் செய்கிறதே என்செய்ய நான். தினம் கடக்கும் பொழுதுகளில் உன்னை உதாரணம் கூறியோ, உன் வழிகாட்டுதலை தவிர்த்தோ வாழ்தல் எனக்கு சாத்தியமில்லாத போது எங்கனம் உன் காதலை மறந்து, மீறிச் செல்வது. நிரந்தர மௌனமும், தொடர்பில்லாத விலகியிருத்தலும் எங்கனம் தீர்வளிக்கும் என் போன்ற விசித்திர காதலனுக்கு. நான்  வேண்டுமானால் முயற்சிக்கலாம், மனிதர்களற்ற, பேச, கேட்க அவசியம் இல்லாத, இசை முதலான எத்தகைய ஒலிகளும் இல்லாத மொத்தத்தில் இல்லாத ஒரு உலகத்தை நான் சிருஷ்டிக்க வேண்டும். இப்போது புரிகிறது ஆண்களுக்கு மட்டும் ஏன் மரணமும், ஆன்மிகமும் காதல் புறக்கணித்தலையடுத்து தொடர்கிறது என. பெரும்பாலான அமைதியான ஆண்களுக்கு பின்னால் ஒரு அன்பின் புறக்கணிப்பு, தோல்வி இருக்கும் என எண்ணுகிறேன் இந்த தருணத்தில். இப்படிப்பட்ட சவரம் செய்யாத சிந்தனைகள் வதைத்தது, வதைக்கிறது அவ்வப்போது இன்றும்.

     சமூகப் பயன்களுக்காக, கலாச்சார நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீ உனக்குள்ளேயேப் புதைத்துக் கொண்டிருக்கும் காதல் உன்னை நிம்மதியாக வாழ விட வேண்டி பிராத்திக்கிறேன். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும், எந்தப் போலிச் சமுக, காலச்சார நிர்பந்தமும், திணித்தலும் இல்லாத வேறொரு உலகத்தில் விட்ட இடத்தில் இருந்து தொடர்கின்ற காதலர்களாக நாம் மறுபடியும் சந்திப்போம். அப்போது அங்கே அந்த தங்க நிற கதவுகளால் ஆன நீண்டதொரு பாலத்தில் கண்ணுக்கெட்டியவரை நீர் சூழ்ந்திருக்க, வீசும் குளிர்காற்றினை கிழித்தபடியே ஓடிவந்து, அணைத்தவாறே நாம் மறுபடியும் இணைவோம். அங்கே மனிதர்கள்  பற்றிய பெரும் பிரஞ்கை அற்ற மனது உனக்கும் எனக்கும் வாய்த்திருக்கும். அதுவரை  இந்த நம்முடைய காதல் ஒரு புதைத்து வைத்த பொக்கிஷமாய் இருந்துவிட்டுப் போகட்டும், நம் மனங்களுக்கடியில் மட்டும்.           

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔