வாழ்கிறோமா நாம்? -1 (Are We Living? -1) :-




            வெளியில் கிளிகள் கீச்சிட்டதாலும், மனதில் ஏதேதோ கீச்சிட்டதாலும் எழுதுகிறேன்  இந்தப்பதிவை.

            சில பல மனிதர்களோடு நடந்த உரையாடல்கள் வழி     வந்த சிந்தனைகள் இவை.  

            பெரும்பான்மையான சந்திக்கும் நபர்களும், நண்பர்களும் அவர்களது பகிர்தல்களும் எனக்கு "வாழ்கிறோமா நாம்???" என்கிற கேள்வியினை தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிறது பல வழிகளில். சில தினங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடைய தாயார் இறந்துவிட்டார். சென்றிருந்தேன். அத்தருணத்தில் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கையில் தனது தாயாருடன் கடந்த இரண்டு வருடங்களாக பேசவில்லையென்றும், அந்தக் குற்றஉணர்ச்சி கொல்கிறது என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். பேசாததற்க்கு காரணமாக அவர் கூறியது சற்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் இரண்டு வருடங்கள் மிகஅதிகம் என்றே எனக்குத் தோன்றியது. இப்போது அந்த பேசாத தாயார் பேசுவதற்க்கே இல்லாமல் போய்விட்டார். இறுதி வரை நீளும் இந்தக் குற்றஉணர்ச்சியினை எப்படி போக்குவார் நண்பர்?? குற்ற உணர்ச்சியினை விடுவோம். தாயார் எத்தகைய பெரும் தவறினையும் செய்தவாராயிருக்கட்டுமே. சில தினங்கள் கழித்து பேசுவதில் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது. 

      தாயார் முந்தைய தலைமுறை, நம் அளவிற்க்கு மெத்தப் படித்தவர் இல்லை, நமக்கென்ன ஆயிற்று. புத்தகம் படிப்பவர்கள், வெளிநாடு செல்பவர்கள், உலக அறிவு ஏகத்துக்கும் வாய்த்தவர்கள், குறிப்பாக வாழ்க்கையினை வாழ்பவர்கள் என அறிவு முதிர்ச்சி பெற்றவருள் ஒருவர் தாம் என்று பறைசாற்றிகொள்ளும் நண்பருக்கு என்னஆயிற்று??!!! சாகும் தருவாயில் அந்த தாயார் மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்??. எத்தனை ஆசா பாசங்கள், வடிகால்கள் அற்றுத் தேங்கிப்போயிருக்கும் இந்த அர்த்தமற்ற மௌனத்தால். இளையவர்கள் ஏன் இத்தனை மேம்போக்காகவும், வாழ்தல் குறித்த பிரக்கை இன்றியும் திரியவேண்டும்?? கேட்டேவிட்டேன் நண்பரிடம் எனது குமுறல்களை.!! ஒன்றும் சொல்லாது பேரமைதி காத்தார். அநேகமாக அவரது குற்ற உணர்ச்சி வளரத்தொடங்கியிருக்க வேண்டும். இனிமேலாவது இது போன்ற அர்த்தமற்ற மௌனங்களைத் தவிர்க்கமுயலுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். இப்போது என்னோடு பேசாமல் மௌனிக்கிறார்  நண்பர். என்னத்த சொல்ல.

                 இன்னொரு சம்பவம் நெடுநாளைய நண்பர் அவர். கொஞ்சம் மேல்தட்டு வாழ்க்கை வாழ்வதாக நினைத்துக்கொல்பவர்! அடிக்கடி individuality, personal space, identity, that's how i am போன்ற மேல்தட்டு சொல்லாடல்களை நண்பர்களுக்கிடையே எதிர்பார்ப்பவர், திணிப்பவர். கிராமத்து பின்னணியில் வளர்ந்து வந்த எனக்கும் இந்த வார்த்தைகளுக்கும் ஆரம்பத்தில் ஒத்துப்போகவே இல்லை. அப்புறம் பழகிவிட்டது. இன்றும் கூட கொஞ்சம் குழப்பத்திலேயே நான் இந்த மாதிரி மனிதர்களை அணுகுவது உண்டு. சந்தோசங்களுக்கும், துக்கங்களுக்கும் சேர்ந்து பகிர்கின்ற, எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிடுகின்ற கிராமத்துமனதை மேல்தட்டு மனது என எண்ணும் வெள்ளந்திகளில் நானும் ஒருவன். உண்மையிலேயே மேல்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களிடம் கூட நான் இந்த மாதிரி சொல்லாடல்களை, அணுகுமுறைகளை அதிகம் பார்த்ததில்லை நான். நண்பரின் புதுப்பணக்கார தோரணை கொஞ்சம் எரிச்சலூட்டினாலும், அவருக்காய் பரிதாபப்பட்டு நட்பின் கற்பு காக்க அவரையும் கொண்டாடுவோம் நண்பர்கள் நாங்கள். அவரும் மௌனிதான். சின்ன, கொஞ்சம் பெரிய மனஸ்தாபங்களுக்கு எல்லாம் பல மாதம், சில வருடம் பேச மாட்டார். என்னத்த சொல்ல மறுபடியும்.

              வாழ்க்கை என்ன ஆயிர வருடம் நெடியதா?. முதல் இருபது வயது (1-20) என்பது வாழ்வினை புரிந்து கொள்ளவும், இறுதி இருபது வயது (40-60) நோய்களின் பிடியிலும், முதுமையின் பிடியிலும் சிக்கிக்கொள்ள, நாம் உண்மையில் நிறைவாக வாழ முடிகின்ற பருவம் (20-40) இருபது வயது முதல் நாற்பது வயது வரையிலான இந்த வெறும் 7300 நாட்கள் தான். இதுல எதுக்கு இந்த மௌனப் புரட்சியெல்லாம் நண்பர்களே. எல்லோரையும் சேர்த்து வாழ்வோம் நண்பர்களே. வாழ்க்கை வாழ்வதற்கே புரட்சி செய்வதற்கல்ல. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔