எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடன் சில நிமிடங்கள்
நேற்று சென்னை, கே.கே. நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் - ல் நடைபெற்ற "படி" விருதுகள் வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தேன் எனது மனைவியுடன். எழுத்தாளர் எஸ்.ரா தலைமையுரையினை கேட்கவேண்டி சென்றிருந்தோம்.
எஸ்.ரா. பற்றி நான் சொல்லுவதற்கு எதுவுமில்லை. இருந்தபோதிலும், தமிழ் இலக்கிய உலகினை பற்றி அவ்வளவாகத் தெரியாத, வாசிப்பதை மறந்து போய், துறந்து போய், கணிப்பொறிகளுக்குள்ளும், தொலைக்காட்சிகளுக்குள்ளும் முற்றுலுமாக மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் எனது சில, பல நண்பர்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில் அவரை பற்றி சில வார்த்தைகள். எஸ்.ரா அவரது எழுத்துக்களை ஆனந்த விகடன் மூலமாகத்தான் முதலில் படிக்க நேர்ந்தது. அவரது எழுத்துகளின் மீது பெருங்காதல் கொண்டு அவரது தேசாந்திரி, சிறிது வெளிச்சம் போன்ற விகடன் பிரசுர புத்தகங்களை படித்து அவரின் ரசிகனானேன். அவர் விருதுநகர் அருகிலுள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர் என்பதுவும், கோவில்பட்டியில்தான் அவரது அம்மா தாத்தா வீடு என்பதும் தெரிந்தபொழுது இன்னும் அருகில் இணக்கமாகத் தெரிந்தார். எஸ்.ரா வைப்பற்றி எனது நண்பர்களான, வசந்தியும், சக்தியும் முன்பே கூறிய பின்னுட்டங்கள் என்னைப்போலவே நிறைய பேர் அவரது எழுத்துக்களை ரசிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உதவியது. நான் இன்னும் அவரது பல நூட்களை, நாவல்களை படிக்கவில்லை என்ற போதும், உயிர்மை மாத இதழில் அவரது கட்டுரைகளையும், சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். புகைப்படவியல் பற்றி அவரது பேச்சினை சென்ற ஆண்டு கேட்க நேர்ந்தது. அது புகைப்படவியலின் நுணுக்கங்கள் பற்றி பல தள புரிதல்களை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கிய உலகில் எஸ்.ரா வின் எழுத்துகளை வாசிக்க மறந்த அனைவரும் வாழ்வினை புரிந்து கொள்ளும் கலையை, சூத்திரத்தை தெரியாது போவர் என்று நான் நிச்சயமாக சொல்லுவேன்.
நேற்றைய நிகழ்வில் எஸ்.ரா அவர்களின் உரை அவரது எழுத்துகளைப் போலவே நெருக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், எளிமையாகவும் இருந்தது. அது சிறந்த வாசகர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வாகையால், ஒரு வாசகராக தனது அனுபவங்களை, வாசகர் குறித்த புரிதல்களை சில மேற்கொள்கள் காட்டி பேசினார். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் படித்துவிட்டு சில நண்பர்களோடு கோவில்பட்டியிலிருந்து நாகர்கோவில் சென்று அவர் சுந்தரராமசாமியை சந்தித்த நிகழ்வினைப் பற்றிக்கூறி, இன்று அத்தகைய வாசகர்கள் இல்லையெனவும் அங்கலாய்த்தார். சக மனிதன் மீது நம்பிக்கை குறைந்திருக்கிற சமுகமாக நாம் மாறியிருக்கிறோம் என்ற உண்மையை அவர் உரைத்தபோது எனக்குள் மிகப்பெரிய ஒப்புதலை, அதிர்வை ஏற்படுத்தியது அந்த வாசகம். வாசித்தல் மனிதனை, சிந்தனைகளை, பார்வைகளை முடிவில் வாழ்வின் போக்குதனை எவ்வாறு மாற்றும் என்று அவர் கூறியபோது நான் மெய்மறந்து அவரது பேச்சினை கவனித்துக் கொண்டிருந்தேன்.
விழா நிறைவுற்றதும், அவரோடு சில நிமிடங்கள் பேச எத்தனித்து அறிமுகப்படுத்திகொண்டேன். எனது தயக்கத்தை உடைக்கும் விதமாக வெகு நாட்கள் பழகிய நண்பரோடு பேசுவதுபோல் பேசினார். புகைப்படங்கள் குறித்தும், எழுத்து குறித்தும், கிராமங்கள் குறித்தும் அந்த சில நிமிடங்களில் அவர் கூறியவை அனைத்துமே பல புத்தகங்களை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். புகைப்படங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நாம் புகைப்படங்களை, சிற்பங்களை இன்னும் பிற கலைவடிவங்களை எப்படி தெரிந்து புரிந்து கொள்வது எனக் கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொன்னார். முறையற்ற அறிவின்மை, ஆர்வமின்மையாக மாறி கலைமீதான நமது ஈடுபாட்டைக் குறைப்பதையும், அதன் பொருட்டு நிறைய கலைவடிவங்கள், வாசித்தல் உட்பட அருகி வருவதையும் அவர் கூற நான் உணர்ந்துகொண்டேன். நாம் சொல்லும் எந்த வார்த்தைகள் குறித்தும் அவரிடம் நிரம்ப தகவல்கள், செய்திகள் பார்வைகள் இருக்கின்றன என்பதை அவரோடு பேசிய சில நிமிடங்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் கூறிய பல எழுத்தாளர்கள், புகைப்பட வல்லுனர்களின் பெயர்கள் எனக்கு பரிட்சையமில்லாததாக இருந்த பொழுதிலும், இன்னும் வாசிக்க வேண்டும், நிரம்பத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினை மேலும் எனக்குள் ஆழமாக ஏற்படுத்தின. இந்த சந்திப்பு நிச்சயமாக ஒரு மறக்க முடியாத சந்திப்பு.
எஸ்.ரா. எனும் எழுத்துலகின் மாபெரும் ஆளுமையைப் பற்றித் தெரிந்துகொள்ள அவரது இணையதள முகவரியைச் சுட்டுங்கள். http://www.sramakrishnan.com/
Comments
Post a Comment