நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும்
நண்பேன்டா நண்பர்கள் பாக்கியராஜும், உய்க்காட்டானும் :-
இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கும் சுகா வின் "ராயல் டாக்கீஸ்" ன் பாதிப்புதான் இந்த பதிவிற்கு பாதி காரணம். மீதி காரணம் நான் நெல்லைக்கு இந்தமுறை சென்றிருந்தபோது எனது நண்பர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள் தந்த புரிதல்கள்.
கி.பி.2000 ம் ஆண்டு! நான் எனது பள்ளிக்கல்வியினை முடித்துவிட்டு எடுத்த 780 சொச்சம் மார்க்குக்கு எதாவது கல்லூரியில் சீட்டு கிடைக்குமா? இல்லாவிட்டால் என்ன செய்ய என்ற பயத்தில் பேட்டை ஐ.டி.ஐ ல் எல்லாம் விண்ணப்பம் போட்டு வைத்த பொழுது. கல்லூரி இளங்கலை படிப்புகளை குறித்து ஒரு இழவும் தெரியாது. +2 ல இயற்பியல் 2 புத்தகம் படிப்பதற்கே நாக்கு தள்ளுதே, எப்படி மூணு வருஷம் இயற்பியல மட்டும் படிக்கமுடியும் என்று சிந்தித்த! தருணங்களெல்லாம் உண்டு. அவ்வளவு அறிவாளி நான். இந்த சிந்தனைகளை எல்லாம் கலைத்து, எனக்கு இளங்கலை விலங்கியலில் சேர அழைப்பு வந்துவிட்டது. என்னைப்போன்ற O.C மாணவர்களுக்கு மொத்தம் 7 இடங்கள், விலங்கியல் பிரிவில், அதில் எவனோ புண்ணியவான் சேராமல் போய் எனக்கு சீட்டு குடுத்திருந்தார்கள். விதி வலியது!. நான் எல்லா பிரிவுகளிலும் விண்ணப்பித்திருந்தேன். ( நமக்குத்தான் எதுவும் வராதே / எது வருமுன்னு தெரியாது ). விலங்கியலில் சேர்ந்த கொஞ்ச நாளில் இயற்பியலுக்கும் அழைப்பு வந்தது. ( அங்கேயும் நிறைய புண்ணியவான்கள் சேரவில்லை போலிருக்கிறது! ). என்னுடைய நிறைய பள்ளி நண்பர்கள் இயற்பியலில் சேர்ந்திருந்தனர். நானும் போராடி முயன்று பார்த்தேன். அப்போதைய கல்லூரி முதல்வர் அய்யா.C.N. சிதம்பரநாதன் விலங்கியலில் இருந்து இயற்பியல் இளங்கலைக்கு மாற்ற முடியவே முடியாது என்று சொல்லியதால் வேறு வழியின்றி விலங்கியல் படித்தேன்.
முதல்நாள், முதல் வகுப்பு, தாவரவியல் ஆய்வுக்கூடத்தில் ஆரம்பித்தது. அங்குதான் "கல்லூரி வாசலில் கால்பதிக்கும் எனக்கு இன்று முதல் நாள்" எனத்தொடங்கும் என் முதல் கல்லூரிக் கவிதையை எழுதினேன். சங்கரலிங்கங்களும், நந்தகோபால்களும் தங்கள் அறிமுகங்களை அதிக மதிப்பெண்கள் பெற்றதாய் சொல்லுகையில், இங்கேயும் நாம் முதல் மதிப்பெண் பெறுவது அம்பேல்தான் என்று எண்ணிக்கொண்டேன். அன்று எனக்கு தெரியாது இந்த பாக்கியராஜும், உய்க்காட்டானும் எனது நிரந்த நண்பர்கள் ஆவார்கள் என்று.
விருப்பமில்லாது விலங்கியலில் சேர்ந்ததால் முதல் வருடம் பிடிப்பேயில்லாது கழிந்துபோனது. புதிய நண்பர்களுடன் நான் சேரவேயில்லை. தனித்து வருவதும், போவதுமாய் தான் கழிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் ஓட்டத் தொடங்குகையில் இரெண்டாவது வருடமும் முடிந்து போனது. மூன்றாம் வருடத்தில் எல்லோருடனும் சகஜமாக பழகத் தொடங்கினேன், படிக்கவும் தொடங்கினேன் தீவிரமாக. நான் விரும்பி அதிகம் படித்தது அந்த ஒன்றரை வருடங்கள்தான். பாக்கியராஜும், உய்க்காட்டனும் எல்லா நண்பர்கள் போல்தான் இருந்தார்கள். எனக்கு தனிப்பட்ட அளவில் நெருங்கிய நண்பர்கள் என யாரும் இல்லை. மூன்று வருட கல்லூரி வாழ்வில் ஒரேயோடு சினிமாவிற்கு இறுதி நாள் வகுப்பிற்கு பிறகு நண்பர்களோடு சென்றேன். தென்மலை பிரேதசத்திற்க்கு ஒரு சின்ன சுற்றுலா சென்றிருக்கிறேன். இவர்கள் இருவரும் இந்த இரு நிகழ்வுகளிலும் உடனிருந்தார்கள். அதன்பிறகு சிலகாலம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கல்லூரி நண்பர்களோடு பெரிய தொடர்பில்லை. பின்பு சில பல புரிதல்களுக்கு பிறகு தொடர்புகளை புதுப்பிக்கத் தொடங்கினேன். அப்போது நான் முதலில் தொடர்பு கொண்டது இந்த இருவரையுந்தான். இவர்கள் மூலமாக மேலும் சில நண்பர்களை தொடர்புகொள்ள முடிந்தது. இதில் இந்த இருவருடன் மட்டுமே கடந்த 7 வருடங்களாக ஒரு நீடித்த ஆத்மார்த்தமான நட்பை உணரமுடிவதே இவர்கள் இருவரையும் பற்றி எழுதக் காரணம். இவர்கள் இருவருக்கும் இன்னொரு பொதுப்பண்பு, மாற்றமின்றி கடந்த 11 வருடங்களாக இருப்பது. என்னை பழைய நானாக பார்ப்பது எனது நண்பர்கள் வட்டத்தில் இந்த இருவர் மட்டுந்தான். மிக எளிமையான, சுய கௌரவம் பார்க்காத, தங்களின் மேன்மைகளை பற்றி பெரிதாக உணராத, அலட்டிக்கொள்ளாத ஒரு பரிசுத்த நண்பர்கள் என்று சொல்வேன். நட்போடு தனது வருமானத்தை, வசதிகளை, வாழ்க்கை முறைகளை ஒப்பிட்டு, வேண்டா வெறுப்பாக தாழ்வு, உயர்வு மனப்பாங்கில் பழகுகிற எத்தனையோ சராசரி நண்பர்கள் மாதிரி இவர்கள் இருவருமேயில்லை என்பது இவர்கள் படைப்பில் நான் வியக்கும் ரகசியம். இருவருக்கும் என்னிடத்தில் போலியாக சிரிக்கக் கூடத் தெரியாது. என்னை இதுவரை மனம் வருந்தும் படி பெரிதாக பேசியதோ, நடந்ததோ கூடக் கிடையாது சூழ்நிலைகள் இருந்தும். நான் அவ்வாறான நல்லவன் அல்ல. கடந்த ஏழு வருடங்களாக எப்போது நெல்லைக்கு சென்றாலும் இவர்களை பார்க்காமல் நான் திரும்புவதே இல்லை. நட்பில் தாய்மை என்று ஓன்று ஒளிருவதை நான் இவர்கள் இருவரிடத்தில் பார்த்திருக்கிறேன்.
பெருநகரத்துக்கு வேலை நிமித்தமாக வந்த பிறகு இழக்கிற மிகப்பெரிய இழப்பு உண்மையான மனிதர்களின்அருகாமை. நகரங்கள் அழுக்குகளால் அசுத்தமாவதைப் போல, நகரத்து மனிதர்களையும் அவசரத்தின்பால் அசுத்தமாக்கிவிடுகிறது என எண்ணுகிறேன். கடந்த ஏழு வருடத்தில் இவர்கள் இருவர் போல் நான் இங்கே இன்னும் ஒருவரையும் சம்பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. சம்பாதிக்க முடியுமென்ற நம்பிக்கையுமில்லை. நகரத்து மனிதர்கள், கையில் ஊற்றினாலும் ஒட்டாத தண்ணீர் போன்றவர்களாக எனக்குத் தெரிகிறார்கள். நம்மூர் மனிதர்கள் எண்ணெய் மாதிரி கையில் ஊற்றாவிட்டாலும் காய்ந்து போவதேயில்லை. திருவிழாக் கூட்டம் மாதிரி சேர்கிறார்கள், திருவிழா முடிந்ததும் கலைகிற மாதிரி கலைந்தும் போய்விடுகிறார்கள் நகரத்தில். இங்கே எல்லோருக்கும் ஒரு தனித்த கனவு, காதல்,தேடல் இருக்கிறது. இன்றும் பாக்கியராஜோ, உய்க்காட்டானோ தனிப்பட்ட கனவில்லாதவர்களாக, தேடல் இல்லாதவர்களாக, காதல் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், இன்னும் இருப்பார்கள். நதியின் ஓட்டத்தில் விழுந்து அதனூடே ஓடுகின்ற எளிய இலையாகத்தான் இவர்களின் வாழ்வு என் பார்வையில் இருக்கிறது. அதனால் தான் அவர்களால் எல்லா உறவையும் ,நட்பையும் வாழ்தலையும் வாழ்ந்து கொண்டாடமுடிகிறது கனவுகளின் பின்னே ஓடுகின்ற நம்போலன்றி. எனக்கு பிடிக்காத எல்லா விசயங்களையும் இவர்களோடு சேர்ந்து செய்யும்போது பிடித்து போய்விடுதலே, இவர்களை இவர்களது நட்பினை எனக்கு உணரச் செய்திருக்கிறது.
இந்த பதிவினை என்னை என் இயல்போடு ஏற்றுக்கொண்டு எளியவனாக என்னை என்றும் பார்க்கும், பழகும் எனது நண்பர்கள் பாக்கியராஜுக்கும், உய்காட்டனுக்கும் செய்யும் சிறு நன்றியாகத்தான் பார்க்கிறேன்.
Comments
Post a Comment