பீட்சா குழந்தை

பீட்சா குழந்தை :-


அப்பாவும் அம்மாவும்
வேலைக்கு சென்றபின்
குளிரூட்டப் பட்ட
அறைகளில் தனியே
தொடங்குகிறது
அவளது விளையாட்டு

பெண்ணடிமைத்தனம்
போதிக்கும்
சமையல் பாத்திரங்கள் மட்டுமே
மாதிரி விளையாட்டு
சாமான்களாய்
அவளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன

நாள் பூராவும்
யாருமற்ற தனிமையில்
சோறு பொங்கிவிட்டதாகவும்
சாம்பார் வைத்துவிட்டதாகவும்
சொல்லிக்கொண்டு
இல்லாத யார்யாருக்கோ
பரிமாறி விளையாடுகிறாள் அவள்

அவ்வப்போது வரும்
ஆச்சிகளோ, தாதிகளோ
ஆடைமாற்றி
உணவு திணித்து போகிறார்கள்
அவளது  விளையாட்டூடே

அவள் நண்பர்கள்
யார் யாரெனக் கேட்கையில்
சொல்கிற ஹைடியும்
சோட்டா பீனும்
கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் என
நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம்

அம்மா யாரென்பதிலும்
அப்பாவுக்கும் மாமாவுக்குமான
அடிப்படை வேறுபாடுகளிலும்
அவளுக்கு
அவ்வப்போது ஏற்படும்
அத்தனை குழப்பம்

சுவற்றுப் பல்லிகளும்
கரப்பான் பூச்சிகளும்
சுதந்திரமாய் சுற்றித்திரியும்
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
பெற்றவர்கள்
பீட்சாவோடு வருகையில்
அவை ஓடி மறைகின்றன

அவள் அழத்தொடங்குகிறாள்.    

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்