வீடு வாங்கியாச்சா?? கார் வாங்கியாச்சா??

வீடு வாங்கியாச்சா?? கார் வாங்கியாச்சா?? :-

   

     கிராமங்களில் பிறந்து வளர்ந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை நிமித்தமாக வாழ்ந்துகொண்டிருக்கும் என்னைப் போன்ற, இந்த நகரம் தற்காலிகமா இல்லை நிரந்தரமா எனக் குழப்பத்தில் இருக்கும் பெருநகரவாசிகள் அனைவருக்கும் இந்த பதிவுகள் சமர்ப்பணம்!!!

     திருமணம் ஆகியாச்சா? குழந்தை எப்போ? என்பதற்கு அடுத்து பெரும்பாலும் திருமணமானவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் அப்புறம் எப்போ வீடு, கார் எல்லாம் வாங்கப்போரே? என்பதுதான். வீடு, வாகனங்கள் வாங்குதல் என்பது தனிநபர் ஆர்வம் சார்ந்தவொன்று என்ற பிரஞ்கை அற்று திரிகின்ற வெற்றுமனிதர்களின் கேள்விகள் இவை என்றாலும், இவை இன்று ஏற்படுத்தியிருக்கின்ற சமூக பொருளாதார மாற்றங்கள் ஆரோக்கியமானவையல்ல என்பதாலும் இந்தப் பதிவு அவசியமாகிறது.  

     முதலில் இந்த வீடு குறித்து பார்ப்போம். ஆதிகால மனிதனின் நாடோடி வாழ்க்கைமுறை பரிணாம வளர்ச்சி பெற்று  ஆற்றங்கரையோரங்களில் நிரந்தரமாக தங்கி தங்கள் வாழ்வை மேற்க்கொள்ள எத்தனித்தபோது, இயற்கை பேரிடர்களான இடி, மின்னல், புயல், வெள்ளம், மற்றும் காட்டு விலங்குகள் போன்றவற்றிலிருந்து தன்னை, தன்னை சார்ந்தவர்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு பாதுகாப்பான மறைவிடம், வசிப்பிடம் தேவைப்பட்டது. அதற்காக முதலில் குகைகளைப் பயன்படுத்திய மனிதன் பின்பு நாகரிக வளர்ச்சியின் காரணமாக வீடுகளை கட்டிக்கொண்டு வாழ ஆரம்பித்தான். அடிப்படியில் வீடு என்பது தேவையின்பால் உருவான ஒரு நாகரிக குறியீடு. இப்படி நாம் நமது ஆதிப்பரம்பரையின் வரலாற்றை ஒழுங்காகத் தெரிந்து கொண்டோமேயானால் நமது வாழ்வும் அது சார்ந்த நாகரிக, கலாச்சார வளர்ச்சிகளும் தேவையின் பொருட்டே தோன்றியவை என்பது விளங்கும். (Necessity is the mother of all Inventions). அபிலாசைகளின் பொருட்டு அல்ல.  

     கிராமப் பின்னணியில் பிறந்து, வளர்ந்து வந்த அனைவருக்கும் ஓன்று தெளிவாகப் புரியும். கடந்த தலைமுறைகள் வரை, கிராமங்களில் அவ்வளவாக புதிதாக வீடுகள் கட்டப்பட்டதில்லை. தொன்றுதொட்டு பரம்பரை வீடுகளில் கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருவர் மக்கள் அனைவரும். கூட்டுக் குடும்பக் காலச்சாரம் குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு பெரிய வீடு இருக்கும். அதை தொடர்ந்து பராமரித்து, தேவைப்படின் அதையொட்டி சில புதிய கட்டுமானங்களைச் செய்து கொண்டு இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் இந்த புதிய வீடுகள் கட்டுதல் குறைவு. எனது தந்தையையோ, அவரது தகப்பனாரையோ யாராவது வீடு வாங்கியாச்சா / கட்டியாச்சா என்று கேட்டதாக நினைவில்லை. ஏனெனில் அந்த தேவை அவர்களுக்கு இல்லை என்பதே இங்கே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

     இன்று வங்கிகளின் திட்டமிட்ட வீட்டுக்கடன் கொள்கையாலும், மக்களின் அபரிமித தேவையை மிஞ்சிய ஆசையினாலும், சில பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வியாபர தந்திரங்களாலும்  எல்லோரும் தனக்கு தேவையான ஒரு அறைக்கு பதில் வீடுகளாக கட்டிக்கொள்ள ஆரம்பித்ததின் தனிநபர் விளைவுகள் என்ன, சமுதாய விளைவுகள் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். (உதாரணங்கள் குறித்து தனியே ஒரு பதிவே எழுதலாம்.) வீட்டுக்கடன் என்ற பெயரில் நிலையற்ற இந்த பொருளாதார சூழ்நிலையில் வாழ்வை அடகு வைப்பதோ, மன அழுத்தம் பிடித்து அலைவதோ அவசியமா எனக் கேட்க விரும்புகிறேன் இந்த தலைப்பு கேள்விகளைத் தொடுப்போரிடம். நான் சில வருடங்கள் நாகர்கோவிலில் பணிபுரிந்தேன் அப்போது அந்த ஊரின் வசதி வாய்ப்புகளைப் பார்த்துவிட்டு அங்கே குடியேறிவிடலாம் என்று தோன்றியது உண்மை. ஆனால் செய்யவில்லை. சென்னையில் கடந்த ஏழு வருடங்களாக இருக்கிறேன். தொடர்ந்து இருப்பேனா என்று நிச்சயமாகத் தெரியாது.என் நிரந்தர வசிப்பிடம் குறித்த நிச்சயமின்மை தொடரும்போது எப்படி நிரந்தரமாக தலையினை   அடமானம் வைத்து வீடு வாங்குவது?, பிறகு அதை யாருக்கோ விட்டு விட்டு ஓடுவது?.

     கிராமத்தில் நான்கு தலைமுறைகளாக நாங்கள் வசித்து வந்த வீட்டில் இன்று யாரும் இல்லை. வயதான எனது அத்தை மட்டுமே இருக்கிறார். அந்த வீட்டின் ஆண்டு பராமரிப்பு செலவே சமாளிக்கமுடியாத அளவு உள்ளது. இதேபோல் எனது தாயார் வீட்டில் மூன்று வீடுகள் உள்ளன. அதில் இரண்டு பாழடைந்து போய்விட்டன. பூர்விக அருமை கருதி, விழுமியம் கருதி அதை முடிந்த வரை பராமரித்து வருகிறோம். இப்படி இருவர் இருக்க இரெண்டு வீடு, இருவர் நால்வர் ஆகையில் மேலும் நான்கு இடங்களில் நான்கு வீடு என்று போய்க்கொண்டிருந்தால் வாழ்வது எங்கனம். வீடுகளை கட்டி வெளியில் பெருமை தம்பட்டம் அடித்துக்கொண்டு, வங்கிக்காரனிடம் கையேந்தி நிற்பதற்காக நாம் இங்கு வரவில்லை.

     அதற்காக வீடு வாங்குவதையோ, கட்டுவதையோ நான் தவறு என்கவில்லை. வீடு என்பது தெரிந்தோ, தெரியாமலோ நமக்கு உணர்வு ( Emotional ) சார்ந்த நிலையிலிருக்கும் விஷயமாக உள்ளது. அப்படியிருக்க வேலை ஓரிடத்திலும், வீடு எங்கோ தொலைதூரத்திலும் கட்டி குடியேறி, நிச்சயமற்ற இந்த சமூகப் பொருளாதார சூழ்நிலையில் தற்காலிக தம்பட்டத்திற்க்கோ , இல்லை முறையற்ற திட்டமிடுதலற்ற சூழ்நிலையில் மாட்டிக்கொள்வதை விட, சொந்த வீடு என்கிற பொறியில் சிக்காமலிருப்பதே இப்போதைக்கு உத்தமம். மேற்க்கண்டவை கார் வாங்குதலுக்கும் பொருந்தும் என்பதால் அது குறித்து விரிவாக எழுதவில்லை.

     வாழ்தலென்பது வாழ்தலில் மட்டுமே இருக்கிறது, புதிதாக வீடு கட்டுவதிலும், கார் வாங்குவதிலும் அல்ல. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔