காவியத்தலைவன் ( 2014 ) - எனது பார்வை :-
எழுத்தாளர் ஜெயமோகனும், இயக்குனர் வசந்தபாலனும் பழைய தமிழ் நாடகப் பள்ளிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது ஜெயமோகன் பரிந்துரைத்த "எனது நாடக வாழ்க்கை" என்ற மறைந்த அவ்வை சண்முகம் அவர்களின் சுயசரிதத்தைப் வசந்தபாலன் படித்து அந்த நூலின் உதவியோடு இருவரும் இணைந்து எழுதிய கதை இந்த காவியத்தலைவன் படக்கதை. சங்கராபரணம், சலங்கை ஒலி போன்ற பழைய இசை நாடகங்களை முன்மாதிரியாகவும் கொண்டு இயக்குனர் இந்த கதைக்களத்தினை அமைத்துள்ளார்.
கதைக்களம், 20ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து தொடங்கி சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் நிறைவுறுகிறது. தவத்திரு சிவதாஸ் சுவாமிகள் ( நாசர் ) ஸ்ரீ பால சண்முகானாந்தா என்ற நாடகக் குழுவினை நடத்திவருகிறார். இளவயதில் நாடகக் குழுவில் சேர்த்து விடப்படும் கோமதிநாயகம் ( பிரிதிவிராஜ்), பிறகு அவர் கண்டு சேர்க்கும் ஆதரவற்றச் சிறுவன் காளி (சித்தார்த்), இருவரும் முன்னணி வேஷங்கள் கட்ட நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்தக் குழுவில் தாயுடன் வந்து சேரும் வடிவு (வேதிகா), இளவரசி (அனய்கா), கொடுவாய் (தம்பி ராமையா), பைரவன் (பொன்வண்ணன்), சிங்கம்புலி, மன்சூர் அலிகான் என தொடர்கின்ற கதையும், இந்த கதாப்பாத்திரங்களூடே நடக்கும் சம்பவங்களுமே கதை.
இந்தமாதிரி ஒரு கதைக்களத்தினை தைரியமாக தேர்ந்தெடுத்தமைக்காகவே இந்தப் படத்தினைப் பார்க்கலாம். இன்றைய சினிமா வடிவத்தின் முன்னோடிக் கலையான நாடகக் கலையினை பற்றி பெரிய அறிமுகங்கள் இல்லாத இன்றைய தலைமுறைக்கு இந்தப்படம் கொஞ்சம் நவீன சினிமாவிற்கு முந்தைய வரலாறை தெரிந்துகொள்ள உதவும். நாடகக் கலையின் அமைப்பு, வேஷங்கட்டுதல், வசனங்களை மனனம் செய்து பயிற்சிகள் செய்து அரங்கேற்றுதல் போன்றவற்றை காட்சிப்படுத்தியதன் மூலம் இன்றிய சினிமாவின் முன்னோடிகளின் வரலாறு அத்தகைய எளிதில்லை என்பதையும் இந்ததலைமுறையினர் விளங்கிக்கொள்ள இந்தப்படம் வழிவகுத்திருக்கிறது. நடிப்பில் எனக்கென்னவோ, ப்ரித்விராஜூம்,வேதிகாவும், பின்னரே சித்தார்த்தும் இருப்பதாகப் புலப்படுகிறது. தம்பி ராமையா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூரலிகான் ஆகியோர் மிக நன்றாக நடித்துள்ளனர்.
இசை ரகுமான். பெரிய பலம். பாடல்களும், பின்னணி இசையும் படத்தை இன்னும் ஒன்றிப்பார்க்கச் செய்கின்றன. அலங்காரங்கள் (மேக்கப்) கதைக்கு மிகப்பொருந்தி போகிறது. நாடகக் ஒப்பனைக் கலைஞர்களைக் தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார்கள். கலையும் (ஆர்ட் டைரக்சன்) நன்றாக இருக்கிறது.
முக்கிய கதாப்பாத்திரங்களின் (சித்தார்த், ப்ரித்விராஜ்) நடிப்பினை பிரதிபலிக்க நிறைய இடங்களில் வாய்ப்பிருந்தும் அதை முழுதாகப் பயன்படுத்திய மாதிரி தெரியவில்லை. வசனங்கள் பழைய நாட்களை அவ்வளவாய் நினைவுபடுத்தியதாய் தெரியவில்லை. இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஆர்ட் டைரக்சன் கூட இன்னும் நன்றாகப் பண்ணியிருக்கலாமோ என்று தோன்றியது. சித்தார்த்தும், ப்ரித்விராஜும், வேதிகாவும் முற்றிலுமாக தோற்றத்தில் பொருந்திய மாதிரித் தெரியவில்லை ( அந்தக் கால நாடகக் கலைஞர்கள் இவ்வளவு உடற் செழிப்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, நல்ல பணக்கார உடல்வாகு சித்தார்த்துக்கும், ப்ரித்விராஜுக்கும்). சித்தார்த் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். ( அவருக்கு இது பெஸ்ட், ஆனா அந்த கேரக்டருக்கு? அனேகமாக சினிமாவின் வியாபாரத் தன்மைக்காக வசந்தபாலன் நிறைய இடங்களை தெரிந்தே இடத்தை விட்டுக்கொடுத்திருப்பார் என நம்புகிறேன் ) காமெடிக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால் நிறைய காமெடி காட்சிகள் இல்லை. வசந்தபாலனின் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் இந்த படத்தை பெஸ்ட் எனச் சொல்ல முடியாவிட்டாலும், இதன் தனித்தன்மைக்காகவும், இயக்குனரின் எண்ண ஓட்டத்துக்காகவும் இதை பெஸ்ட் என்று சொல்லலாம்.
கண்டிப்பாக அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம். முக்கியமாக இன்றைய இளைய தலைமுறையினர் சினிமாவின் முந்தைய கடின, காவிய நாடக வரலாற்றை அறிந்துகொள்ள, நாடகத்தையே உயிராகக் கருதி, நாடகக் கலையினை வாழ்வித்து, இன்றைய நவீன சினிமாவிற்கு வித்திட்டு, தங்களது வாழ்க்கையைப் போராட்டங்களோடு வாழ்ந்து முடித்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற பழம்பெரும் நாடகக் கலைஞர்களின் நினைவுகளுக்காகவேணும் இந்தப் படத்தின் சிறு குறைகளைத் தள்ளிவைத்து விட்டு கண்டிப்பாகப் பார்க்கலாம்.
Comments
Post a Comment