வீழ்தல்

வீழ்தல் :-



சற்றுமுன் அடித்த
மென்காற்றில்
சரீரம் விட்டு
சாய்ந்தவாறே விழுகிறது
உயிர்விட்டு ஓட்டியிருந்த
அந்த ஒற்றை இலை

பற்றினை விடுத்த
பச்சை நொடிகளில்
காற்றின் கைக்குழந்தையாய்
தாலாட்டுதலுக்கு உட்படுதலை
அறிவியலின் எந்தவிதி
அணைக்குமோ தெரியவில்லை

சுழன்று சுற்றி 
தளிர்த்த பூமிநோக்கி
தடம் பெயருகையில்
சுழல்கின்றன
அதன் கழிந்த காலங்கள்
பசுமை இலையாய்

நிலம்தொட எத்தனிக்கையில்
பற்றிப்பிடிக்கும்
நீண்ட சிலந்தி நூல்
பாவங்களின் எச்சம்
அதன் பயணத்தில்

ஒவ்வொரு
உதிர்ந்த இலையிலும்
மரங்களின் வாழ்வு
மாற்ற இயலா
சுயசரிதையாக
   
தரைவிழுந்தும்
தன்மைகுறையாது
உரமாகுதல் உணர்த்தும்
உயர் வாழ்வின் தத்துவம்

வீழ்தல் விதைத்தலாகும். 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔