வேர்களோடு தொடர்பு அவசியமா ??

வேர்களோடு தொடர்பு அவசியமா ??:-



     நம் எல்லோருக்குமே தெரிந்த எளிய அறிவியல் உண்மைதான். செடியோ. கொடியோ, மரமோ எல்லாம் அழகாய் ஆரோக்கியமாய் பூமிக்கு மேலே காட்சியளிக்க தரைக்குள், பூமிக்குள் மறைந்து கிடக்கின்ற அந்த சிறிதும் பெரிதுமான வேர்கள் அவசியம். யாரோ சொன்னதுபோல " தாஜ்மஹாலின் வியக்கவைக்கிற உண்மை அழகு என்பது விழிக்கு தெரிகின்ற வெள்ளை சலவைக்கல்களில் மட்டுமல்ல, விழிக்குத் தெரியாது அந்த வெள்ளை சலவைக்கல்களைத் தாங்கி நிற்கும் அந்த அஸ்திவார அழுக்கு கருங்கற்களில்தான் அதிகம் இருக்கிறது" ( The real beauty of Taj Mahal is not just lies on the white marbles on the above but on the dirty black stones which is on it's below as basement ). இந்த வாசகம் மிக எளிதாக வேர்களின் அவசியத்தை, அவற்றின் தொடர்பின் அவசியத்தை ஒரு பரிணாமத்தில் சொல்கிறது.  

      வரலாற்றை புரட்டிப் பார்க்கையிலும் இந்த உண்மை புலப்படும். தனது வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்வியலை, தனித்தன்மையை ஒவ்வொரு நாகரிகமும், சமூகமும் தொடர்ந்து வேர்களின் வீரியத்தை உணர்ந்து புரிந்து கொண்டு தொடர்ந்தமையால் வளர்ந்து செழிப்பதுவும், இல்லையெனில் படிப்படியாக வீழ்ந்து படிமமாக, அடையாளங்களைத் தொலைத்துப் பாடப்புத்தகங்களில் மட்டும் தங்கிப்போவதும் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. 

     உதாரணமாக இன்றைய சீனர்களையும், ஜப்பானியர்களையும் எடுத்துக்கொள்ளலாம். இந்த இரு நாடுகளிலும் அவர்களுடைய கலாச்சார, மொழி சார்பின்றி ஒரு பயணியாக கூட சென்று வருவது கடினம். ஆனால் நமது நாட்டில் அந்த அளவிற்கு ஒரு சார்பு அவசியமில்லை. குறைந்தபட்சம் ஒரு அரைகுறை ஆங்கிலத்தை வைத்து இந்தியாவின் எந்தப் பகுதியிலும் 
கொஞ்சகாலம் ஒட்டிவிட முடியும். இது மேற்சொன்ன இருநாடுகளிலும் நாம் நாடு அளவிற்கு சாத்தியமில்லை.

   பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த எல்லா நாடுகளிலும் அவர்கள் மிகவும் எதிர்கால சிந்தனையோடு தங்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை விதைத்து தவிர்க்க முடியாத அளவிற்கு ஊன்றிச் சென்றுள்ளமை புலப்படும். இன்றும் ஆங்கிலம் இங்குள்ள தாய்மொழிகளையும் தாண்டி வீரியப்பட்டுள்ளமை விளக்கும் அதை. நாம் ஜீன்ஸ் ம், டி-சர்ட்டும் அணிந்துகொண்டு நவீன வாகனங்களில் செல்வதும், பீட்சாவையும், இதர குளிர்பானங்களையும் தவிர்க்க இயலாது சார்ந்திருப்பதுவும் அவர்களுடைய அன்றைய தெளிவான திட்டமிடல்தான். தமிழ்நாடு என்பது தமிழர்களால், ஏன் இன்னும் ஆழமாக போனால் அன்று மொழிவாரி மாநிலப் பிரிப்புக்கு முன் தமிழ்தான் மாகாணமொழி. நம்மிலிருந்து பிரிந்தவையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள். பிரிந்தவர்களுக்கு இருக்கின்ற குறைந்தபட்ச விழுமியப் புரிதல் கூட தமிழர்களாகிய நமக்கு இல்லை என்பதன் உயர்ந்தபட்ச அடையாளந்தான் தமிழ் மொழி சரியாக பேச, எழுத தெரியாத தமிழின் தொன்மை உணராத, தாய்மொழி அவசியமில்லை என்று வாதிடுகின்ற இன்றைய பெரும்பான்மை இளைய சமூகம். இப்படியே போனால் " தமிழர் என்றோர் இனமுண்டு, தன்னைத் தானே அழிக்கிற குணமும் உண்டு" என்று சொலவடையாக எதிர் கால விழுமியம் மறந்த தமிழ் சமூகமே கற்க வாய்ப்புண்டு.

     மற்ற கலாச்சாரங்களை, பண்பாடுகளை தெரிந்து கொள்வதோ, அவற்றிலிருந்து நன்மை பயப்பவற்றை எடுத்து வாழ்வியலை மேம்படுத்திக் கொள்வது வரவேற்க்கத் தக்கது என்ற போதும், அவை நமது விழுமியத்தை, வேர்களைஅழிக்காது அவற்றை செய்தல் நலம். 

     கீழ்க்கண்ட சில விழுமியம் காக்கும் செயல்களை நாம் செய்யலாம் என்று நான் எண்ணுகிறேன்.

1.     உங்கள் பூர்வீகத்தோடு தொடர்பிலிருங்கள். நீங்கள் பிறந்து வளர்ந்த, உங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் சின்னங்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்வதோ, தொடர்பின்றி விட்டு வருவதோ, தொலைத்து விடுதலோ வேண்டாம். உங்கள் கிளைகளை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பரப்பிக்கொள்ளுங்கள். வேர்கள் உங்கள் ஊரில், கிராமத்தில், ஓடைகளில், வயல்வெளிகளில், காடுகளில், மலைகளில் இருந்துவிட்டு போகட்டும்.          

2.     அவரவர் தனது வாழ்வை பதிவுசெய்ய ஆரம்பியுங்கள். அதை பாதுகாத்தும் வாருங்கள். குறைந்த பட்சமாக ஒரு தினக்குறிப்பு எழுதுதலோ, புகைப்படங்களாக இல்லை ஏதேனும் ஒரு உங்களுக்கு உகந்த வழியில் அதை செய்து கொள்ளுங்கள். இன்று சாதாரணமாகத் தெரியும் உங்களுடைய எத்தகைய செயலும் உங்கள் வருங்கால சந்ததிக்கு பொக்கிஷமாகத் திகழும். பல எதிர்கால நன்மைகளுக்கு இந்த நீங்கள் பதிவு செய்யும் வரலாறு உதவும். ( என்னுடை தனிப்பட்ட சில குணாதிசயங்கள் குறித்து நான் இந்த பின்னோக்கி தேடலை தேடிப்போகையில், என்னுடைய மூதாதையரை குறித்து தெரிந்து கொள்கையில், அத்தேடல் எனக்கு என்னைப்  பற்றி இன்னும் சிறப்பாகத், தெளிவாக அறிந்துகொள்ள உதவியது. நமது செல்களின் நினைவுக்குறிப்பில் நமக்கு முந்தைய ஏழு தலைமுறைகளின் நியாபகப் பதிவு உள்ளது என்பதை மரபியல் (Genetic Science) நிருபித்துள்ளது. நமது ஊர்களில் " நீ பண்ணுன பாவ,புண்ணியம் ஏழேழு தலைமுறைக்கும் வருண்டே " என்று சொல்லும் சொலவடையின் பின்னணி இது தான்).

3.      உங்கள் தலைமுறைக்கு உங்கள் வேர்கள் தொடர்பான தகவல்களை சொல்லியவண்ணம் இருங்கள். நீங்கள் வாழ்ந்த பகுதிக்கு சுற்றுலா மாதிரி அழைத்துச் செல்லுதல், உங்கள் பால்ய, பழைய நினைவுகளை சொல்லுதல். போன்றவற்றை செய்ய முயற்சியுங்கள்.

4.     முடிந்தவரை பெரியவர்களோடு சிறார்களையும், நீங்களுமே கொஞ்சம் நேரம் செலவழியுங்கள். அதன் வீ ரியம் அளவில்லாதது.

5.     பொருள் தேடுகின்ற, பணத்துக்காக வாழ்கின்ற வாழ்வுமுறைகளிலேயே முழுநேரமும்  மூழ்கி கிடக்காதீர்கள். நேரமும், காலமும் போனால் திரும்பக் கிடைப்பதில்லை என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

வேர்கள் சிறக்க, விழுமியம் காக்கும் வாழ்வினை வாழுங்கள், வாழப் பயிற்றுவிய்யுங்கள்.       

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔